ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஸ்ரீ தயா மாதாவிடம் இருந்து சிறப்பு செய்தி

ஜனவரி 2010

அன்புக்குரியவர்களே,

ஹெய்டியில் ஏற்பட்ட பேரழிவுகரமான பூகம்பத்தை நாங்கள் அறிந்ததிலிருந்தே, குருதேவர் பரமஹம்ஸ யோகனந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவின் உறுப்பினர்களைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆழமாகப் பிரார்த்தனை செய்து வருகிறோம், இந்தத் தற்போதைய முயற்சியில் எங்களுடன் சேர உங்களை ஊக்குவிக்கிறோம். ஹெய்டி மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பார்க்க மனம் வருந்துகிறது, மேலும் இந்த துயரத்தின் பின்விளைவுகளைச் சமாளிக்க நம் தொடர்ச்சியான உதவி மிகவும் தேவைப்படும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க பொருள் வளங்கள் மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு மேலெழும் துணிவையும் மீண்டெழும் திறனையும் பெற நம் பிரார்த்தனைகளின் ஆன்மீக ஆதரவும் தேவைப்படும்.தேவைப்படுபவர்களை உயர்த்துவதற்கான—உடல் மற்றும் உணர்வு ரீதியாக குணமடைவதற்கான அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்தவும், இறைவனின் என்றும்-உள்ள உதவிக்கு அவர்களின் ஏற்புத்தன்மையை உயர்த்துவதற்குமான பிரார்த்தனையின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று குருதேவர் நம்மை வலியுறுத்தினார்.

இது போன்ற பேரழிவுகள் வாழ்க்கையின் எப்போதும் நிச்சயமற்ற தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன, மேலும் பலர் கேட்கும் கேள்வி என்னவென்றால், “இறைவன் ஏன் இதை நிகழ அனுமதிக்கிறான்?” நமது கண்ணோட்டம் மிகவும் வரையறைக்குட்பட்டதாக இருப்பதால் நமது மனித அறிவினால் நம்மை முழுமையாக திருப்திபடுத்தும் ஒரு பதிலை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. படைப்பின் பரந்த காட்சிகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நாம் காண்கிறோம்; இறைவன் மட்டுமே முழுவதையும் பார்க்கிறான் மற்றும் நம் எல்லா அனுபவங்களின் ஆழமான நோக்கத்தையும் அறிவான். என்ன நடந்தது என்பதை மனம் புரிந்துகொள்வது மற்றும் இதயம் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும் அந்த சமயங்களில், இந்த கொந்தளிப்பான உலகில் நமக்கு மிகப்பெரிய புகலிடமாகவும் ஆறுதலின் ஆதாரமாகவும் இருக்கும் அவனிடம் நாம் குறிப்பாக திரும்ப வேண்டும். சூழ்நிலைகள் அவன் மீதான நம் நம்பிக்கையை சோதிக்கும் போது கூட, பயம் அல்லது ஊக்கமின்மைக்கு நாம் இடங்கொடுக்க மறுத்தால், எல்லாச் சோதனைகளுக்கும் மேலாக நம்மை உயர்த்தக்கூடிய அவனது எல்லையற்ற அன்பால் நம்மை நாமே இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக, உண்மையில், நாம் இந்தப் பலவீனமான உடல் வடிவம் அல்ல, ஆனால் அழிக்க முடியாத ஆன்மா என்பதை—நமது வாழ்க்கையைப் பராமரிக்கும் அவனிடம் நாம் கட்டுண்டிருந்தால், ஒவ்வொரு சவாலையும் சமாளிக்க நமக்குள் வழிகள் உள்ளன என்பதையும்—உணர்ந்தறிய அவன் நமக்கு உதவுவான்.

இறைவனின் குழந்தைகளாக, நாம் மனிதகுலத்தின் ஒரு பரந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இந்த உலகின் காயங்களைத் தணிக்க உதவும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது, ஏனெனில் நமது ஒட்டுமொத்த எண்ணங்கள் மற்றும் செயல்கள்தான் நமது சொந்த விதியையும் மற்றவர்களின் விதியையும் நல்லவிதமாகவோ அல்லது தீயவிதமாகவோ பாதிக்கின்றன. சுயநலமற்று அக்கறையுடன் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலாலும் கடினமான சூழ்நிலைகளின் தாக்கத்தை குறைக்க நாம் எவ்வளவு செய்ய முடியும் என்பதை பெரும்பாலும் நாம் உணர்ந்தறிவதில்லை. ஹெய்டி மக்கள் மீதான வெள்ளத்தனைய பரிவும் அன்பான அக்கறையும், தேவையிருப்போரைக் குணப்படுத்தவும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், இரக்கமுள்ள இதயங்கள் மூலம் எப்போதும் பணியாற்றி வரும் தெய்வீக சக்திக்கு சாட்சியமளிக்கிறது. இறைவனின் ஒளியையும் அன்பையும் அவர் நம்மை எங்கே வைத்திருந்தாலும், கொடுப்பதற்கும், எல்லா இடங்களிலும் துன்பப்படும் ஆன்மாக்களுக்குத் தொடர்ந்து ஆதரவையும் பிரார்த்தனையையும் வழங்குவதற்கும் உறுதி பூணுவோம். நமது ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம், நாம் இறைவனின் சர்வ-வல்லமையுள்ள சித்தத்துடன் நமது இச்சாசக்தியை ஒன்றிணைக்க முடியும் மற்றும் அவன் நம் அனைவருக்கும் அடைக்கலம் கொடுக்கும் மாபெரும் அன்பை உணர முடியும்.

இறைவன் உங்களை நேசிக்கிறான் மற்றும் ஆசீர்வதிக்கிறான்

ஸ்ரீ தயா மாதா

இதைப் பகிர