கிறிஸ்துமஸ் 2013

“எல்லையற்ற குழந்தை கிறிஸ்துவை வைத்திருக்க முடியும் அளவுக்கு உங்கள் உணர்வுநிலையின் தொட்டில் பெரியதாக இருக்கும்படியாக அனைத்து வரம்புகளையும் உடைத்துவிடுங்கள்.”
—பரமஹம்ஸ யோகானந்தர்

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும், பிரியமான ஆண்டவர் இயேசுவின் பிறப்பைக் கௌரவிக்கும் இந்தப் புனிதப் பருவத்தின் போது, உங்கள் பக்தியின் மற்றும் தியானத்தால்-இசைவிக்கப்பட்ட உணர்வுநிலையின் வாயிலாக நீங்கள் அவரது வாழ்க்கையில் ஊடுருவிய எல்லையற்ற கிறிஸ்து-அன்பை உணரலாம் என்ற பிரார்த்தனைகளும் உங்கள் அனைவரையும் சென்றடைகின்றன. இறைவனது ஒளியை முற்றிலும் பிரதிபலிப்போரின் வாயிலாக நமக்கு வரும் அவனது கருணையின் தொடுதலுக்கு இதயமும் மனமும் திறக்கும் போது, தெய்வீகத்திலிருந்து நம்மைப் பிரிக்கும் மாயத்திரை அகற்றப்படுகிறது. இந்த வன்முறையால்-பாதிக்கப்பட்ட உலகின் இருள் விலகி அமைதி நம் இருப்பை நிரப்புகிறது. நம்முடைய உண்மையான, வரம்பற்ற இயல்பின் ஆன்ம-நினைவோடு, புதிய நம்பிக்கை நமக்குள் துளிர்க்கிறது. உலகளாவிய கிறிஸ்து உணர்வுநிலையின் என்றும்-புதுப்பிக்கப்பட்ட பரிசுகள் அத்தகையவை.

இயேசுவின் வெற்றிகரமான வாழ்க்கை, இறைவனின் அருளாசிகளின் மற்றும் நம் அக ஏற்புடைத்தன்மையின் வாயிலாக அகத்தே விழித்தெழச் செய்யப்படக் காத்திருக்கும் தெய்வீக உணர்வுநிலையை நம்மாலும் வெளிப்படுத்த முடியும் என்று நம்மில் தைரியத்தையும் நம்பிக்கையையும் எழுப்பும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கிறது. தனிநபர்களின் இதயங்கள் மாறும்போது, அன்பு மற்றும் சத்தியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களின் தாக்கத்தினாலும் மேம்படுத்தும் அதிர்வாலும் மனிதகுலத்தின் உணர்வுநிலையும் மாற்றப்படும். இயேசுவில் அவதரித்து இருந்த எல்லையற்ற கிறிஸ்துவைப் பெற நம் சொந்த உணர்வுநிலையை நாம் விரிவாக்கும்போது அந்த நிலைமாற்றத்தில் நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய ஒரு பங்கு உண்டு. நமக்கும் அந்தப் பிரபஞ்சக் கிறிஸ்து பிரசன்னத்திற்கும் இடையில், நம்முடைய மனத்திலும் இருதயத்திலும் இருப்பதைத் தவிர, வேறு எந்தத் தடையும் இல்லை. “உங்கள் உணர்வுநிலையில் புலன்களால் அறியக்கூடிய ஒரு வழியில் கிறிஸ்து வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,” குருதேவர் எங்களிடம் கூறினார், “நீங்கள் அனைத்துத் தடைகளையும் உடைக்க வேண்டும்.” மாயையினாலும் தன்முனைப்பின் அச்சங்கள், பாரபட்சங்கள் ஆகியவற்றாலும் கட்டப்பட்ட நெருக்கும் தடைகளை உங்கள் உணர்வுநிலையின் விரிந்த பரப்பிலிருந்து நீக்குவதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும் என்ற விடுதலையளிக்கும் சிந்தனையை உங்கள் கிறிஸ்துமஸ் முன்னேற்பாடுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். மனக்கசப்புகளை, விமர்சிக்கும் அல்லது சுயநல எண்ணங்களை மனத்திலிருந்து வெளியேற்றி, இயேசு வெளிப்படுத்திய இரக்கத்தையும் எல்லோரையும் அரவணைக்கும் மனப்பான்மையையும், வெளிப்புற அங்கீகாரம் தேவையில்லை என்று ஒதுக்கிவிடும் பணிவையும், மிகக் கடுமையான சோதனைகளுக்கு மத்தியிலும் அவரை பகைமை தீண்டாமல் வைத்திருந்த அனைத்தையும் மன்னிக்கும் அன்பையும், நாம் உள்வாங்கும்போது, என்னே குணப்படுத்தும் அமைதி உணரப்படுகிறது. ஆன்ம-சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் அந்தக் குணங்களை நீங்கள் பேணி வளர்க்கும்போது, கிறிஸ்துமஸின் உண்மையான சாரமாகிய கிறிஸ்துமஸ்-அன்பு மற்றும் கிறிஸ்து-அமைதி உங்கள் இதயத்தில் நுழைய நீங்கள் அனுமதிப்பீர்கள்.

இயேசு இறைவனை அறிந்தது போன்ற இறைவனின் இறுதியான அனுபவம் அகக் கூட்டுறவின் ஆழமான அமைதியில் மலர்கிறது. அடக்கப்பட முடியாத எல்லையற்ற அன்பு இதயத்தில் பொங்கி எழத் தொடங்குகிறது, ஆனால் அது அனைத்து ஆத்மாக்களையும் நம்முடையதாக அரவணைக்கும் ஒரு விரிவடையும் வட்டத்தில் நிரம்பி வழிகிறது. அந்த ஒற்றுமையின் உணர்வே இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் மிக உயர்ந்த பரிசு. உங்கள் ஆன்மாவின் கோவிலில் உலகளாவிய கிறிஸ்துவை நீங்கள் பெற்று, அவரைச் சிந்தனையிலும் செயலிலும் மதிக்கும் போது, உங்கள் கிறிஸ்துமஸ் ஆனந்தம் முழுமையடைந்து உங்கள் வாழ்வில் அந்தக் கிறிஸ்து முன்னிலையின் என்றும்-பெருகும் ஒரு விழிப்புணர்வாக புதிய ஆண்டின் எல்லா நாட்களிலும் உங்களுடன் இருக்கட்டும் .

உங்களுக்கும் உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் ஆனந்தமய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்,

ஸ்ரீ மிருணாளினி மாதா

பதிப்புரிமை © 2013 ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதைப் பகிர

Collections

More

Author

More

Language

More