பரமஹம்ஸ யோகானந்தரின் உரைகள் மற்றும் படைப்புக்களில் இருந்து நுண்ணறிவுத்திறம் மற்றும் வழிகாட்டுதல்

உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வுக்கும் இறைவனை அணுகுங்கள். திடீரென்றுவரும் பனிச்சரிவு போல் பெரும் துன்பங்கள் உங்களைத் தாக்கும் போது, உங்கள் தைரியமும், உயிர்த்துடிப்பான கூரறிவும் செயலிழந்துவிட அனுமதிக்காதீர்கள். உங்கள் உள்ளுணர்வுடன் கூடிய நல்லறிவையும் இறைவன் மீது உங்கள் நம்பிக்கையையும் விழிப்புடன் வைத்திருந்து, தப்பிப்பதற்கான மிகநுண்ணிய வழியைக் கூட கண்டுபிடிக்க முயற்சி செய்யும்போது, அந்த வழியை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். எல்லாமே இறுதியில் சரியானதாக வெளிப்படும், ஏனென்றால் மனித அனுபவங்களினுடைய முரண்பாடுகளின் மேலோட்டமான தன்மைக்குப் பின்னால் இறைவன் தனது நன்மையை மறைத்து வைத்திருக்கிறார்..

— ஒயின் ஆஃப் தி மிஸ்டிக்

பரமஹம்ஸ-யோகானந்தரின்-கடைசி புன்னகை

எதற்கும் அஞ்ச வேண்டாம். புயலில் ஒரு அலையின் மீது வீசப்படும் போதும் கூட, நீங்கள் இன்னும் கடலின் மேற்பரப்பில் இருக்கிறீர்கள். இறைவனின் மூலாதாரமான இருப்பு குறித்த உணர்வுநிலையை எப்போதும் இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள். நிதானமாக இருங்கள்: “நான் அச்சமற்றவன்; நான் இறைவனின் பொருளால் படைக்கப்பட்டவன். நான் பரம்பொருளான நெருப்பின் தீப்பொறி. நான் பேரண்ட ஒளிப்பிழம்பின் ஓர் அணு. நான் தெய்வத்தந்தையின் பரந்த பிரபஞ்ச உடலின் ஓர் உயிரணு.‘நானும் என் தந்தையும் ஒன்றே எனக் கூறுங்கள்”.

உண்மையான சுதந்திரம் இறைவனிடம் மட்டுமே உள்ளது. எனவே காலையிலும் இரவிலும் தியானத்தில் அவரைத் தொடர்பு கொள்ள ஆழ்ந்து கடுமுயற்சி செய்யுங்கள்.… இறைவன் இருக்குமிடத்தில் பயம் இல்லை, துக்கம் இல்லை என்று யோகா கற்பிக்கிறது. வெற்றிகரமான யோகியால் உலகங்களைத் தகர்க்கும் மோதலின் நடுவிலும் அசையாமல் நிற்க முடியும்.

— பரமஹம்ஸ யோகானந்தர்.

இறைவன் ஆரோக்கியம், வளமை, ஞானம் மற்றும் சாசுவதமான ஆனந்தத்தின் ஊற்று. இறைவனுடன் தொடர்பு கொள்வதன் மூலம் நம் வாழ்க்கையை முழுமையாக்குகிறோம். அவனன்றி, வாழ்க்கை முழுமையடையாது. உங்களுக்கு வாழ்வையும் வலிமையையும் ஞானத்தையும் அளித்துக் கொண்டிருக்கிற சர்வவல்லமையுள்ள பேராற்றலிடம் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். இடையறாத உண்மை உங்கள் மனதிற்குள் பாயவும், இடைவிடாத வலிமை உங்கள் உடலில் பாயவும், இடைவிடாத மகிழ்ச்சி உங்கள் ஆன்மாவில் பாயவும் பிரார்த்தனை செய்யுங்கள். மூடிய கண்களின் இருளுக்குப் பின்னால் பிரபஞ்சத்தின் அற்புதமான சக்திகளும் அனைத்து பெரிய மகான்களும் அத்துடன் எல்லையற்ற பரம்பொருளின் முடிவற்ற தன்மையும் உள்ளது. தியானம் செய்யுங்கள், நீங்கள் எங்கும் நிறைந்த முழுமுதல் மெய்ம்மையை உணர்ந்தறிந்து, உங்கள் வாழ்க்கையிலும் படைப்பின் அனைத்து மகிமைகளிலும் அதன் மர்மமான செயல்பாடுகளைப் பார்ப்பீர்கள்.

— ஆன்ம அனுபூதிக்கான பயணம்

உங்களுக்குத் தெரியுமானால், நீங்கள் அனைவரும் கடவுள்களே. உங்கள் உணர்வுநிலை எனும் அலைக்குப் பின்னால் இறைவனது இருப்பு எனும் கடல் உள்ளது. நீங்கள் அகத்தே நோக்க வேண்டும். உங்களது கவனத்தை பலவீனங்களுடனான உடலெனும் சிறிய அலையின்மீது செலுத்தாதீர்கள்; உடலைத்தாண்டி அகத்தே கவனியுங்கள். உங்கள் கண்களை மூடிநீங்கள் பார்க்கும் எல்லா இடங்களிலும் உங்கள் முன் பரந்தகன்ற சர்வ வியாபகத்தன்மையினை நீங்கள் காணுங்கள். நீங்கள் அந்தக் கோளத்தின் மையத்தில் இருக்கின்றீர்கள். மேலும் உடலிலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும் உங்கள் உணர்வு நிலையை நீங்கள் உயர்த்துகிற பொழுது, அந்தக் கோளமானது நட்சத்திரங்களுக்கு ஒளியூட்டி, காற்றுகளுக்கும் புயல்களுக்கும் சக்தி அளிக்கின்ற மகத்தான மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தால் நிரப்பப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். நமது அனைத்து மகிழ்ச்சிகளுக்கும், இயற்கையில் உள்ள அனைத்து உருவெளிப்பாடுகளுக்கும் இறைவன்தான் மூலாதாரம்....

அறியாமை என்னும் இருளில் இருந்து உங்களை விழித்தெழச் செய்யுங்கள். நீங்கள் மாயையின் உறக்கத்தில் கண்களை மூடியிருக்கிறீர்கள். விழித்தெழுங்கள்! உங்களது கண்களைத் திறவுங்கள், அனைத்து பொருட்களின் மீதும் பரவியிருக்கின்ற இறையொளியின் பரந்தகன்ற அழகிய காட்சியை – இறைவனது மகிமையை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் தெய்வீக மெய்யியல்புடையவர்களாக இருக்க வேண்டும் என நான் கூறுகிறேன். பின்னர் இறைவனிடத்தில் அனைத்து கேள்விகளுக்குமான பதிலை நீங்கள் காண்பீர்கள்.

— தெய்வீகக் காதல்

தங்களுக்கு மட்டுமே வளத்தைத் தேடுபவர்கள் இறுதியில் ஏழைகளாக மாறாவோ அல்லது மனநலமின்மையால் பாதிக்கப்படவோ தளைப்படுத்தப் படுகிறார்கள்; ஆனால் உலகம் முழுவதையும் தங்கள் வீடாகக் கருதுபவர்களும் குழு அல்லது உலக செழிப்புக்காக உண்மையிலேயே அக்கறை கொண்டு பணியாற்றுபவர்களும், சூட்சும சக்திகளை தூண்டுகிறார்கள், அவை இறுதியில் அவர்கள் தங்களுக்குச் சொந்தமான தனிப்பட்ட செழிப்பைக் கண்டறியக்கூடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன. இது நிச்சயமான மற்றும் இரகசியமான சட்டம்.

— - யோகதா சத்சங்க பாடங்கள்

இந்த உலகத்தில் எப்போதும் குழப்பமும், பிரச்சனையும் இருக்கும். நீங்கள் எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள்? குருமார்கள் சென்றிருக்கும் இடமான இறைவனது புகலிடத்துக்குச் செல்லுங்கள், அவர்கள் உலகைக் கவனித்து உதவிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்றென்றும் பாதுகாப்பாக இருப்பீர்கள். உங்களுக்காக மட்டுமல்ல, தெய்வத்தந்தையான நமது இறைவனால் உங்கள் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்ட அனைத்து அன்பானவர்களுக்காகவும் நீங்கள் என்றென்றும் பாதுகாப்புடன் இருப்பீர்கள்.

— யோகதா சத்சங்க பாடங்கள்

இறைவனை உங்கள் ஆன்மாவின் வழிகாட்டியாக ஆக்குங்கள். நீங்கள் வாழ்க்கையில் இருண்ட வழித்தடத்தின் வழியே செல்லும்போது, அவனை உங்கள் ஒளிக்கற்றையாக ஆக்குங்கள். அறியாமை எனும் இரவில் அவன் உங்களுடைய நிலவு. விழித்திருக்கும் நேரங்களில் அவன் உங்கள் சூரியன். அழியும் வாழ்க்கை எனும் இருண்ட கடலில் அவன் உங்களுடைய துருவ நட்சத்திரம். அவனுடைய வழிகாட்டுதலை நாடுங்கள். இவ்வுலகு அதன் ஏற்ற இறக்கங்களில் இது போன்றுதான் சென்று கொண்டிருக்கும்.. வழிகாட்டும் உணர்வை நாம் எங்கே தேடுவது? நமது பழக்கங்கள், மற்றும் நமது குடும்பங்கள், நம் நாடு அல்லது உலகம் ஆகியவற்றின் சூழ்நிலைத் தாக்கங்கள் போன்றவைகளால் நமக்குள்ளே எழுப்பப்படும் பாரபட்சமான எண்ணங்களில் அல்ல; மாறாக அகத்தே உள்ள மெய்ம்மையின் வழிகாட்டும் குரலிடம் செல்லுங்கள்...

— தெய்வீகக் காதல்

மனத்தின் லட்சக்கணக்கான நியாயவாதங்களை விட ,அமர்ந்து,அகத்தே நீங்கள் அமைதியை உணரும்வரை இறைவன் மேல் தியானம் செய்வது சாலச் சிறந்ததென்பதை நினைவில் கொள்ளுங்கள். பிறகு இறைவனிடம் கூறுங்கள், “நான் கணக்கிலடங்கா வேறுபட்ட எண்ணங்களைச் சிந்தித்தாலும், என்னால் எனது பிரச்சனையை தனியாகத் தீர்க்க முடியவில்லை; ஆனால் அதை நான் உன் திருக்கரங்களில் வைத்து, முதலில் உன் வழிகாட்டுதலை வேண்டி, பின் அதன் தொடர்ச்சியாக ஒரு சாத்தியமான தீர்விற்கு பல கோணங்களில் சிந்திப்பதன் மூலம் என்னால் தீர்க்க முடியும்.” இறைவன் தனக்குத்தானே உதவி செய்து செய்து கொள்பவர்களுக்கு நிச்சயம் உதவி செய்கிறார். தியானத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்த பிறகு உங்கள் மனம் அமைதியாகவும் நம்பிக்கையினால் நிரப்பப்பட்டும் இருக்கும்போது, உங்களது பிரச்சனைக்கு பலவிதமான விடைகளை உங்களால் காணமுடிகிறது; மற்றும் உங்கள் மனம் அமைதியாக உள்ளதால், மிகச்சிறந்த தீர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் வல்லமையுடையவராகிறீர்கள். அந்த தீர்வைப் பின்பற்றுங்கள், நீங்கள் வெற்றியைச் சந்திப்பீர்கள். இது உங்கள் தினசரி வாழ்வில் மதத்தின் விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதாகும்.

— தெய்வீகக் காதல்

பயம் இதயத்திலிருந்து வருகிறது.எப்பொழுதாவது நீங்கள் ஏதேனும் நோய் அல்லது விபத்து ஏற்படும் என்ற பயத்தால் முற்றிலும் ஆட்பட்டவராக உணர்ந்தால், ஒவ்வொரு வெளிமூச்சின் போதும், தளர்வு செய்தபடி பல முறை ஆழமாகவும், மெதுவாகவும் லயத்துடனும் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இது இரத்த ஓட்டத்தை இயல்பாக்க உதவுகிறது. உங்கள் இதயம் உண்மையிலேயே அமைதியாக இருந்தால், நீங்கள் ஒருபோதும் பயத்தை உணர முடியாது.

— அச்சமின்றி வாழ்தல்

எதைப்பற்றி நீங்கள் பயங்கொண்டாலும், உங்கள் மனத்தை அதில் இருந்து அகற்றி, அதை இறைவனிடம் விட்டு விடுங்கள். அவனிடத்தில் நம்பிக்கையுடன் இருங்கள். மிகுதியான துன்பம் வெறும் கவலையினால் மட்டுமே ஏற்படுகிறது. வியாதி இன்னும் வராமல் இருக்கின்றது; இப்பொழுதே நாம் ஏன் துக்கப் படவேண்டும்? நமக்கு ஏற்படும் நோய்களில் அதிகமானவை அச்சத்தினால் ஏற்படுகின்றன; ஆகையால் நீங்கள் அச்சத்தைக் கைவிட்டால், அக்கணமே விடுதலை பெறுவீர்கள். குணமாதல் உடனடியாக நிகழும். ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன்பு உறுதிப்படுத்திக் கூறுங்கள்: “தெய்வீகத் தந்தை என்னுடன் உள்ளார். நான் பாதுகாக்கப்படுகின்றேன்.” உங்களை பரமாத்மாவினாலும், அவனுடைய பிரபஞ்ச சக்தியாலும் மானசீகமாக சூழவைத்துக் கொள்ளுங்கள். மூன்று முறை “ஓம்” அல்லது “இறைவா” என்ற வார்த்தையை உச்சரியங்கள். இது உங்களுக்குக் கவசமாக இருக்கும். இறைவனின் அற்புதமான பாதுகாப்பபை நீங்கள் உணர்வீர்கள். அச்சமற்று இருங்கள்....

நீங்கள் பயத்தை உணரும் பொழுதெல்லாம், உங்கள் கையை இதயத்தின் மேல் தோலுக்கருகில் வைத்து, இடமிருந்து வலமாகத் தேய்த்துவிட்டுக் கூறுங்கள், "எந்தையே, நான் சுதந்திரமானவன். எனது இதய- வானொலியில் இருந்து இந்த பயத்தை அகற்றி அருளுக." நீங்கள் சாதாரணமான ஒரு வானொலிப் பெட்டியில் ஏற்படும் இரைச்சலை நீக்குவதைப் போன்று, உங்கள் இதயத்தை இடமிருந்து வலமாகத் தொடர்ந்து தேய்த்து, அச்சத்தை உங்கள் இதயத்திலிருந்து விலக்க விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தின் மீது தொடர்ந்து மனதை ஒருமுகப் படுத்தினால், அது போய்விடும்; அத்துடன் இறைவனின் பேரானந்தமும் உணரப்படும்.

— மனிதனின் நிரந்தரத் தேடல்

இயந்திரத் துப்பாக்கிகள், மின்சாரம், விஷவாயு அல்லது எந்த மருந்தை விடவும் சக்தி வாய்ந்த மனது எனும் ஒரு மிகப்பெரிய பாதுகாப்புக் கருவியை இறைவன் நமக்குக் கொடுத்துள்ளார். மனதைத் திடப்படுத்த வேண்டும்....வாழ்க்கை சாகசத்தின் ஒரு முக்கியப் பகுதி, மனதைக் கைப்பற்றுவதும், அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட மனதைத் தொடர்ந்து இறைவனிடம் இணக்கத்தில் வைப்பதும் ஆகும். மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்வின் ரகசியம் இதுதான்...இது மன ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலமும், தியானத்தின் மூலம் மனதைக் இறைவனுடன் இணைத்துக்கொள்வதன் மூலமும் வருகிறது....நோய், ஏமாற்றங்கள், பேரழிவுகள் போன்றவற்றைக் கடக்க எளிதான வழி, இறைவனுடன் இடைவிடாது இணக்கத்தில் இருப்பது தான். சந்தோஷமான, வெற்றியுடன் கூடிய வாழ்க்கையின் ரகசியம் இதுவே. –

— மனிதனின் நிரந்தரத் தேடல்

உண்மையான இன்பம், நீடித்த இன்பம் இறைவனிடம் மட்டுமே இருக்கின்றது. "அவனைப் பெற்றிருந்தால் வேறு எந்தப் பேறும் பெரியதல்ல." அவனிடம் மட்டுமே ஒன்றேயான பாதுகாப்பு, ஒன்றேயான புகலிடம் மற்றும் நமது அனைத்து அச்சங்களில் இருந்தும் ஒன்றேயான விடுதலை. உங்களுக்கு இவ்வுலகில் வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை. வேறு எந்த சுதந்திரமும் இல்லை. ஒரே உண்மையான சுதந்திரம் இறைவனிடம் உள்ளது. எனவே, காலை மற்றும் இரவு தியானத்திலும், அத்துடன் நாள் முழுவதும் நீங்கள் ஆற்றும் எல்லா பணி மற்றும் கடமைகளிலும் அவனுடன் தொடர்பு கொள்ள ஆழமாக முயற்சி செய்யுங்கள். இறைவன் இருக்கும் இடத்தில் பயம் இல்லை, துயரமில்லை என்று யோகக்கலை போதிக்கின்றது. வெற்றிகண்ட யோகியால் தகர்ந்து கொண்டிருக்கும் உலகங்களின் பேரொளியின் நடுவில் நிலை குலையாமல் நிற்க முடியும்: "இறைவா நான் எங்கு இருக்கிறேனோ, அங்கே நீ வர வேண்டும்." என்ற ஞான உணர்வில் அவர் நிச்சயமாக இருக்கின்றார்.

— தெய்வீகக் காதல்

பேரான்மாக்களின் கூட்டிணைவுக் குழுவிற்காகவும் ஐக்கிய உலகத்திற்காகவும் நம் இதயங்களில் பிரார்த்தனை செய்வோம். இனம், மதம், நிறம், வர்க்கம் மற்றும் அரசியல் ரீதியான தப்பெண்ணங்களால் நாம் பிளவுபட்டிருப்பதாகத் தோன்றினாலும், ஒரே இறைவனின் குழந்தைகளாக நாம் நம் ஆன்மங்களில் சகோதரத்துவத்தையும் உலக ஒற்றுமையையும் உணர முடிகிறது. மனிதனின் அறிவொளி பெற்ற மனசாட்சியின் வாயிலாக இறைவனால் வழிநடத்தப்படுகிற, ஒவ்வொரு தேசமும் பயனுள்ள பகுதியாக விளங்கும் ஐக்கிய உலகத்தை உருவாக்க நாம் செயல்படுவோமாக. நம் இதயங்களில் நாம் அனைவரும் வெறுப்பு மற்றும் சுயநலம் ஆகியவற்றிலிருந்து விடுபட கற்றுக் கொள்ளமுடியும். நியாயமான ஒரு புதிய நாகரீகத்தின் வாயில் வழியாக நாடுகள் கைகோர்த்து அணிவகுத்துச் செல்லும் வகையில், நாடுகளிடையேயான நல்லிணக்கத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம்.

— பரதத்துவ தியானங்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக, தியானத்தின் மூலம் இறைவனத் தேடுவதில் நீங்கள் மும்முரமாக இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.... இந்த வாழ்க்கையின் நிழல்களுக்குக் கீழே அவருடைய அற்புதமான பேரொளி இருக்கிறது. பிரபஞ்சம் அவருடைய பிரசன்னத்தின் ஒரு பரந்தகன்ற ஆலயம். நீங்கள் தியானிக்கும்போது, எல்லா இடங்களிலும் அவனிடம் செல்வதற்கான திறந்த கதவுகளை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவனுடன் தொடர்பைப் பெற்றிருக்கும்போது, உலகின் அனைத்து அழிவுகளாலும் அந்த பேரானந்தத்தையும் பேரமைதியையும் பறித்துச் செல்ல முடியாது.

— உலக நெருக்கடி

இதைப் பகிர