ஸ்ரீ தயா மாதாவின் புத்தாண்டு செய்தி: 2011

அன்புள்ள உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களே,

நமது அன்புக்குரிய தலைவியும் சங்கமாதாவுமான ஸ்ரீ தயா மாதாஜி மறைவதற்கு முன், நம் ஆன்மீக குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒவ்வொரு புதிய ஆண்டின் தொடக்கத்திலும் அவர் அனுப்புகின்ற செய்தியை தயார் செய்திருந்தார். அவருடைய உதவியும் அருளாசிகளும் இன்னும் நம்முடன் உள்ளன, உங்களுக்காகவும் இறைவனோடு ஆழமான உறவைத் தேடும் அனைத்து உள்ளங்களுக்காகவும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறையின் நினைவூட்டலாக இக்கடிதத்தை வைத்திருக்க விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். அவருடைய வார்த்தைகள் மூலம் நீங்கள் அவருடைய இருப்பையும் ஊக்கத்தையும் உணரலாம், மேலும் அவருடைய தெய்வீக அன்பால் எழுச்சியூட்டப்படவும் நேரலாம்.

மிருணாளினி மாதா

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் இயக்குனர்கள் குழுவிற்கு

புத்தாண்டு 2011

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து, இந்தப் புத்தாண்டில் ஒன்றாக நுழையும்போது எங்கள் ஆன்மாக்களின் நட்பை உங்களுக்கு அனுப்புகிறோம். கிறிஸ்துமஸ் பருவத்தில் உங்கள் அன்பான செய்திகள் மற்றும் நினைவுகூரலுக்காகவும், கடந்த மாதங்களில் உங்கள் அக்கறையை பலமுறை வெளிப்படுத்தியதற்காகவும் உங்களுக்கும், குருதேவரின் ஆன்மீகக் குடும்பம் மற்றும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். நமது ஒன்றிணைந்த பிரார்த்தனைகள் மற்றும் நாம் பகிர்ந்து கொள்ளும் இலட்சியங்களை நம் வாழ்வில் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மூலம், நாம் ஒருவரையொருவர் பலப்படுத்தி, நம்பிக்கையின் உணர்வையும் இறைவனின் நற்குணத்திலும், ஒவ்வோர் ஆன்மாவின் தெய்வீக ஆற்றலிலும் விசுவாசத்தின் உணர்வையும் பரப்ப உதவுகிறோம். என்றும்-மாறிக்கொண்டே இருக்கும் உலகத்தின் தினசரி யதார்த்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ளும் போது, நாம் இறைவனின் மாற்றமில்லாத அன்பில் நமது உணர்வுநிலையை நிலைநிறுத்துவோமாக. அதனால் நாம் அவனது இருப்பை உணர்ந்து, பிரதிபலிக்கலாம். நாம் ஒரு புதிய தொடக்கத்தை செய்ய நினைக்கும் போது, நமது மகிழ்ச்சியின் மீதோ அல்லது நமது இலக்குகளை எட்டுவதற்கான நமது திறமையின் மீதோ நாம் விதித்துள்ள எந்தக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகளையும் விட்டுவிட நினைக்கும் போது இத்தகைய சுதந்திர உணர்வு வருகிறது. நமது கடந்தகால அனுபவங்கள் அல்லது தற்போதைய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இந்தத் தருணத்திலிருந்து நாம் ஒரு நிறைவான, சேவை நிறைந்த வாழ்க்கையை நடத்தத் தேர்ந்தெடுக்கலாம்; இறைவனுடன் இசைந்திருந்து, தகுதியான சாதனைகளை சாத்தியமாக்கும் குணத்தின் பண்புகளை நாம் வளர்க்க முடியும். அடுத்த ஆண்டு பெற்றிருக்கும் புதிய வாய்ப்புகள் மூலம் — நம் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்கவும், நம்மால் முடிந்தவரை என்னவாக ஆக முடியுமோ, அந்த அனைத்துமாக ஆகவும் — தெய்வீகமானது நம் ஆன்மாவின் மறைந்திருக்கும் துணிவையும், வெல்லமுடியாத தன்மையையும் மீண்டும் எழுப்ப அழைக்கிறது. ஒரு முக்கியமான முதல் படி, நமது உணர்வுநிலையின் கவனத்தை எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு மாற்றுவது — தடைகளிலிருந்து இலக்கிற்கு, சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது செயலற்ற தன்மையிலிருந்து நமது சொந்த தலைவிதியை நம்மால் வடிவமைக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்வது. நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, அனைத்தும் உங்களுக்குள் உள்ளன, மேலும் நேர்மறை சிந்தனை மற்றும் உறுதியான செயல்களால் அந்த பண்புகளை நீங்கள் வெளியே கொண்டு வர முடியும். அதிக இச்சா சக்தி, திடநம்பிக்கை அல்லது பொறுமை போன்ற நீங்கள் குறிப்பாக வெளிப்படுத்த விரும்பும் குணங்களை தொடர்ந்து சங்கல்பித்து, பயிற்சி செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் உங்கள் உணர்வுநிலையின் ஆழமான தளங்களில் வெற்றிக்கான விதைகளை ஊன்றுவீர்கள். பழைய வடிவங்கள் மீண்டும் வந்தால், கைவிட மறுக்கவும். நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்கலாம் மற்றும் ஒவ்வொரு நொடியும் நீங்கள் ஒரு மறு-சக்தியூட்டப்பட்ட தீர்மானத்தை முன்வைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த உலகில் நாம் தேடும் எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது நம்முடைய மிகப் பெரிய தேவை — நம் இருப்பின் மூலாதாரமாக இருக்கும் அவனுடனான நமது தொடர்பை மீண்டும் நிலைநிறுத்துவது. தன்னைப் பற்றிய மற்றும் இந்த உலகத்தைப் பற்றிய அனைத்து எண்ணங்களையும் கைவிட்டு, நீங்கள் அவனுடன் உரையாடும்போது, அத்தகைய ஓர் இதமான அமைதி இதயத்தை நிரப்புகிறது — வேறு எதுவும் கொடுக்க முடியாத இனிமை மற்றும் நல்வாழ்வின் உணர்வு. நீங்கள் அவனுடைய அன்பில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள், அவனுடைய உதவியால் உங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை அறிவீர்கள். குருதேவர் கூறியது போல், “நீங்கள் வரம்புகளை உணரும் ஒவ்வொரு முறையும், கண்களை மூடிக்கொண்டு,’நான் எல்லையற்றவன்’ என்று உங்களுக்கே கூறிக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் எத்துணை சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காண்பீர்கள்.” உங்களை சீராக மேம்படுத்திக்கொள்ள அந்த சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் பாதையைக் கடக்கும் அனைவரிடமும் நீங்கள் நேர்மறையான, எழுச்சியூட்டும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இறைவனின் முன் உங்களுடைய உயர்ந்த அபிலாஷைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைக்கும்போது, அவனது ஆதரவளிக்கும் இருப்பையும், அவன் உங்களது ஆன்மாவின் மலர்ச்சிக்கு வழிகாட்டி, உங்களை அவனுக்கு அருகில் ஈர்க்கின்ற மென்மையான கவனிப்பையும் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட கிறிஸ்துமஸ்,

ஸ்ரீ தயா மாதா

இதைப் பகிர

Collections

Author

Language

More