லாஹிரி மகாசயருடன் ஓர் அற்புத சந்திப்பு

எழுதியவர்: சனந்தலால் கோஷ்

மெஜ்தா எனும் நூலிலிருந்து: : தி ஃபேமிலி அன்ட் தி ஏர்லி லைஃப் ஆஃப் பரமஹம்ஸ யோகானந்தா . (பரமஹம்ஸ யோகானந்தரின் குடும்பமும், அவரது இளமைக் கால வாழ்வும் – ஆங்கிலத்தில்). இந்நூலாசிரியர் யோகானந்தரின் இளைய சகோதரர் ஆவார்; யோகானந்தரை அவர் இரண்டாவது அண்ணனைக் குறிக்கும் வங்காளச் சொல்படி மெஜ்தா என்றழைத்தார். எல்லோருக்கும் மூத்த சகோதரர், பின்வரும் பாத்திரங்களில் ஒருவர், அனந்தா என்றழைக்கப்பட்டார்.

இப்போதே வரவழைப்பீர்

அனந்தாவின் நாட்குறிப்பேட்டின்படி, 1906, மே 3 ஆம் தேதி, நாங்கள் பரேய்லியிலிருந்து சிட்டகாங்கிற்கு குடி பெயர்ந்தோம். இங்கு மெஜ்தா என்னை அண்டை வீடுகளின் முற்றங்களிலிருந்த மரங்களில் இருந்து பழங்களைப் பறிக்க தன்னுடன் அழைத்து செல்வான். வீடுகளில் ஒன்றில் சில அழகிய பெரிய அன்னப் பறவைகள் இருந்தன. மெஜ்தா ஒரு இறகுப் பேனாவைத் தயாரிக்க விருப்பம் கொண்டான், எனவே அவன் அவ்வெழில்மிக்க பறவைகள் ஒன்றிலிருந்து ஒரு இறகைப் பறித்தான். பறவையின் உரிமையாளர் இதை கண்டுபிடித்து, அனந்தாவிடம் புகார் செய்தார். எங்கள் சகோதரன் மெஜ்தாவின் குறும்புத்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினான். இதற்கு மிகச் சிறந்த வழி பகற்பொழுதில் ஓரிடத்தில் அடைத்து வைப்பது தான் என்று முடிவு செய்தான். எனவே அனந்தா, என்னையும் மெஜ்தாவையும் தானே நேராக உள்ளூர் பள்ளிக்கு கூட்டிச் சென்று எங்களை அங்கு சேர்த்து விட்டான். மெஜ்தா எல்லா பாடங்களிலும் மிக நன்றாக தேர்ச்சி பெற்றான்; நான் வெறுமனே தேர்ச்சி மட்டும் பெற்றேன்.

ஒருநாள் மெஜ்தாவிற்கும் எனக்கும் கூறப்பட்டது: “துறைமுகம் பக்கம் போகாதீர்கள். நதியின் முகப்பிலிருந்து விலகி இருங்கள்.”

நான் நினைத்தேன்: ” மெஜ்தா இதற்கு ஒருபோதும் பணிய மாட்டான். இதைத்தான் அவன் கண்டிப்பாக எதிர்த்து நிற்பான்.” சந்தேகத்திற்கிடமின்றி, அவன் என்னை நதியின் முகப்பிற்கு கூட்டிச்செல்ல நீண்டநாள் எடுக்கவில்லை.

அனந்தா, குழந்தைகளான எங்கள் அனைவருக்கும், தினசரி மாலையில் சீக்கிரமாக கைகால்களை சுத்தம் செய்து கொள்ளவும் அத்துடன் 6 மணியளவில் வீட்டுப்பாட வேலையைத் தொடங்கவும், வீட்டில் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான். சிட்டகாங் துறைமுகம் வீட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருந்தது. எனவே, பள்ளியில் இருந்து வீடு திரும்பி, சிற்றுண்டி அருந்தி விட்டு துறைமுகம் சென்று மீண்டும் வீட்டில் குறிப்பிட்ட நேரத்தில் இருப்பதற்கு, போய் வரும் 8 கி.மீ. தூரத்தை நடந்து சென்று கடப்பது எங்களுக்குச் சாத்தியமில்லை. எனவே நாங்கள் துறைமுகத்திற்கான அத்துணை தூரத்தையும் ஓடியே கடந்து, சிறிது நேரம் கப்பல்களைக் கவனித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு ஓடியே திரும்புவதை வழக்கமாக கொண்டோம். இந்த வேக ஓட்டப் பயிற்சியின் காரணமாக, மெஜ்தா ஓர் உயர்தர ஓட்டப்பந்தய வீரனாக மாறினான். நானும் கூட ஓரளவு சிறந்த ஓட்டப்பந்தய வீரனானேன்; ஆனால் மெஜ்தாவின் அளவிற்கு இல்லை.

நதியின் முகப்பிற்கு செல்லும் சாலையில் பல தாழ்வான குன்றுகள் இருந்தன. எங்கள் வழியின் ஊடே உள்ள மரங்களில் ஏராளமான பழங்கள் பழுத்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒருநாள் மெஜ்தா கூறினான் “கேள், இன்று மாலை நாம் திரும்பும்போது சில லிச்சிப் பழங்களைப் பறிப்போம். அந்தி நேரத்தில் எவரும் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.”

எவ்வாறு சொல்லப்பட்டதோ, அவ்வாறே செய்யப்பட்டது! மெஜ்தா மணமும் சுவையும் மிகுந்த இனிப்பான சில லிச்சிப் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது, யாரோ அவனை பெயர் சொல்லி கூப்பிட்டது அவன் காதில் விழுந்தது. திடுக்குற்று, மெஜ்தா சற்றும் அசையாமல் நின்றான். அனைத்து சாகச உணர்வும் திடீரென முடிவுற்றது. ஜாக்கிரதையாக, நாங்கள் குரல் வந்திருந்த திசையை நோக்கி நகர்ந்தோம். அந்தி வேளை வேகமாக மங்கிக் கொண்டிருந்தது, எங்களால் நிழல்களிடையே வெகு தூரத்திற்கு பார்க்க முடியவில்லை, ஆனால் விரைவில் வெண்ணிற ஆடை அணிந்திருந்த ஒரு மனிதரை நாங்கள் கண்டுகொள்ள முடிந்தது. நாங்கள் சற்று பயந்து போய் இருப்பதை கண்டு அவர் ஒரு நட்புரிமை பாவத்தில் தன் அருகில் வருமாறு சைகை காட்டினார். அவர் இங்குள்ள காவல்காரராய் இருந்திருந்தால், மெஜ்தாவின் பெயர் எவ்வாறு அவருக்குத் தெரிந்திருக்க முடியும்?

மெதுவாக நாங்கள் மென்மையாக புன்னகைத்துக் கொண்டிருந்த அந்த நபரை நோக்கி முன்னேறினோம். அவரது வடிவம் ஓர் அற்புத ஒளியால் பிரகாசமாக திகழ்ந்தது. நான் அந்த ஒளி எங்கிருந்து வருகிறது என்பதை காண சுற்றும்முற்றும் நோட்டமிட்டேன். மெஜ்தா திடீரென அந்த மகானின் முன் தலை வணங்கி அவரது திருப்பாதங்களைப் பற்றினான். மகான் மெஜ்தாவை ஆரத்தழுவி அவன் தலையில் முத்தமிட்டார். நானும் அந்த மகான் உருவத்திற்கு முன் மண்டியிட்டேன். ஓர் ஆசிர்வதிக்கும் தோரணையில் அவர் எங்களிடம் “ஜெயாஸ்து!” (உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்) என்று கூறினார். பிறகு அவர் மெஜ்தாவிடம் பேசினார்:

“முகுந்தா, இன்று உங்களிடம் நான் வர வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். நான் உனக்கு சொல்வதை நினைவில் கொள். நீ இந்த பூவுலகிற்கு இறைவனது பிரதிநிதியாய் அவனது விருப்பங்களை நிறைவேற்ற வந்துள்ளாய். உனது உடல் பிரார்த்தனை மற்றும் தியானத்தாலும் புனிதமாக்கப்பட்ட அவனது திருக்கோவில். பொருள்சார் இன்பங்களின் பின்னாலோ அல்லது மன நிறைவின் பின்னாலோ ஓடாதே. உண்மையான மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் பாதையை நீ காட்டுவாய்; மற்றும் உனது ஆன்மீக ஞானம் மூலம் அறியாமையில் துன்புறுகிறவர்களை நீ கரையேற்றுவாய். தியானத்தில் ஒப்புயர்வற்று வெற்றிகரமாக இருப்பவர்களால் மட்டுமே அடையப்படும் மஹா புருஷனிடம் நீ ஒன்றுபட்டுள்ளாய் என்பதை ஒருபோதும் மறவாதே. உனது தேகம், மனம் மற்றும் ஆன்மா ஒருபோதும், ஒரு கணம்கூட, இறைச் சிந்தனையிலிருந்து பிரியக்கூடாது. எல்லையற்ற தெய்வத்தந்தையின் அருளாசிகள் உன் மேல் உள்ளன. அவனிடம் கொண்டுள்ள உன் விசுவாசம் முழுமையானதாக இருக்க வேண்டும். அனைத்து அபாயங்களிலிருந்தும் அவன் உன்னைப் பாதுகாப்பான். இந்த உலகில் அவன் மட்டுமே நித்தியம்; மற்ற அனைத்தும் தற்காலிகமானவை மற்றும் நம்பத்தகாதவை. ஒரு நாள் யோகம் பற்றிய உன் லட்சியங்கள் அனைத்து மனித இனத்தையும் எழுச்சியூட்டும். முகுந்தா, பீடுநடை போட்டு முன்னேறிச் செல்!”

நான் அமைதியற்று நெளிந்து கொண்டிருந்தேன், ஏனெனில் நேரம் சென்று கொண்டிருந்தது, இருள் எங்களைச் சூழ்ந்து கொண்டது. நாங்கள் வீட்டை அடைய தொலைதூரம் செல்ல வேண்டும். தந்தையின் திட்டும், அனந்தாவிடமிருந்து உதையும் தவிர்க்க முடியாதவை. மகான் என் எண்ணத்தை அறிந்து கொண்டு கூறினார், “கவலைப்படாதீர்கள், நிம்மதியாக வீட்டிற்கு சொல்லுங்கள்; நீங்கள் தாமதமாக வந்ததை யாரும் கவனிக்க மாட்டார்கள்.”

நாங்கள் வீட்டிற்குப் புறப்படத் தொடங்கினோம். சிறிது தூரம் நடந்த பிறகு திரும்பி பார்த்தோம்; மகான், மேலே உயர்த்திய கைகளுடன் எங்களை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். பிறகு அவர் மறைந்து விட்டார். நான் மெஜ்தாவின் பக்கம் திரும்பிப் பேசினேன், ஆனால் அவன் எதையும் கேட்கவில்லை. அவன் தலையைக் கீழே தாழ்த்தியவாறு ஒரு சிந்தனை மிகுந்த மன நிலையில் நடந்து கொண்டிருந்தான். நாங்கள் வீட்டை அடைந்தபோது, மெஜ்தா நேராக தன் வழிபாட்டு அறைக்குச் சென்றான். நான், அப்பாவும் அனந்தாவும் எங்கே என்று விசாரித்தேன். அனந்தா ஒரு நண்பர் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தான் என்றும், அப்பா அலுவலகத்தில் ஒரு முக்கிய கூட்டத்தில் இருந்து இன்னும் வீடு திரும்பவில்லை என்றும் கேள்விப்பட்டேன். என்னே ஆனந்தம்! அவர்களுக்கு எங்களது தாமத வருகையைப் பற்றி தெரியாது. நான் மெஜ்தாவிடம் விஷயத்தைச் சொல்ல வழிபாட்டு அறைக்கு ஓடினேன்.

ஆனால் மெஜ்தா என்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தான். அவன் என் கையைப் பற்றி சுவற்றில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தை நோக்கி என்னை அழைத்து சென்றான். நாங்கள் ஒரு கணம் அதன் முன் நின்றோம், பிறகு அவன் கூறினான், “இவரை அடையாளம் தெரிகிறதா? நம்மிடம் பேசியது இவர்தானே?”

நான் வியந்து போனேன். அவரேதான் — அந்த அதே புன்னகை. ஆனால் அவர் வெகு காலம் முன்பே இறந்து விட்டிருந்தார். அவர் எவ்வாறு இப்பொழுது எங்களிடம் வந்து இருக்க முடியும்? இத்தனை வருடங்களுக்கு முன் இறந்த ஒருவரிடம் நாங்கள் எவ்வாறு பேசியிருக்க முடியும்? அவர் எங்களை ஆசீர்வதித்து, மெஜ்தாவை ஆரத் தழுவி அவன் தலையில் முத்தமிட்டிருந்தார். நான் அதிர்ச்சியில், பேச முடியாதவாறு தொண்டை அடைத்துப் போனேன். நான் ஒரு பொருள் பொதிந்த பார்வையுடன் மெஜ்தாவை நோக்கினேன். இந்தியா முழுவதுமுள்ள இல்லறத்தாராலும், முனிவர்களாலும் அறிவுரைக்காக, ஒன்றுபோல் நாடப்பட்ட மகானும், மக்கள் எல்லையற்ற நீண்ட வரிசைகளில் எவருடைய அருளாசிகளையும் ஆன்மீக அறிவுரைகளையும் பெற வந்திருந்தனரோ அந்த குருதேவருமான மகிமை வாய்ந்த லாஹிரி மகாசயரை நானும் மெஜ்தாவும் கண்டு பேசியிருந்தோம் என்பதில் ஐயமில்லை. மெஜ்தாவுடன், யோகாவதாரத்தை நான் என் சொந்தக் கண்களினால் கண்டும் பேசியும் இருந்தேன். இன்று வரையில் அந்த அற்புத அனுபவத்தை நினைவு கூரும் போதெல்லாம் நான் சிலிர்ப்புறுகிறேன். அது என் நினைவில் என்றென்றைக்குமாக செதுக்கப்பட்டுள்ளது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்; அவரது எல்லையற்ற கருணை, அவரது தலைசிறந்த அருளாசி என் மேல் உள்ளது. என் நன்றியுணர்விற்கு எல்லைகள் இல்லை.

இதைப் பகிர