அச்சம், வருத்தம், கவலை ஆகியவற்றை வெற்றி கொள்ளுதல்

பரமஹம்ஸ யோகானந்தரின் எழுத்துகளில் இருந்து சில பகுதிகள்:

கிருஷ்ணரும் அர்ஜுனனும் அங்கு சங்கு ஊதுகிறார்கள்

வாழ்க்கைப் போர்க்களத்தில், ஒவ்வொரு மனிதரையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒரு மாவீரனின் துணிச்சலுடன், ஒரு வெற்றியாளரின் புன்முறுவலுடன் எதிர்கொள்ளுங்கள்.

நீ இறைவனின் குழந்தை. நீ எதற்காக அச்சம் கொள்ள வேண்டும்?

தோல்வி அல்லது நோய் பற்றிய எண்ணங்கள் விழிப்புணர்வு மனத்தில் விதைக்கப்பட்ட பிறகுதான் அவை வளர்ந்து, ஆழ்மனத்திலும் பின்னர் உயர் உணர்வு நிலையிலும் வேரூன்றுகின்றன. அதன்பின் உயர் உணர்விலும் ஆழ்மனதிலும் வேர்கொண்ட அச்சம், முளைத்து அச்சம் எனும் செடிகளால் விழிப்புணர்வு மனத்தை நிறைவித்துவிடுகிறது. உயிரைக் கொல்லும் நச்சுக்கனிகளைத் தரும் இச்செடிகளை அளிப்பது, மூலமுதற் காரணமான எண்ணத்தை அழிப்பதை விட மிகவும் கடினமானது…..

துணிவில் மனத்தை தீவிரமாக குவித்தும், உங்களது கவனத்தை அகத்தே உள்ள இறைவனின் நிறை அமைதிக்கு இட மாற்றம் செய்தும், இச்செடிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியுங்கள்.

நீங்கள் எதைப்பற்றி பயப்படுகிறீர்களோ அதை உங்கள் மனதிலிருந்து அகற்றி, இறைவனிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவன் மீது நம்பிக்கை வையுங்கள். பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம் கவலைதான். அந்தத் துன்பம் நிகழாத வரை அது குறித்து இப்போதே கவலை கொள்வது ஏன்? பெரும்பாலான துயரங்களுக்கு அச்சமே காரணமாவதால் அச்சத்தை உதறி விடும் போது, நீங்கள் உடனடியாகச் சுதந்திரம் அடைவீர்கள். குணமடைதல் அந்தக் கணத்திலேயே நிகழும். ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்: “தெய்வீகத் தந்தை என்னுடன் இருக்கிறார்; நான் பாதுகாப்பாக உள்ளேன்.” பரம்பொருள் உங்களைச் சுற்றி சூழ்ந்து உள்ளதாக மனத்தில் எண்ணுங்கள். . . . . அவனது உன்னதமான பாதுகாப்பை நீங்கள் உணர்வீர்கள்.

உணர்வு நிலையை இறைவனில் நிலைபெறச் செய்யும் போது உங்களுக்கு அச்சம் ஏற்படாது. எந்த ஒரு துன்பத்தையும் துணிவு மற்றும் நம்பிக்கையால் வென்று விட முடியும்.

அச்சம் இதயத்தில் இருந்து வருவது. ஒரு நோய் அல்லது விபத்து ஏற்படும் என்ற அச்சம் உங்களைப் பற்றிக் கொண்டால், நீங்கள் பல முறை, ஆழமாக, மெதுவாக, ஒரே சீரான லயத்தோடு, மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். ஒவ்வொரு முறை வெளியேற்றும் போதும் ஓய்வெடுங்கள். இது இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உங்கள் இதயம் உண்மையிலேயே அமைதியாக இருக்குமானால், உங்களால் பயத்தை உணரவே முடியாது.

உடலை தளர்வாக்கும் உத்தி

இச்சா சக்தியால் உடலை இறுக்குதல்: உயிர் ஆற்றல் உங்கள் உடலின் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமோ அங்கு செல்லுமாறு, இச்சா சக்தியின் மூலம்            அவ்வுயிராற்றலுக்கு ஆணையிடுங்கள். (இறுக்குதல் என்ற செயல் மூலம்). சக்தியூட்டியும், புதுப்பித்தும் அந்த ஆற்றல், அந்த இடத்தில் துடிப்பதை உணருங்கள். இறுக்கமற்ற நிலையில் உணருங்கள்: இறுக்கத்தைத் தளர்த்தி, இதமான சக்தியூட்டலை, புதுப்பித்தலை அந்தப் பகுதியில் உணருங்கள். நீங்கள் உடல் அல்ல என்பதை உணருங்கள்; உடலுக்கு உரமூட்டும் உயிர் சக்தியே நீங்கள். இந்தப் பயிற்சி தரும் அமைதியால் கிட்டும் சாந்தம், சுதந்திரம், மேம்பட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை உணருங்கள்.

என்னிடம் பலர் தமது கவலைகளைப் பற்றி பேசுவதற்காக வருகிறார்கள். நான் அவர்களை, அமைதியாக அமர்ந்து தியானிக்கவும், பிரார்த்தனை செய்யவும் சொல்கிறேன். அகத்தே அமைதியை உணர்ந்த பின், பிரச்சனைக்குத் தீர்வு காணும் மாற்று வழிகள் அல்லது அவற்றை முற்றாக ஒழித்து விடுவதற்கான வழிகளைச் சிந்திக்கச் சொல்கிறேன். மனம் இறைவனில் அமைதி காணும் போது, இறைவன் மீதான நம்பிக்கை வலுப்பெறும்போது, பிரச்சனைகளுக்கான தீர்வு அவர்களுக்குக் கிட்டுகிறது. பிரச்சனைகளைத் தவிர்ப்பதால் அவற்றுக்கான தீர்வு கிடைத்து விடாது. அவற்றைப் பற்றி கவலைப் பட்டாலும் தீர்வு கிட்டாது. நீங்கள் அமைதியாகும் வரை தியானம் செய்யுங்கள். அதன் பின் உங்கள் மனத்தை பிரச்சனையின் மீது செலுத்தி உதவி செய்யுமாறு இறைவனிடம் ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். பிரச்சனை மீது கவனத்தைக் குவியுங்கள். அப்போது கவலைப்படுவதற்கான தேவையின்றியே தீர்வு கிடைத்துவிடும்….

மனம் சொல்லும் ஒரு ஆயிரம் காரணங்களை விட, பெரிதும் உயர்வானது, இறைவனை எண்ணி தியானித்து, அடைவது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பின் பெருமானிடம் கூறுங்கள், “நான் கோடிக்கணக்கான பல்வேறு வழிகளைச் சிந்தித்தாலும், எனது பிரச்சனைக்கு என்னால் தனியாகத் தீர்வு காண இயலவில்லை. ஆனால் உனது கைகளில் பிரச்சனையை ஒப்படைத்துவிட்டு, உன் வழிகாட்டுதலை முதலில் வேண்டுவேன். அதன்பின் பிரச்சினையை தீர்ப்பதற்கான பல்வேறு கோணங்களை சிந்திப்பேன். அப்போது எனது பிரச்சினைக்கான தீர்வு கிட்டும்.” தமக்குத்தாமே உதவி செய்து கொள்பவர்களுக்கு இறைவன் உதவுகிறான். இறைவனிடம் பிரார்த்தனை செய்த பின் உங்கள் மனம் அமைதியாகவும் நம்பிக்கையால் நிறைந்தும் இருக்கும் போது, பிரச்சனைக்கான பல்வேறு பதில்களை உங்களால் காண முடியும். உங்கள் மனம் அமைதியாக இருப்பதால், அப்பதில்களில் ஒன்றை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். அந்தத் தீர்வை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு வெற்றி கிட்டும். இதுவே உங்களது அன்றாட வாழ்க்கையில் சமய அறிவியலை பயன்படுத்தும் முறையாகும்.

நமக்கு எவ்வளவு தான் வேலை பளு இருந்தாலும், நம் மனத்தை அவ்வப்போது கடமைகள் மற்றும் கவலைகளிலிருந்து முழுமையாக விடுவித்துக் கொள்ள வேண்டும். . . . மனத்தை அகத்தே உள்ள அமைதியில் பதித்து, எதிர்மறையாகச் சிந்திக்காமல் ஒரே ஒரு நிமிடம் இருங்கள். குறிப்பாக கவலையற்று இருக்கும்போது இதைச் செய்யுங்கள். அதன் பின் பல நிமிடங்கள் அமைதியான மன நிலையில் இருக்க முயலுங்கள். அதைத் தொடர்ந்து, மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியைப் பற்றி எண்ணத்தை ஓட விடுங்கள். அதில் தங்கி அதை கண் முன் கொண்டு வாருங்கள்; உங்கள் கவலைகளை முற்றாக மறக்கும் வரை மீண்டும் மீண்டும் இனிமையான அனுபவங்களில் மனப்பயணம் செய்யுங்கள்.

எண்ணம், சொல், உணர்வு, செயல் ஆகிய அனைத்திற்குமான ஆற்றல் இறைவனிடமிருந்துதான் வருகின்றது. நமக்கு ஊக்கமளித்துக் கொண்டும், வழிகாட்டிக்கொண்டும், அவன் எப்போதும் நம்முடன் இருக்கிறான் என்ற புரிதல் ஏற்படும்போது, நமது மன அழுத்தத்திலிருந்து உடனடியாக விடுதலை கிடைக்கின்றது. இந்தப் புரிதலுடன் இணைந்து தெய்வீக இன்பத்தின் சில ஒளிக்கீற்றுகள் தோன்றலாகும்; சில சமயங்களில் ஒருவரது இருப்பை ஒரு பேரொளி சூழ்ந்து கொண்டு, அச்சம் என்ற எண்ணத்தையே அடியோடு அழித்துவிடும். இறைவனின் பேராற்றல் ஒரு சமுத்திரத்தைப் போல பெருகி, தூய்மையாக்கும் வெள்ளமாக இதயத்தின் ஊடாக பாய்ந்து, மயக்கத்தில் ஆழ்த்தும் அனேக சந்தேகத் தடைகளையும், அழுத்தங்களையும், அச்சங்களையும் நீக்குகின்றது. உலகியல் மாயை, அழியும் உடலே நாம் என்ற உணர்வு, ஆகியவை அன்றாட தியானத்தில் கிட்டும் பரம்பொருளின் இனிய அமைதியைத் தொட்டதில் மறைந்துவிடும். அதன்பின் உடல் என்பது இறைவனது பிரபஞ்சக் கடலில் ஒரு சிறு நீர்க்குமிழி என்பது புரிந்துவிடும்.

இறைவனை அடைவதற்கு ஓர் உன்னதமான முயற்சியில் ஈடுபடுங்கள். நான் நடைமுறை சாத்தியமான உண்மையைக் கூறுகின்றேன், செயல்படுத்தக்கூடிய வகையில்; புண்பட்ட உணர்வுகளை அகற்றிவிடக்கூடிய ஒரு தத்துவத்தைத் தருகின்றேன். எதற்கும் அஞ்ச வேண்டாம். . . . . ஆழமாகவும் உண்மையாகவும் தியானம் செய்யுங்கள். ஒரு நாள் நீங்கள் இறைப் பேரின்பத்தில் விழித்தெழுந்து, மக்கள் தாம் துன்பப்படுவதாக எவ்வளவு முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பீர்கள். நீங்களும், நானும், அவர்களும் மாசுமறுவற்ற பரமாத்மாவே.

உறுதிமொழி

உறுமொழிக் கோட்பாடு மற்றும் வழிகாட்டுதல்கள்.

“நான் இறுக்கங்களை நீக்கி, என் மனச்சுமைகளை உதறிவிடுகிறேன். இறைவன் என் மூலமாக தனது முழுமையான அன்பு, அமைதி, அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்த அனுமதிக்கிறேன்.”

“” எங்கும் நிறைந்த என் பாதுகாப்பே! போர் மேகங்கள் வாயுக்கள் மற்றும் அக்னி மழைகளை அனுப்பும்போது, நீ எங்களின் பதுங்கு குழியாக இருப்பாயாக.”

“வாழ்விலும் சாவிலும், நோயிலும் பஞ்சத்திலும், பெருந்தொற்றிலும் ஏழ்மையிலும் நான் உன்னையே பற்றிக் கொள்வேனாக. நான் வாலிபம், இளமை, முதுமை மற்றும் உலகத்தின் ஏற்ற இறக்கங்களால் தீண்டப்படாத அழிவற்ற ஆன்மா என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு உதவுவாயாக.”

மேலும் கற்பதற்கு

இதைப் பகிர