பரமஹம்ஸருடன் ஆழ்ந்த தியானம் செய்வதற்காக கீதமிசைத்தல்

துர்கா மாதாவின் நினைவலைகள்

துர்கா மாதா (1903-1993) பரமஹம்ஸ யோகானந்தரின் ஆரம்பகால நெருங்கிய சீடர்களில் ஒருவராக இருந்தார், மேலும் அவரது உலகளாவிய பணியை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான பங்கை ஆற்றினார். சிறந்த குருதேவருடைய “முதல் தலைமுறை” சீடர்களாயிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து, துர்கா மாதா பல ஆண்டுகளாக அவருக்குத் தனிப்பட்ட முறையில் சேவை செய்வதற்கும், அவரிடமிருந்து பக்திப்பூர்வ கீதமிசைத்தலின் உணர்வை நேரடியாக உள்வாங்குவதற்கும் ஆன பாக்கியத்தைப் பெற்றார்.

துர்கா மாதா மற்றும் பிற சீடர்கள் தினசரி வழக்கத்திலிருந்து ஒரு இடைநிறுத்தமாக சில வனப்பகுதிகளுக்கு அவ்வப்போது குருவுடன் பயணம் மேற்கொள்ளும் பேறு பெற்றனர். கீதங்கள் மற்றும் தியானத்திற்காக பக்தர்களைச் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அவர் அடிக்கடி விவரித்தார்:
குருதேவர் பாம் ஸ்ப்ரிங்ஸுக்கு அருகிலுள்ள பாலைவனத்தில் பாம் கேன்யன் என்ற இடத்திற்கு ஒரு முறை பக்தர்களுடன் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கி தியானம் செய்தோம்; மற்றும் குருதேவர் மிகவும் ஆழமான சமாதிக்குள் சென்றார். நான் அவர் அருகில் இல்லை; நான் தனியாக ஒரு பாறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து, எங்களை எல்லாம் ஒருசேர நடமாடும்-வீட்டிற்குத் திரும்பும்படி அழைத்தார். அவர் பள்ளத்தாக்கு வழியாக பாதையில் நடந்தபோது, நான் அவருக்குப் பின்னால் நெருக்கமாக இருந்தேன். திடீரென்று ஒரு மிகப்பெரிய அசைவற்ற மன அமைதி அவரிடமிருந்து வருவதை நான் உணர்ந்தேன். அது எனக்குள் இருந்து அல்ல; அது அவரிடமிருந்து வந்தது. அவருடைய அதிர்வு வட்டத்தில் இருக்கும் அளவுக்கு நான் நெருக்கமாக இருந்தேன். உடனடியாக அது என்னை ஆழமான, அதீத அமைதி நிலைக்கு உயர்த்தியது. நான் தொடர்ந்து நடந்தேன் மற்றும், என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நான் உணர்ந்தேன்— நான் அடுத்துச் செல்ல வேண்டிய பாதையில் கற்களைப் பார்த்தவாறு—ஆனாலும் நான் என் உடலை உணரவேயில்லை. எங்கும்-நிறைந்த அமைதியின் இந்த உணர்வு மட்டுமே இருந்தது; நான் உடலில் இருந்தேன் என்ற உணர்வேயில்லை.

“பின்னர் குருதேவர் என்னிடம் திரும்பி கூறினார்: ‘கொஞ்சம் மரக்கட்டைகளை எடுத்துக்கொள்.’ நாம் நெருப்பு மூட்ட வேண்டும். நான் என் மரக்கட்டைச் சுமையை எடுத்துக்கொண்டு நடந்தேன்—ஆனால் அந்தப் பேரின்பம்-நிரம்பிய அமைதியைச் சிறிதும் இழக்கவில்லை. என் மனம் அமைதியாகவும் நிலையாகவும் இருந்தது—அமைதியின்மை அல்லது சிந்தனையின் சிற்றலை ஏதுமில்லை, ஆனாலும் என்னால் எல்லாவற்றையும் பார்க்கவும் உணரவும் முடிந்தது. நாங்கள் நடமாடும்-காரை அடைந்ததும், நான் எடுத்துச் சென்ற மரக்கட்டைகளைக் கீழே வைத்தேன், மற்றும் அப்போது அவர் என்னிடம் திரும்பி, ‘அசைவற்ற மன அமைதியே இறைவன்’ என்றார்.

“அது ஒரு சிறந்த பாடம். நாம் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம்; மற்றும் குருதேவர் வழக்கமாகச் சொல்வது போல்: ‘இறைவன் இங்கேயே இருக்கிறான், நமக்குள்ளேயே இருக்கிறான். நீங்கள் ஏன் அவனைப் பார்க்கக்கூடாது? ஏனென்றால் நீங்கள் மற்ற எல்லா இடங்களிலும் தேடுகிறீர்கள். உங்கள் உணர்வுநிலையைத் தொடர்ந்து வெளியே பாயவிடாமல் உள்ளே திருப்பி, உள்ளேயே வைத்திருக்கும் வரை, நீங்கள் அவனை இன்று, நாளை, எப்போது வேண்டுமானாலும், காணலாம்.
துர்கா மாதா அடிக்கடி ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆசிரமங்களில் உள்ள பக்தர்களின் குழுக்களைச் சந்தித்து, ஆன்மீக கீதமிசைக்கும் கலையைப் பற்றி பரமஹம்ஸ யோகானந்தரிடம் பெற்ற தனிப்பட்ட பயிற்சியைப் பகிர்ந்து கொண்டார். இந்தக் கூட்டங்கள் சீடர்களுக்கு குருதேவரது கீதங்களின் வார்த்தைகள் மற்றும் மெல்லிசைகளை மட்டுமல்லாமல், ஒருமுகப்பாடு, புரிதல், பக்தி ஆகியவற்றுடன் கீதமிசைக்கும் கலையையும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்த சந்தர்ப்பங்களில் அவரது கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:
“கீதமிசைத்தல் மனத்தை அமைதிப்படுத்தித் தன்மயமாக்க உதவும் ஓர் அற்புதமான வழிமுறை…நாம் உண்மையை அல்லது இறைவனைத் தெளிவாக உணர முடியும் படியாக, அமைதியின்மை மற்றும் உளவியல் குப்பைகளின் குழம்பிய சேற்று வண்டலைத் தெளிவடையச் செய்ய உதவும் ஒரு வழிமுறை.”

“கீதமிசைத்தல் இறைவனை உணர்ந்தறியும் வழிகளில் ஒன்று என்று குருதேவர் கூறுவது வழக்கம்….நாம் கீதமிசைக்கும்போது, மனதைக் கட்டுப்படுத்தி கீதத்தின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்ட சிந்தனையின்மீது ஒருமுகமாக கவனம் செலுத்த முயற்சி செய்கிறோம். பின்னர் கீதமிசைத்தல் முடியும் போது, சிந்தனை, கீதமிசைத்தல், குரல்கள் ஆகியவற்றின் அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் வெளிப்பாடுகளைத் தாண்டி, அமைதியான தியானத்தினுள் உங்களால் எளிதாகச் செல்ல முடிகிறது. இறைவன் வரக்கூடிய ஒரே நேரம் அதுதான்: மனத்தின் அமைதியிலும் அகமுக அசைவற்ற நிலையிலும்.

“குருதேவர் இந்தப் பாடல்களை இயற்றியபோது, அவர் சொன்னதைப் போல், அவை ‘ஆன்மீகமயமாக்கப்படும்’ வரை, அவர் அவற்றை மீண்டும் மீண்டும் பாடுவது வழக்கம். அவர் இந்த கீதங்களில் வைத்த ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் உள்ள ஆன்மீக உணர்வை உண்மையான அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தறிந்து விடும் வரை அவற்றைத் திரும்பத்திரும்ப பாடினார் என்பது அவர் கூறியதன் பொருளாகும். அவர் அவற்றை வெறும் குரலால் அல்ல, மாறாக அவரது இதயத்தாலும் மனத்தாலும், குறிப்பாக அவரது ஆத்மாவாலும் பாடினார். மேலும் நாங்கள் அவருடன் கீதங்கள் இசைத்தபோது, நாங்கள் உண்மையிலேயே கீதத்திற்குள் மூழ்கினால், அவருடைய ஆன்மீகமயமாக்கப்பட்ட உணர்வுகள், அவர் அனுபவித்துக் கொண்டிருந்த அற்புதமான பேரின்பமயக் கூட்டுறவின் ஒரு கணநேரக் காட்சியை எங்களுக்கு வழங்கியவாறு, அவரது உணர்வுநிலையில் இருந்து எங்களுடைய சொந்த உணர்வுநிலையினுள் பொங்கி வழிந்தது.”

இதைப் பகிர