மகத்தான குருவின் சொற்பொழிவுகளையும் வகுப்புகளையும் பதிவு செய்தல்

அருளியவர் : ஶ்ரீ ஶ்ரீ தயா மாதா

பரமஹம்ஸ யோகானந்தருடைய  சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பின் மூன்று பாகங்களுக்கு தயா மாதா அருளிய முகவுரையிலிருந்து.

முதன்‌ முறையாக நான்‌ ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரைக்‌ கண்டபொழுது, அவர்‌ சால்ட்‌ லேக்‌ சிட்டியில்‌ ஒரு மிகப்பெரிய ஆனந்த பரவசமூட்டப்பட்ட சபையோரின்‌ முன்பு உரையாற்றிக்‌ கொண்டிருந்தார்‌. அது 1931ம்‌ ஆண்டு. கூட்டம்‌ நிறைந்த அரங்கத்தின்‌ பின்‌ நான்‌ நின்று கொண்டிருந்தபோது,உரையாற்றுபவரையும்‌, அவருடைய வார்த்தைகளையும்‌ தவிர என்னைச்‌ சுற்றிலும்‌ இருந்த எதைப்பற்றியும்‌ உணராமல்‌ நான் நிலைகுத்தி நின்றுவிட்டேன்‌. என்‌ ஆன்மாவினுள்‌ பொழிந்துகொண்டு, என்‌ இதயத்தையும்‌ மனத்தையும்‌ வெள்ளமென நிறைத்துக்‌ கொண்டிருந்த ஞானத்திலும்‌ இறை அன்பிலும்‌ என்‌ முழு இருப்பும்‌ லயித்திருந்தது. “எப்பொழுதும்‌ நான்‌ இறைவனை நேசிக்க ஏங்கி இருந்ததைப்‌ போலவே, இந்த மனிதர்‌ அவனை நேசிக்கிறார்‌. அவர்‌ இறைவனை அறிந்துள்ளார்‌. அவரையே நான்‌ பின்பற்றுவேன்‌,” என்று மட்டுமே நான்‌ எண்ண முடிந்தது. மேலும்‌ அக்கணத்திலிருந்து நான்‌ அங்ஙனமே செய்தேன்‌.

பரமஹம்ஸருடன்‌ நான்‌ இருந்த ஆரம்ப நாட்களில்‌, என்‌
சொந்த வாழ்க்கையில்‌ அவருடைய சொற்களின்‌ உருமாற்றக்கூடிய சக்தியை உணர்ந்ததும்‌, எல்லா உலகிற்கும்‌, எல்லா காலத்திற்குமாக அவருடைய சொற்களைப்‌ பாதுகாக்க வேண்டிய அவசரமான
தேவையைப்‌ பற்றிய உணர்வு எனக்குள்‌ எழுந்தது. நான்‌ பரமஹம்ஸ யோகானந்தருடன்‌ இருந்த பல ஆண்டுகளில்‌ அவருடைய விரிவுரைகளையும்‌, வகுப்புகளையும்‌, அத்துடன்‌ கூட அனேக சாதாரண உரையாடல்கள்‌ மற்றும்‌ தனிப்பட்ட அறிவுரைகளையும்‌ — உண்மையிலேயே, அற்புதமான அறிவும்‌, இறை-அன்பும் கொண்ட ஒரு மிகப்‌ பரந்த பொக்கிஷ-இல்லமாகத்‌ திகழ்வது — பதிவு செய்து வைப்பது என‌க்கு புனிதமான மற்றும்‌ ஆனந்தமான பாக்கியமாக அமைந்தது.

குருதேவர்‌ பேசும்பொழுது, அவருடைய உத்வேகத்தின் பாய்ச்சல்‌, அவரது பேச்சின்‌ வேகத்தில்‌ பெரும்பாலும்‌ பிரதிபலித்தது; அவர்‌ எப்பொழுதாவது பல நிமிடங்கள்‌ நிறுத்தாமல்‌ பேசுவார்‌. மேலும்‌ ஒரு மணிநேரம்‌ வரையும்‌ தொடர்ந்து பேசுவார்‌. அவர்‌ பேசுவதைக்‌ கேட்டுக்‌
கொண்டிருப்போர்‌, தம்‌ வசமிழந்து அமர்ந்திருக்கும்‌ அதே சமயம்‌, என்‌ பேனாவோ பறந்து கொண்டிருக்கும்‌! அவரது சொற்களை நான்‌ சுருக்கெழுத்தில்‌ எழுதிக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது, ஒரு விசேஷ தெய்வீக அருள்‌ கீழிறங்கி, குருவின்‌ குரலை சுருக்கெழுத்து வடிவங்களில்‌ உடனுக்குடன்‌ மாற்றி தாளில்‌ பதிய வைத்துக்‌ கொண்டிருப்பது போலிருக்கும்‌. அவற்றை விரிவுபடுத்தி எழுதுவது, ஆசீர்வதிக்கப்பட்ட பணியாக இன்றும்‌ தொடர்கிறது. இவ்வளவு நீண்ட காலத்திற்குப்‌ பிறகும்‌– என்னுடைய சில குறிப்புகள்‌ நாற்பது
வருடங்களுக்கும்‌ மேலாக பழமையானவை–அவற்றை விரிவு படுத்தி எழுத ஆரம்பிக்கும்‌ பொழுது, அவை நேற்று பதிவு செய்யப்பட்டவை போல, என்‌ மனத்தில்‌ அதிசயமான முறையில்‌ புதியதாக உள்ளன. ஒவ்வொரு குறிப்பிட்ட சொற்றொடரிலும்‌ குருதேவருடைய குரலின்‌ ஏற்ற இறக்கங்களைக்‌ கூட, நான்‌ உள்முகமாகக்‌ கேட்கின்றேன்‌.

குருதேவர்‌ தன்‌ சொற்பொழிவுகளுக்கு மிகக்‌ குறைந்த அளவு ஆயத்தமேனும்‌ செய்வது அரிது; அப்படியே எதுவும்‌ தயார்‌ செய்தாலும்‌, அது அவசரமாகக்‌ குறித்துக்‌ கொள்ளப்பட்ட, உண்மையை அடிப்படையாகக்‌ கொண்ட ஓரிரண்டு விவரங்‌களையே கொண்டிருக்கும்‌. பெரும்பாலும்‌, காரில்‌ ஆலயத்திற்குச்‌ சென்று கொண்டிருக்கும்பொழுது, வழியில்‌ அவர்‌ சாவகாசமாக எங்களில்‌ ஒருவரிடம்‌ கேட்பார்‌: “இன்றைக்கு நான்‌ பேச வேண்டிய விஷயம்‌ என்ன?” தனது மனத்தை அதில்‌ இருத்தி, தெய்வீக அருட்கிளர்ச்சியின்‌ அகக்‌ களஞ்சியத்திலிருந்து முன்னேற்‌பாடில்லாத சொற்பொழிவை ஆற்றுவார்‌.

ஆலயங்களில்‌ குருதேவருடைய சொற்பொழிவுக்கான விஷயங்கள்‌ முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்‌பட்டன. ஆனால்‌ சில சமயங்களில்‌ அவர்‌ பேசத்‌ தொடங்கும்‌ பொழுது, அவருடைய மனம்‌ முழுவதுமாக வேறு எண்ணத்தில்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌. “இன்றைய விஷயம்‌” என்பதைப்‌ பொருட்படுத்தாமல்‌, அந்தக்‌ கணத்தில்‌ தன்‌ உணர்வுநிலையைத்‌ தன்வயப்படுத்தி, தன்‌ அபரிமிதமான சொந்த ஆன்மீக அனுபவங்களிலிருந்தும்‌ உள்ளுணர்வுக்‌ காட்சிகளிலிருந்தும்‌, ஒரு நிலையான ஊற்றாக விலைமதிப்பற்ற ஞானத்தைப்‌ பொழிந்து உண்மைகளை உரைப்பார்‌. ஏறக்குறைய எப்பொழுதும்‌, இத்தகைய ஒரு சொற்பொழிவின்‌ முடிவில்‌, பலர்‌ தங்களுக்குத்‌ தொல்லை கொடுத்துக்‌ கொண்டிருந்த பிரச்சனைகளைப்‌ பற்றி தெளிவு படுத்தியதற்காகவோ அல்லது ஒருக்கால்‌ தாங்கள்‌ தனிப்பட்ட முறையில்‌ ஆர்வம்‌ கொண்டிருந்த சில தத்துவரீதியான கருத்துக்களுக்கு விளக்கம்‌ அளித்ததற்காகவோ அவருக்கு நன்றி கூற முன்‌வருவர்‌.

சில சமயங்களில்‌ குருதேவர்‌ சொற்பொழிவாற்றிக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது, அவருடைய உணர்வுநிலை, சபையினரை சில கணங்களுக்கு மறந்து, இறைவனுடன்‌ நேரடியாக உரையாடும்‌ அளவிற்கு, உயர்ந்துவிடும்‌; அவருடைய முழு இருப்பும்‌ இறை ஆனந்தத்தாலும்‌, மதிமயக்கும்‌ அன்பினாலும்‌ நிறைந்து வழிந்தோடும்‌. இவ்விதமான உயர்ந்த உணர்வு நிலைகளில்‌,
அவருடைய மனம்‌ இறை உணர்வுடன்‌ முழுவதுமாக ஒன்றாகி, தன்‌ அகத்தினுள்‌ சத்தியத்தைக்‌ கண்டுணர்ந்தார்‌, அத்துடன்‌ தான்‌ கண்டதையும்‌ விவரித்தார்‌. சில வேளைகளில்‌ இறைவன்‌ பராசக்தியாகவும்‌ அல்லது வேறொரு அம்சமாகவும்‌ அவருக்கு காட்சி, அளித்தான்‌; அல்லது நம்‌ மகா குருமார்களில்‌ ஒருவரோ அல்லது மற்ற மகான்களோ தெய்வீகக்‌ காட்சியில்‌ அவர்‌ முன்பு தோன்றினர்‌. இத்தகைய சமயங்களில்‌, சபையோரும்‌ கூட, அங்கிருந்த அனைவரின்‌ மீதும்‌ பொழியப்பட்ட விசேஷமான அருளாசியை ஆழமாக உணர்வர்‌. குருதேவர்‌ ஆழ்ந்து நேசித்த அஸிஸியின்‌ புனிதர்‌ ஃபிரான்சிஸ்‌, இவ்விதமான ஒரு தெய்வீகத்‌ தோற்றமளித்தபொழுது குருதேவர்‌, “இறைவா! இறைவா! இறைவா!” என்னும்‌ அழகான
கவிதையைப்‌ புனைவதற்கு மனவெழுச்சியூட்டப்பட்டார்‌.

பகவத்‌ கீதை, ஞானஒளி பெற்ற ஒரு மகானை இவ்வார்த்தைகளில்‌ விவரிக்கிறது: “ஞானத்தால்‌ அஞ்ஞானத்தை அகற்றியவர்‌களிடத்தில்‌, பரம்பொருள்‌ சூரியனைப்‌ போல்‌ பிரகாசிக்கின்றது” (v:16). ஒவ்வொருவரையும்‌ உடனடியாக சகஜமான நிலையில்‌ இருக்கவைத்த பரமஹம்ஸ யோகானந்தருடைய அன்பும்‌ இயல்பான சுபாவமும்‌ மற்றும்‌ அமைதியான அடக்கமும்‌ மட்டும் இல்லாமல்‌ இருந்திருந்தால்‌, அவருடைய ஆன்மீகப்‌ பிரகாசத்தைக்‌ கண்டு, ஒருவர்‌ விக்கித்துப் போக நேர்ந்திருக்கும்‌. சபையிலிருந்த ஒவ்வொரு மனிதரும்‌, குருதேவருடைய உரை தனக்கென தனிப்பட்ட முறையில்‌ ஆற்றப்பட்டதாக உணர்ந்தனர்‌. குருவினுடைய அன்பூட்டும்‌ குணநலன்களில்‌ அவருடைய புரிந்து கொள்ளும்‌ நகைச்சுவை உணர்வு கொஞ்சமும்‌ குறைந்ததல்ல. ஏதோ ஒரு தேர்ந்தெடுத்த சொற்றொடர்‌, சைகை அல்லது முகபாவனை மூலமாக, ஒரு விஷயத்தைப்‌ புரிந்து கொள்ளச்‌ செய்வதற்காகவோ அல்லது குறிப்பிடும்படியான ஓர்‌ ஆழ்ந்த விஷயத்தைப்‌ பற்றி தான்‌ கூறுவதை நீண்ட நேரம்‌ ஒருமுகப்பாட்டுடன்‌ கேட்டுக் கொண்டிருந்தவர்களின்‌ மனத்தைத்‌ தளர்த்துவதற்காகவோ, மிகச்‌ சரியான சமயத்தில்‌ பாராட்டும்‌ விதமான மனமார்ந்த சிரிப்பை சபையோரிடம்‌ இருந்து வெளிக்‌ கொணர்வார்‌.

இந்தத் தொடரின் முதல் தொகுதியான மனிதனின் நிரந்தரத் தேடலில் ஒரு சொற்பொழிவில், பரமஹம்ஸர் கூறுகிறார்: “ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் ஒரு நோக்கம், கடவுளுடன் தனிப்பட்ட தொடர்புக்கான வழியைக் கற்பிப்பதாகும்.” நம்முடைய ஆத்மாக்களில் கடவுளின் முன்னிலையில் வெளிவரக் காத்திருக்கும் மிகப்பெரிய அன்பையும் புரிதலையும் காண நேரத்தை ஒதுக்குபவர்களிடம் தான் மனிதகுலத்தின் உண்மையான நம்பிக்கை இருக்கிறது, அதன் ஓட்டத்தை நம் உலக குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு குணப்படுத்தும் மருந்து போலச் செலுத்துகிறது.

என் மரியாதைக்குரிய குரு எனும் நபரிடமிருந்து அந்த ஆசீர்வாதங்கள் எவ்வளவு உணரும்படியாகப் பரவின. பொதுவில், தெருவில் உள்ள அந்நியர்கள் கூட மரியாதையுடன் விசாரிக்க, தவிர்க்க முடியாமல் இழுக்கப்படுவார்கள்: “அவர் யார்? அந்த மனிதர் யார்?” ஆழ்ந்த தியான காலங்களின் போது அவர் முன்னிலையில், அவர் தெய்வீகத்துடனான கூட்டுறவில் முழுமையாகப் பரவசமடைந்திருப்பதை நாங்கள் கண்டோம். அறை முழுவதும் இறைவனின் அன்பின் ஒளிவட்டம் வீசும். பரமஹம்ஸர் வாழ்க்கைப் பயணத்தின் மிக உயர்ந்த இலக்கை அடைந்தார்; அவரது உதாரணம் மற்றும் வார்த்தைகள் இப்போது உலகளவில் லட்சக் கணக்கானவர்களுக்கான பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தரின் தெளிவான, அன்பான ஆளுமையின் தனித்துவத்தையும் உலகளாவிய தன்மையையும் ஒரு புத்தகத்தின் பக்கங்களில் ஒருவரால் தெரிவிக்க முடியாது. ஆனால் இந்தச் சுருக்கமான பின்னணியைக் கொடுப்பதில், வாசகரின் இன்பத்தையும் இந்த புத்தகத்தில் வழங்கப்பட்ட பேச்சுக்களின் பாராட்டையும் வளமாக்கும் தனிப்பட்ட கணநேரத் தோற்றத்தைப் பெறுவது எனது தாழ்மையான நம்பிக்கையாகும்.

என்‌ குருதேவர்‌ இறைத்‌ தொடர்பில்‌ இருந்ததைக்‌ கண்டிருக்க‌; அவருடைய ஆன்மாவின்‌ ஆழ்ந்த உண்மைகளையும்‌ பக்தியயமான பொழிவுகளையும்‌ செவிமடுத்திருக்க‌; அவற்றை யுகயுகங்களுக்காக பதிவு செய்திருக்க‌; மேலும்‌ இப்பொழுது அவற்றை அனைவருடன்‌ பகிர்ந்து கொள்ள‌ என்னே என்‌ ஆனந்தம்‌! குருதேவரின்‌ உன்னதமான சொற்கள்‌, இறைவனிடம்‌ அசைக்க முடியாத நம்பிக்கைக்கும்‌, நம்‌ அன்புக்குரிய தெய்வத்தந்தை, பேரன்னை மற்றும்‌ நிரந்தர நண்பனுமான அந்தப்‌ பரம்பொருளுக்கான ஆழ்ந்த அன்பிற்கும்‌ நம்மை இட்டுச்‌ செல்லும்‌ கதவுகளை அகலமாகத்‌ திறந்து விடட்டும்.

இதைப் பகிர