ஸ்ரீ தயா மாதாவின் கடிதம்

இறைவனுடன் தொடர்பு கொள்ள மற்ற உண்மையான சாதகர்களுடன் இணைவது ஆன்மீகப் பாதையில் ஒரு விலைமதிப்பற்ற அருளாசியாகும். குருதேவரின் ஆசிரமங்களில் பக்தர்கள் பின்பற்றும் அன்றாட நடைமுறைகளின் இதயமாக இருக்கும் கூட்டுத் தியானங்களில் நான் கண்டறிந்த அக உதவிக்காகவும், தியான உத்திகளைப் பயிற்சி செய்வதற்கும், இறைவனை ஆழமாக நாடுவதற்கும் நமது ஒன்றிணைந்த முயற்சிகளிலிருந்து பெற்ற ஆன்மீக ஊக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

திட்டமிடப்படியோ அல்லது தெய்வீக நண்பர்களின் தன்னிச்சையான அழைப்பினாலோ, தியானத்திற்காக பக்தர்கள் கூடியிருந்தபோது குருதேவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார். அவர், தான் இளைஞராக இருந்தபோது தனது குருவான சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் நல்ல தோழர்களுடன் தியானம் செய்ய, அந்த “ஆன்மீக மெய்க்காப்பாளர்களை” தன்னைச் சுற்றி ஈர்த்துக் கொள்ள அறிவுறுத்தியதாகக் கூறினார். பயனற்ற கவனச்சிதறல்கள், அமைதியின்மை அல்லது அகச் சோர்வு இறைவனைத் தேடுவதிலிருந்து நம்மை விலக்கி, அவரை மறக்கச் செய்யக்கூடும். ஆனால் நாம் மற்றவர்களுடன் தியானம் செய்யும்போது, ஒவ்வொரு பக்தரும் மற்றவர்களின் உற்சாகத்தாலும் ஒருமுகப்பாட்டாலும் வலுப்படுத்தப்படும் ஒரு அற்புதமான பக்திச் சூழல் உருவாக்கப்படுகிறது. இறைவன் மீதான நமது அன்பு வளர்கிறது, மற்றும் அவனது இருப்பின் மெய்ம்மை நம்மால் அதிகமாக உணரப்படுகிறது, வாழ்வின் மாறிக்கொண்டே இருக்கும் வெளிப்புற நாடகத்தின் தற்காலிக ஈர்ப்புகளை விட அவன் நமக்கு அதிக நிறைவு அளிப்பவனாகிறான். கூட்டுத் தியானம் புதிய ஆன்மீக ஆர்வலர்களையும் தியானம் செய்வதில் அதிக அனுபவமிக்கவர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை என்று குருதேவர் கூறினார். ஒன்றுகூடி தியானம் செய்வது கூட்டுக் காந்த விசையின் கண்ணுக்குப் புலனாகாத அதிர்வு பரிமாற்ற விதியின்படி குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் அதிகரிக்கிறது.”

உங்களில் பலர் உங்கள் கோவில்கள், மையங்கள், மண்டலிகள் ஆகியவற்றில் நடைபெறும் தியானங்களில் கலந்துகொள்கிறீர்கள் என்பதை அறிவதும் பெறப்பட்ட நீடித்த நன்மைகளை விவரிக்கும் உங்கள் கடிதங்களைப் படிப்பதும் எனக்கு ஆனந்தத்தைத் தருகிறது. உங்கள் சாதனாவின்இந்த முக்கியப் பகுதியை முழு மனத்துடன் தொடருங்கள். நீங்கள் உங்களுக்கு உதவிக்கொள்வது மட்டுமல்லாமல், நீங்கள் ஆர்வமாக, அன்பாக, நிபந்தனையின்றி அவனை நாடும்போது, இப்பூவுலகில் நீங்கள் ஒரு பெரிய நன்மைக்கும் இறை-உணர்வுநிலைக்கும் பங்களிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்றுகூடித் தியானம் செய்வதில், நீங்கள் பகிரும் இறைத்-தொடர்பின் மூலம் நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் ஓர் என்றும்-ஆழமாகும் பிணைப்பை ஏற்படுத்துகிறீர்கள்.

இறைவன் உங்களை நேசிக்கட்டும்,

ஶ்ரீ தயா மாதா

இதைப் பகிர