நீடித்த மகிழ்ச்சியின் ரகசியங்கள்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துக்களில் இருந்து சில பகுதிகள்

நேர்மறை மனப்பாண்மை

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை இழந்து விட்டால், உற்சாகம் ஆகுங்கள். ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள். உங்கள் ஆன்மாவின் சாராம்சம், என்றும் ஆனந்த மயமான பரம்பொருளின் பிரதிபலிப்பாக இருப்பதால், மகிழ்ச்சியாகும்.

மகிழ்ச்சி என்பது ஓரளவுக்கு வெளிப்புற நிலைமைகளை பொறுத்தது என்றாலும், அது பிரதானமாக மன அணுகு முறைகளையே பொறுத்தது.

அடிப்படையில், நிலைமைகள் நல்லவை அல்லது மோசமானவை என்பதல்ல. அவைகள் எப்போதும் நடுநிலை வகிக்கின்றன. நிலைமைகள் சோகமாகவும் அல்லது ஊக்கம் அளிப்பதாகவும் இருப்பதற்கான காரணம் சம்பந்தப்பட்ட நபரின் மனதில் ஏற்படும் சோகமான அல்லது பிரகாசமான அணுகுமுறையே காரணமாகும்.

உங்கள் சூழ்நிலைகளை மாற்ற விரும்பினால் உங்கள் எண்ணங்களை மாற்றவும். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதால், நீங்கள் மட்டுமே அவற்றை மாற்ற முடியும். ஒவ்வொரு எண்ணமும் அதன் சொந்த இயல்புக்கு ஏற்ப உருவாகிறது என்பதை நீங்கள் உணரும் போது அவற்றை மாற்ற நீங்கள் விரும்புவீர்கள். விதிமுறை எல்லா நேரங்களிலும் செயல்படுகிறது என்பதையும் நீங்கள் வழக்கமாக அனுமதிக்கும் விதவிதமான எண்ணங்களின் படி நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரும் எண்ணங்களை மட்டுமே சிந்திக்க இப்போது தொடங்குங்கள்.

மனித மூளையாக, உணர்வாக, அனைத்து உயிரணுக்களின் புலன் உணர்வாக இருக்கும் மனம், மனித உடலை விழிப்புடன் அல்லது சோர்வுடன் வைத்திருக்க முடியும். மனமே ராஜா மற்றும் அவருடைய குடிமக்களான உயிரணுக்கள் அந்த ராஜாவின் மனநிலைக்கு ஏற்ப சரியாக நடந்து கொள்ளும். நமது அன்றாட உணவு அட்டவணையில் ஊட்டச்சத்து மதிப்பைப் பற்றி நாம் கவலைப் படுவது போலவே, நாம் தினமும் மனதிற்கு சேவை செய்யும் உளவியல் அட்டவணையில் ஊட்டச்சத்து ஆற்றலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Sun rays spread on the sky depicting happiness.தொடர்ந்து நீங்கள் துக்கத்தை உறுதிப்படுத்துகிறீர்கள், எனவே அது உள்ளது. உங்கள் மனதில் அதை மறுக்கவும், அது இனி இருக்காது. ஆன்மாவின் இந்த உறுதியை நான் மனிதனின் ஹீரோ என்று அழைக்கிறேன். அது அவருடைய தெய்வீக அல்லது அத்தியாவசிய இயல்பு. சோகத்தில் இருந்து விடுதலைபெற, மனிதன் தனது அன்றாட நடவடிக்கைகளில் தனது வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க எண்ணவில்லை என்றால், உங்களை யாராலும் மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. அதற்காக கடவுளை குற்றம் சொல்லாதே! நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள் என்றால், யாராலும் உங்களை சோகத்தில்ஆழ்த்த முடியாது. நம்முடைய சொந்த விருப்பத்தை பயன்படுத்த கடவுள் நமக்கு சுதந்திரம் அளிக்க வில்லை என்றால், நாம் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போது அவரை நாம் குற்றம் சாட்டலாம். ஆனால் கடவுள் அந்த சுதந்திரத்தை நமக்கு கொடுத்துள்ளார். எனவே நம் வாழ்க்கையை நாம் தான் உருவாக்குகிறோம்.

வலுவான குணம் உள்ளவர்கள் பொதுவாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்கள் பொதுவாக தங்கள் சொந்த செயல்கள் அல்லது புரிதல் இல்லாமல் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, மற்றவர்களை குற்றம் சாட்ட மாட்டார்கள். மற்றவருடன் பாதகமான எண்ணங்கள் மற்றும் தீய செயல்கள் தங்களை பாதிக்க அனுமதிக்கும் அளவுக்கு அவர்கள் பலவீனமாக இருந்தாலன்றி, தங்கள் மகிழ்ச்சியை கூட்டவோ அல்லது அதிலிருந்து தங்களை விலக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அவர்கள் அறிவார்கள்.

நீங்கள் கற்றுக்கொள்ள ஆசை உள்ளவராகவும் மற்றும் ஒழுங்காக நடந்து கொள்ளவும் எப்போதும் தயாராக இருப்பதில் தான் உங்கள் உயர்ந்த மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் உங்களை எவ்வளவு மேம்படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களை சுற்றியுள்ள மற்றவர்களை உயர்த்துவீர்கள். தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் மனிதன் அதீத மகிழ்ச்சியுடைய மனிதனாகிறான். நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கீறீர்களோ, அவ்வளவு உங்களைச் சுற்றி உள்ள மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

வாழ்க்கைக்கு எதிர்மறையான அணுகுமுறையை தவிர்க்கவும். நம்மைச் சுற்றிலும் அன்பே இருக்கும்போது ஏன் சாக்கடைகளை பார்க்க வேண்டும்? கலை, இசை மற்றும் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் கூட ஒருவர் தவறுகளை காணலாம். ஆனால் அவற்றின் அழகையும், மகிமையையும் அனுபவிப்பதே நன்மை பயப்பதாக இருக்கும் அல்லவா?

ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அந்த மூன்று சிறிய குரங்கு உருவங்கள் சித்தரிக்கும் கருத்து: “தீமையை பார்க்காதே, தீமையை கேட்காதே, தீமையை பேசாதே”. நேர்மறையான அணுகுமுறையை நான் வலியுறுத்துகிறேன்: “நல்லதை பாருங்கள், நல்லதை கேளுங்கள், நல்லதைப் பேசுங்கள்”

எதிர்மறை மனநிலையிலிருந்து சுதந்திரம்

ஆன்மாவில்உள்ளார்ந்து இருக்கும் கடவுளின் என்றும் புதிய ஆனந்தம் அழிக்க முடியாதது. அதுபோல, அந்த ஆனந்தத்தோடு எப்படி ஒன்றி இருப்பது என்று தெரிந்தாலோ மற்றும் ஒருவர் தனது மனநிலையை வேண்டுமென்றே சோக உணர்வை வளர்த்துக் கொண்டு மாற்றாமல் இருந்தாலோ, மனத்தில் நீடித்த ஆனந்தத்தால் ஏற்படும் வெளிப்பாட்டை யாராலும் அழிக்க முடியாது.

Cat depicting ever new joy of God inherent in the soul.

நீங்கள் கடவுளின் உருவம். நீங்கள் கடவுளைப் போல் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? காலை முதலே உங்கள் கோபத்தை இழந்து, “என் காப்பி குளிர்ச்சியாக இருக்கிறது!”, என்று குற்றம் சொல்கிறீர்கள். அது ஏன் அவ்வளவு முக்கியம்? இதுபோன்ற விஷயங்களால் ஏன் பாதிக்கப்படுகிறீர்கள்? எல்லா கோபங்களிலிருந்தும் விடுபட்டு, முற்றிலும் அமைதியான சரிசம மனநிலையைக் கொண்டிருங்கள். அதுதான் உங்களுக்கு வேண்டும். யாரும் எவற்றாலும் “உங்கள் ஆட்டை பெற” அனுமதிக்காதீர்கள். உங்கள் “ஆடு” என்பது உங்கள் அமைதியேயாகும். எதுவும் உங்களிடமிருந்து அதை பறிக்க விடாதீர்கள்.

வாழ்க்கையின் சிறுமை, உங்களை தொந்தரவு செய்யும் சிறிய விஷயங்களிலிருந்து உங்களை உயிர்த்து எழுப்பச் செய்யுங்கள்.

துன்பத்தை யாரும் விரும்புவதில்லை. அடுத்த முறை நீங்கள் அந்த மனநிலையில் இருக்கும்போது உங்களை நீங்களே ஏன் பகுத்து ஆய்வு செய்யக் கூடாது? நீங்கள் எப்படி விருப்பத்துடன், வேண்டும் என்றே உங்களை துயரத்துக்கு உள்ளாக்குகிரீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யும் போது, உங்களை சுற்றியுள்ள மற்றவர்கள் உங்கள் மனநிலையின் விரும்பத்தகாத தன்மையை உணர்கிறார்கள்.

உங்கள் மன நிலைகள் எவ்வளவு பயங்கரமானதாக தோன்றினாலும் அவற்றை நீங்கள் வெல்ல முடியும். நீங்கள் இனி நிலையற்ற மனநிலையுடன் இருக்கப் போவதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். அப்படி உறுதியாக இருந்தும் நீங்கள் நிலையற்ற மன நிலைக்கு ஆளானாள், அதைக் கொண்டு வந்த காரணத்தை ஆராய்ந்து, அவை பற்றிய ஆக்கபூர்வமாக ஏதோ ஒன்றைச் செய்யுங்கள்.

நீங்கள் மகிழ்ச்சியற்று இருக்கும் போது, பொதுவாக வாழ்க்கையில் நீங்கள் சாதிக்க விரும்பும் பெரிய விஷயங்களை நீங்கள் வலுவாக உருவகப்படுத்தவில்லை என்பதாலோ அல்லது உங்கள் கனவுகள் நனவாகும் வரை உங்கள் இச்சாசக்தி, உங்கள் படைப்புத்திறன் மற்றும் உங்கள் பொறுமை ஆகியவற்றை நீங்கள் உறுதியாக பயன்படுத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் சுய முன்னேற்றத்திற்காகவும் மற்றும் மற்றவர்களின் நலனுக்காகவும் ஆக்கபூர்வமான காரியங்களை செய்வதில் மும்முரமாக இருங்கள். ஏனென்றால் கடவுளின் ராஜ்ஜியத்தில் யார் நுழைந்தாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய ஒவ்வொரு நாளும் முயற்சி செய்ய வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் நீங்கள் மனரீதியாக, உடல் ரீதியாக, ஆன்மீக ரீதியாக முன்னேறிவருகிறீர்கள் என்பதை உணர்த்தும் விதமாக எதிர்மறை மனநிலையை விரட்டும் பேரானந்தத்தை உணர்வீர்கள்.

மற்றவர்களுக்கு சேவை

Swans of spiritual understanding.

மகிழ்ச்சி மற்றவர்களை மகிழ்விப்பதில், சுயநலத்தை விட்டு விட்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருவதில் உள்ளது.

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது நம் சொந்த மகிழ்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மிகவும் திருப்திகரமான அனுபவத்தை தரவல்லது. சிலர் தங்கள் சொந்த குடும்பத்தை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். “நாங்கள் நால்வர் மட்டுமே, வேறு யாருமில்லை.” மற்றவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். “நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்?” ஆனால் இவர்கள் தான் மகிழ்ச்சி அடையாத நபர்களாக இருப்பர்!

தங்களுக்காக மட்டுமே வாழ்வது அனைத்து துன்பங்களுக்கும் மூலமாகும்.

மற்றவர்களுக்கான ஆன்மீக, மன மற்றும் பொருள் சார்ந்த சேவையில், உங்கள் சொந்த தேவைகள் பூர்த்தி அடைவதை காண்பீர்கள். மற்றவர்களுக்கு சேவை செய்வதில் நீங்கள் உங்களை மறந்து விடுவதால், அதை தேடாமலேயே உங்கள் கோப்பையும் மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பதை காண்பீர்கள்.

நீங்கள் இந்த உலகத்துக்கு வந்த போது, நீங்கள் அழுதீர்கள், மற்ற அனைவரும் சிரித்தனர். நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்றால், நீங்கள் இறக்கும் போது மற்ற அனைவரும் அழுவார்கள் ஆனால் நீங்கள் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதை போல வாழ வேண்டும்.

மகிழ்ச்சியின் அக சூழ்நிலைகள்

நீங்கள் எவ்வளவு ஆழமாக தியானிக்கிறீர்களோ மற்றும் எவ்வளவு விருப்பத்துடன் சேவை செய்கிறீர்களோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

தியானம் செய்வதன் மூலம் உங்கள் மகிழ்ச்சியின் அனைத்து சூழ்நிலைகளையும் உங்களுக்குள் கொண்டு செல்ல கற்றுக் கொள்ளுங்கள். மற்றும் உங்கள் உணர்வு நிலையை எல்லாம் அறிந்த, எங்கும் உள்ள, என்றும் புதிய ஆனந்தமாய் விளங்கும் கடவுளுடன் ஒத்திசையுங்கள். உங்கள் மகிழ்ச்சி எந்த வெளிப்புற தாக்கத்திற்கும் உட்பட்டதாக இருக்க கூடாது. உங்கள் சூழல் எதுவாக இருந்தாலும், உங்கள் உள் அமைதியை அது தொட அனுமதிக்காதீர்கள்.

உண்மையான மகிழ்ச்சி அனைத்து வெளிப்புற அனுபவங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும். உங்களுக்கு எதிரான, மற்றவர்களின் தவறுகளின் சிலுவையில் நீங்கள் அறையப்படும் போதும், நீங்கள் அன்பையும் மன்னிப்பையும் திரும்பிக் கொடுக்கும் போது; மற்றும் வெளிப்புற சூழ்நிலைகளின் வலிமிகுந்த உந்துதல்கள் இருந்த போதிலும், அந்த தெய்வீக உள்ள அமைதியை நீங்கள் எப்பொழுதும் வைத்திருக்க முடியும் என்றால், இந்த ஆனந்தத்தை நீங்கள் அப்போது அறிவீர்கள்.

ஒவ்வொரு இரவும் குறைந்தது அரை மணி நேரமாவது தியானத்தில் அமைதியாக இருங்கள். நீங்கள் உறங்கச் செல்லும் முன் மிக நீண்ட நேர தியானத்திற்கு முன்னுரிமை கொடுங்கள். மற்றும் மீண்டும் காலையில், அந்நாளின் அன்றாட செயல்பாடு தொடங்கும் முன், தியானம் செய்யுங்கள். இது அன்றாட வாழ்க்கைப் போரில் அனைத்து கடினமான சூழ்நிலைகளையும் சந்திக்க மகிழ்ச்சிக்கான அச்சம் இல்லாத, உடைக்க முடியாத அக பழக்கத்தை உருவாக்கும். அந்த மாற்றமுடியாத மகிழ்ச்சியுடன், உங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முயலுங்கள்.

மகிழ்ச்சிக்காக உங்களுக்கு வெளியே இருக்கும் சூழ்நிலைகளை நீங்கள் எவ்வளவு அதிகமாக சார்ந்து இருக்கிறீர்களோ, அவ்வளவு குறைவான மகிழ்ச்சியையே நீங்கள் அனுபவிப்பீர்கள்.

கடவுளை மறப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள், ஏனென்றால் கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள ஒரே உண்மை என்பதை நீங்கள் உணரும் வரை நீங்கள் மீண்டும் மீண்டும் தனிமையில் அழுவீர்கள். நீங்கள் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருகிறீர்கள். கடவுளைத் தவிர வேறு எதுவும் முழுமையற்றது என்பதால் நீங்கள் எந்த விஷயத்திலும் நிலையான மகிழ்ச்சியை காண முடியாது.

இறைவனுடன் தொடர்பு கொள்வதில் நான் காணும் கலப்படம் அற்ற மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இரவும் பகலும் நான் ஆனந்தமான நிலையில் இருக்கிறேன். அந்த ஆனந்தமே கடவுள். அவரை அறிந்து கொள்வது என்பது உங்கள் எல்லா துன்பங்களுக்கும் இறுதி சடங்குகளை செய்வதாகும். கடவுள் உங்களை உணர்ச்சியற்ற மற்றும் மிகவும் துக்ககரமான மனநிலையில் இருக்க சொல்லவில்லை. இது கடவுளின் சரியான கருத்தும் அல்ல அல்லது அவரை மகிழ்விக்கும் வழியும் அல்ல. மகிழ்ச்சியாக இல்லாமல் உங்களால் அவரை உணரக் கூட முடியாது… அவரை அறிந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஏனென்றால் கடவுள் ஆனந்தமே ஆகும்.

உறுதி மொழிகள்

உறுதி மொழி கோட்பாடு மற்றும் அறிவுறுத்தல்கள்

விடியற்காலையில் தொடங்கி, இன்று நான் சந்திக்கும் அனைவருக்கும் என் உற்சாகத்தை வெளிப்படுத்துவேன். இந்த நாளில் என் பாதையை கடக்கும் அனைவருக்கும் நான் அக சூரிய ஒளியாக இருப்பேன்.

எல்லா இடங்களிலும் உள்ள நல்லவற்றை பார்ப்பதன் மூலமும், கடவுளின் சரியான யோசனையாக எல்லாவற்றையும் காண்பதன் மூலமும் நான் புதிய சிந்தனை பழக்கத்தை உருவாக்குகிறேன்.

இன்று நான் இருக்கும் இடத்தில், எனக்குள் மகிழ்ச்சியாக இருக்க நான் என் மனதில் முடிவு செய்துள்ளேன்.

மேலும் படிப்பதற்கு

இதைப் பகிர