நெருங்கிய சீடர்களின் நினைவலைகள்

1996ல் ஒரு யோகியின் சுயசரிதம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவான நிகழ்வின் போது, அப்போதும் நம்முடன் இருந்த பரமஹம்ஸரின் நெருங்கிய சீடர்கள் புத்தகப் பிரதிகள் வந்து சேர்ந்த நாளின் தமது நினைவலைகளையும் அது தம் வாழ்வில் ஏற்படுத்தித தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டனர். அந்தப் பக்கங்களிலிருந்து தோன்றிய தெய்வீக ஞானம், அன்பு, வாழ்க்கையின் நிலைமாற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை முதலில் அனுபவித்தவர்களில் ஒரு சிலராக அவர்கள் இருந்தனர்; அந்தப் பக்கங்கள் அப்போதிருந்து இலட்சக்கணக்கான வாழ்க்கைகளை மாற்றியிருக்கிறது.

Mother of compassion — Daya Mata.
ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் மூன்றாவது தலைவி (1955-2010)

குருதேவர் எங்களிடம் கூறினார்: “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பின், இப்புத்தகம் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கைகளை மாற்றும். நான் சென்றுவிட்ட பின் அது என் தூதுவராக இருக்கும்.”

ரு யோகியின் சுயசரிதத்தின் உருவாக்கம் பரமஹம்ஸ யோகானந்தர் பல வருட காலமாக அதன் மீது உழைத்த ஒரு திட்டப்பணி ஆகும். நான் 1931-ல் மௌண்ட் வாஷிங்டனுக்கு வந்த போது, பரமஹம்ஸர் சுயசரிதத்திற்கான பணியை ஏற்கனவே துவங்கி விட்டிருந்தார். ஒரு முறை நான் அவருடைய வாசிப்பு அறையில் செயலாளருக்குரிய சில கடமைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, அவர் எழுதிய முதல் அத்தியாயங்களில் ஒன்றை பார்க்கும் பேறு பெற்றேன் — அது ‘புலிச்சாமியார்’ பற்றியது. அதைப் பாதுகாக்கும்படி அவர் என்னிடம் கூறினார், மேலும் அவர் எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்தில் அது சேர்க்கப்படப் போகிறது என்று விளக்கினார்.

இருப்பினும், 1937க்கும் 1945க்கும் இடையில் புத்தகத்தின் பெரும் பகுதி எழுதப்பட்டுவிட்டது. பரமஹம்ஸருக்கு பல பொறுப்புகளும் கடமைகளும் இருந்ததால் அவரால் தினசரி இப்புத்தகத்தின் மீது பணி செய்ய முடியவில்லை; ஆனால் பொதுவாக, அவர் மாலை வேளைகளை, அத்துடன் அவரால் அதன்மீது கவனம் வைக்க முடிந்த ஓய்வு நேரங்களையும், அதற்காக அர்ப்பணித்தார்.

எங்களுடைய ஒரு சிறு குழு — ஆனந்த மாதா (கீழே), ஷ்ரத்தா மாதா, மற்றும் நான் — பெரும்பான்மையான அந்த நேரங்களில் கையெழுத்துப் பிரதிகளை தட்டச்சு செய்தவாறு, அவரின் அருகில் இருந்தோம். ஒவ்வொரு பகுதியும் தட்டச்சு செய்யப்பட்ட பிறகு, தன் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய தாரா மாதாவிடம் குருதேவர் கொடுப்பார்.

ஒருநாள் தன் சுயசரிதத்தின் மீது பணி செய்துகொண்டிருந்த போது, குருதேவர் எங்களிடம் கூறினார்: “நான் இவ்வுலகை விட்டுச் சென்ற பின், இப்புத்தகம் இலட்சக்கணக்கான வாழ்க்கைகளை மாற்றும். நான் சென்றுவிட்ட பின் அது என் தூதுவராக இருக்கும்.”

மூல வரைவுப்படி நிறைவுற்ற போது, தாரா மாதா அதற்கான ஒரு வெளியீட்டாளரைத் தேடி நியூ யார்க் நகருக்குச் சென்றார். பரமஹம்ஸர் அவருடைய அறிவிற்காகவும் பதிப்பாசிரியத் திறமைக்காகவும் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் மற்றும் அடிக்கடி அவரை வெளிப்படையாகப் புகழ்ந்தார். அவர் கூறினார்: “இப்புதகத்திற்காக [அவர்] செய்திருப்பதை என்னால் எடுத்துரைக்கத் தொடங்கக்கூட முடியாது. நியூ யார்க் நகருக்குச் செல்லுமுன் அவர் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இருந்தாலும் அப்படியே நியூ யார்க் நகருக்குக் கிளம்பினார். அவரின்றி, இப்புத்தகம் ஒருபோதும் வெளிவந்திருக்காது.”

புத்தகத்தின் நிறைவிற்கு குருதேவர் ஆற்றிய எதிர்வினை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத ஆனந்தமாக இருந்தது. என்னுடைய பிரதியில், ஆசிரமங்களில் அப்போதிருந்த மற்ற பக்தர்களில் பலருக்கும் செய்ததைப் போலவே, கையெழுத்துப் பதிவிட்டார். கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சு செய்ய உதவியிருந்ததால், அதை நான் பெற்ற போது இது ஓர் அமரத்துவ நூல் — இதற்கு முன் ஒருபோதும் அத்தகைய ஒரு தெளிவான மற்றும் உத்வேகமூட்டும் வழியில் வழங்கியிராத மறைபொருள் உண்மைகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஒன்று — என்று நான் அறிந்தேன். அற்புதங்கள், மறுபிறவி, கர்மவினை, மரணத்திற்குப் பின் வாழ்வு ஆகியவற்றின் மற்றும் அதன் பக்கங்களில் உள்ளடக்கப்பட்ட மற்ற அற்புதமான ஆன்மீக உண்மைகளின் குருதேவருடைய விளக்கத்தை வேறு எந்த ஆசிரியரும் அணுகியிருக்கவில்லை.

புத்தகத்தின் இன்றைய கீர்த்திக்கு அவருடைய எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? யோகியின் சுயசரிதம் ஒவ்வொரு கலாச்சாரம், இனம், மதம், மற்றும் வயது கொண்ட மக்களுக்கும் பூமியின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்றடைந்திருப்பதை மற்றும் அது இந்த ஐம்பது வருடங்களாக மிகப்பெரிய புகழுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கப்பட்டிருப்பதை எண்ணி அவர் பணிவுடன் நெகிழ்ந்திருப்பார். குருதேவர் தனது சொந்த முக்கியத்துவத்தின் மீது ஒருபோதும் கவனம் செலுத்தியிராத போதிலும், அவர் நிச்சயமாக தான் எழுதியதின் பெரும் மதிப்பின்மீது நம்பிக்கை வைத்திருந்தார் — ஏனெனில் தான் பேருண்மையை எழுதிக் கொண்டிருந்ததை அவர் அறிந்திருந்தார்.

தாரா மாதா (லாரி பிராட்) வுக்காக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புத்தகம். ஒரு யோகியின் சுயசரித்தின் ஆசிரியரின் நன்றியுரையில் குறிப்பிடும் அஞ்சலியில், பரமஹம்ஸர் தனது கையெழுத்துப் பிரதியைத் தொகுத்தமைத்த தாரா மாதாவின் பங்கிற்கு தனது பாராட்டைத் தெரிவிக்கிறார். இந்தப் புத்தகத்தின் அவருடைய பிரதியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள், இந்த மதிப்பு மிக்க சீடரின் சேவையில் அவர் கொண்டிருந்த ஆழமான மதிப்பைப் பற்றிய உள்ளார்ந்த அறிதலை தெரிவிக்கிறது.

தாரா மாதா- ஒரு யோகியின் சுயசரிதத்தின் பதிப்பாசிரியர்
தாரா மாதாவிற்கு யோகனந்தரின் பாராட்டுக் கடிதம்

நம் லாரி பிராட்டிற்கு,

“இந்த புத்தகத்தின் வெளியீட்டில் உங்கள் துணிவான மற்றும் அன்பான பங்கிற்காக இறைவனும் குருமார்களும் எப்போதும் உங்களுக்கு அருளாசிகள் வழங்கட்டும். ப. யோ.”

“இறுதியில் இறைவன், எனது குருமார்கள், ஆசான்கள் ஆகியோரின் புனித நறுமணம் என் ஆன்மாவின் இரகசியக் கதவுகள் வழியாக வெளிவந்துள்ளது — லாரி பிராட் மற்றும் பிற சீடர்களின் முடிவற்ற இடையூறுகள் மற்றும் இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு அனைத்துத் துன்பக் கட்டுக்களும் நித்திய ஆனந்தச் சுடரில் எரிந்து கொண்டிருக்கின்றன.”

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் நான்காவது தலைவி (2011-2017)

ஒரு யோகியின் சுயசரிதம் ஒரு தெய்வீக இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது — இறுதியில் குருதேவரின் அருளாசிகளையும் இறையன்பையும் லட்சக்கணக்கான இறைநாடும் ஆன்மங்களுக்கு எடுத்துச் செல்ல.”

என்சினிடாஸ் ஆசிரமத்தில் ஒரு நாள் மாலை, 1946ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இளைய பக்தர்களான நாங்கள் எங்கள் சமையலறைக் கடமைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பொழுது, குருதேவர் அங்கு வந்தார். அனைத்துச் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டன, மற்றும் எங்கள் கவனம் அவரது பரந்த புன்னகை மீதும் வழக்கமான மினுமினுப்பை விட இன்னும் சற்று அழகாக இருந்த அவரது கண்களின் மீதும் குவிந்தது. அவரது கை அவரது முதுகுக்குப் பின்னால் இருந்தது, “எதையோ” மறைத்தது. அவர் இன்னும் சிலரை வரவழைத்து, எங்களை அவருக்கு முன்னால் வரிசையில் இருக்கச் செய்தார். பின்னர் அவர் மறைத்திருந்த புதையலை எங்கள் முன் காட்டினார் — அவரது ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்தின் ஒரு முன்னீடான பிரதி.

“ஓஹோ’ க்களுக்கும்” “ஆஹா’க்களுக்கும்” மத்தியில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் மகத்தான மகான்கள் மற்றும் முனிவர்களிடையேயான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்த்து, எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியவில்லை — அவருடன் கழித்த, அவரது விலைமதிப்பற்ற நேரங்களில், இந்த நிகழ்வுகளினால் அடிக்கடி எங்களை ஈர்த்தார். அவர் சில பக்கங்களைத் திறந்தார், கடைசியாக மகாவதார பாபாஜியின் படத்தைக் காட்டினார். கிட்டத்தட்ட மூச்சற்று நாங்கள் எங்கள் மரியாதையைச் செலுத்தி எங்கள் பரம்-பரமகுருவின் சாயலில் இருந்தவரை முதலில் கண்டவர்களில் ஒருவராக நாங்கள் இருக்க கிடைத்த அருளாசிகளில் மூழ்கினோம்.

டிசம்பர் தொடக்கத்தில், வெளியீட்டாளரிடமிருந்து புத்தகக் கட்டுகள் வரும் நிகழ்வில் பங்கேற்கவும், முன்கூட்டியே ஆர்டர் செய்து ஆவலுடன் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அனுப்ப தயார் செய்வதற்காகவும் நாங்கள் அனைவரும் மவுண்ட் வாஷிங்டனுக்கு அழைக்கப்பட்டோம். குறித்த காலத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே, நேரம் கிடைத்த எங்களில், எவரொருவரும் பழைய கைமுறை பெரிய தட்டச்சுப் பொறிகளில் ஒன்றில் முகவரி லேபிள்களை தட்டச்சு செய்வதில் ஈடுபட்டோம். பெரிய மேஜைகள் (ரம்பச் சட்டத்தின் மேல் தட்டையான பலகைகள்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டன, ஒரு பெரிய ரோலில் இருந்து பழுப்பு அஞ்சல் காகிதம் ஒவ்வொரு தனி புத்தகத்தையும் வரிசை கிரமமாக உறையிடத் தயாராக இருந்தது, அதைச் சரியான அளவுக்கு கையால் வெட்டி, ஈரமான நுரைப் பஞ்சு பயன்படுத்தி ஈரப்பதமான லேபிள்கள் மற்றும் அஞ்சல் தலைகளை ஒட்டினோம். அந்த நாட்களில் தானியங்கிகள் அல்லது அஞ்சல் இயந்திரங்கள் இல்லை! ஆனால் ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் வரலாற்றில் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதில் ஓ, என்ன மகிழ்ச்சி. இந்த உன்னதமான தூதரின் மூலம் நமது புனித குருதேவரை உலகம் அறிந்துகொள்ளும்.

மூன்றாவது மாடி முன்கூடத்தில், குருதேவர் ஒரு மேஜையில் இடைவிடாமல் மணிக்கணக்கில் அமர்ந்து, ஒவ்வொரு புத்தகத்திலும் கையெழுத்திட்டார். வெளியீட்டாளர் அனுப்பிய அட்டைப்பெட்டிகளில் இருந்து புத்தகங்கள் அகற்றப்பட்டு, திறக்கப்பட்டு, அவர் ஒவ்வொன்றிலும் கையெழுத்திட்டுக் கொண்டே வரும்போது, ஒரு சீரான ஓட்ட்த்தில் புத்தகங்கள் அவருக்கு முன் வைக்கப்பட்டன – ஒவ்வொரு மையூற்றுப் பேனாவும் காலியாகும் போது, மற்றொன்று மீண்டும் நிரப்பிக் வைக்கப்பட்டது.

அவர் என்னை மாடிக்கு வருமாறு அழைத்தபோது தாமதமாகிவிட்டது. அவர் இன்னும் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். மூத்த சீடர்கள் அவரைச் சிறிது ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தினர், ஆனால் வெளியீட்டாளர் அனுப்பிய பெட்டியில் இருந்த ஒவ்வொரு புத்தகமும் அவரது அருளாசிகளுடன் கையொப்பமிடப்படும் வரை அவர் அதைப் பரிசீலிக்கக்கூட மறுத்துவிட்டார். அவர் முகத்தில் மிகுந்த பேரின்ப வெளிப்பாடு இருந்தது, தன்னிலிருந்து, உண்மையான பகுதி ஒன்றும் தன் இறையன்பும் அந்த அச்சிடப்பட்ட பக்கங்களில் உலகம் முழுவதும் வெளியே போகிறது என்பதுபோலவும், அது ஒரு கூடுதல் கணம் நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்பது போலவும் இருந்தது.

வெளிப்படுத்த முடியாத ஆனந்தத்துடன் நாங்கள் அதிகாலையில் தியானம் செய்ய அவரது காலடியில் அமர்ந்தோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் பொக்கிஷத்தின் ஒரு தனிப்பிரதியை குருதேவர் எங்களிடம் கொடுத்திருந்தார். மற்ற எல்லா பிரதிகளும் காலையில் அஞ்சலில் அனுப்புவதற்காக சுற்றப்பட்டிருந்தன அல்லது ஹாலிவுட் மற்றும் சான் டியாகோவில் உள்ள அவரது கோயில்களுக்கு அனுப்புவதற்காக கட்டப் பட்டிருந்தது. ஒரு யோகியின் சுயசரிதம் ஒரு தெய்வீக இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது — இறுதியில் குருதேவரின் அருளாசிகளையும் இறையன்பையும் லட்சக்கணக்கான இறைநாடும் ஆன்மங்களுக்கு எடுத்துச் செல்ல.

சைலசுதா மாதா

“இரவு முழுவதும் அவர் சொல்வதை எழுதச் சொல்லும் காலகட்டங்கள் இருந்ததை நினைவு கூருகிறேன், மற்றும் அது நாள் முழுவதும் அல்லது அதற்கு மேலும் தொடரும் சந்தர்ப்பங்களும் இருந்தன.”

பரமஹம்ஸர் ஒரு யோகியின் சுயசரிதத்தை எழுதிக் கொண்டிருந்தபோது எங்களில் சிலர் மட்டுமே என்சினிடாஸ் ஆசிரமத்தில் வசித்து வந்தோம். இந்தத் திட்டம் முடிவடைய அவருக்கு நிறைய வருடங்கள் ஆயின. அந்தச் சமயத்தில் நானும் சில காலம் அங்கு வசித்துக் கொண்டிருந்தேன்.

குருதேவர் அந்தப் புத்தகத்தின் பெரும்பாலானவற்றை ஆசிரமத்தில் தனது வாசிப்பு அறையில் எழுதினார். இரவு முழுவதும் அவர் சொல்வதை எழுதச் சொல்லும் காலகட்டங்கள் இருந்ததை நினைவு கூருகிறேன், மற்றும் அது நாள் முழுவதும் அல்லது அதற்கு மேலும் தொடரும் சந்தர்ப்பங்களும் இருந்தன. தயா மா, ஆனந்த மா ஆகியவர்களைப் போல் செயலகக் கடமைகளில் நான் ஈடுபடவில்லை. அவர்கள் சில நேரங்களில் அவரது வார்த்தைகளை சுருக்கெழுத்தில் எடுப்பார்கள், மற்ற நேரங்களில் தட்டச்சுப் பொறியைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் தடையின்றி வேலை செய்வதற்காக, என் பொறுப்பு பெரும்பாலும், அவர்களின் உணவை சமைப்பது!

வெளியீட்டாளரிடமிருந்து ஒரு யோகியின் சுயசரிதம் வந்தபோது, மகிழ்ச்சிப் பரவசம் இருந்தது. உடனே குருதேவர், முன்கூட்டியே ஆர்டர் செய்த அனைவருக்கும் தனது புத்தகத்தை நாங்கள் அனுப்ப வேண்டும் என்று விரும்பினார்! எனவே ஆரம்பக் கொண்டாட்டத்திற்குப் பிறகு, நாங்கள் குவிந்து விட்ட தேங்கிய ஆர்டர்களை நிரப்புவதில் மிகவும் மும்மரமாக இருந்தோம். சகோதரி ஷிலாவும் நானும் பல பிரதிகளை உறையிட்டு, அஞ்சலிட்டோம், அனைத்தையும் தயார் நிலையில் வைத்தோம். பின்னர் நாங்கள் காரை அருகில் கொண்டு வந்து, டிரங்க் மற்றும் அனைத்து கதவுகளையும் திறந்தோம். கார் முழுவதுமாக நிரப்பப்பட்டபோது, நாங்கள் அந்த புத்தகக் கட்டுகளை லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள முக்கிய தபால் அலுவலகத்திற்கு ஓட்டிச் சென்றோம். நாங்கள் பெரு மகிழ்ச்சியடைந்தோம்: கடைசியாக ஒரு யோகியின் சுயசரிதம் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு கிடைக்கப் போகிறது!

சுவாமி ஆனந்தமோய்

“நான் விரும்பியதை கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என் இதயத்தில் அறிந்தேன், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் படித்து இறைவனை அறியவேண்டும் என மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.”

ஒரு பெரிய நகரங்களில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் வின்டர்தூரின் புறநகர்ப் பகுதியில் ஓர் அத்தை மற்றும் மாமாவுடன் கோடை விடுமுறையைக் கழித்தபோது நான் என் பதின்ம வயதில் இருந்தேன். என் மாமா ஒரு இசைக்கலைஞர், சிம்பொனி இசைக்குழுவின் உறுப்பினர். அவரும் விடுமுறையில் இருந்தார், அதை அவர் தனது பெரிய தோட்டத்தில் வேலை செய்து கழித்தார். நான் அவருக்கு உதவினேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், என் மாமா என் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார், தோட்ட வேலையின் போது நீண்ட “பேசும் பொழுதுகள்” இருந்தன. என் மாமா கீழை நாடுகளின் தத்துவத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்ததைக் கண்டேன், மற்றும் கர்ம வினைகள், மறுபிறவி, சூட்சும மற்றும் காரண நிலைகள், மற்றும் குறிப்பாக மகான்கள் — ஞான ஒளி பெற்ற ஆசான்கள் — பற்றிய அவரது உரைகளை நான் மிகுந்த கவனத்துடன் கேட்டேன்.

புத்தரைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நிலையை அவர் எப்படி அடைந்தார் என்பதையும், மற்ற மகான்களைப் பற்றியும் அவர் என்னிடம் கூறினார். அது அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பத்தை என்னுள் தூண்டியது. ஞான ஒளி, ஞான ஒளி என்று நான் அகத்துள் திரும்பத் திரும்பத் சொல்லியபடியே எப்படி சுற்றி நடந்து கொண்டிருந்தேன் என்று நினைவு கூருகிறேன். அந்த வார்த்தையின் முழுப் பொருளையும் நான் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், சாதாரண மனிதன் தனது பொருள்சார் அல்லது கலை வாழ்க்கையில் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், அவனிடம் உள்ளதை விட இது மிகவும் பெரியது என்ற அளவுக்கு எனக்குத் தெரிந்தது. அந்த நிலையை ஒருவர் எப்படி அடைய முடியும் என்று நான் என் மாமாவிடம் கேட்டேன், ஆனால் அவர் சொல்லக்கூடிய ஒரே விஷயம், ஒருவர் தியானம் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் எப்படி என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை. எல்லாவற்றையும் கற்பிக்கக்கூடிய ஒரு குரு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நான் ஒரு குருவைச் சந்திக்கும் என் மிகப்பெரிய ஆசையை வெளிப்படுத்திய போது, அவர் தலையை குலுக்கி புன்னகைத்தார். “என் இரங்கத்தக்க சிறுவனே,’ சுவிட்சர்லாந்தில் குருமார்கள் இல்லை!”

எனவே நான் ஒரு குருவுக்காக பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். ஒரு குருவுக்கான என் ஏக்கம் எவ்வளவு அதிகமாக இருந்தது என்றால், நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு ரயில் நிலையத்திற்குச் சென்று, “அவர்” வருவார் என்ற நம்பிக்கையில் மணிக்கணக்கில் காத்திருந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

நான் என் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, விரக்தியுடன் இருந்த இரண்டு ஆண்டுகள் என் தந்தையின் வியாபாரத்தில் வேலை செய்தேன். அதற்குள் நான் இந்துத் தத்துவத்தில் எனக்கு இருந்த ஆர்வத்தை விட்டுவிட்டேன். ஏனென்றால் எனக்கு ஒரு குருவைக் கண்டறிவது சாத்தியமற்றதாகத் தோன்றியது. நான் கலைத் தொழிலில் ஈடுபட்டேன், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான ஃபிராங்க் லாயிட் ரைட்டுடன் படிக்க அமெரிக்கா செல்ல அழைக்கப்பட்டேன்.

அமெரிக்காவில் என் முதல் வாரத்தில், 1920களில் இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்த ஒரு மாமாவை சந்தித்தேன். ஒரு உரையாடலின் போது அவர் இந்துத் தத்துவத்தைக் குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விஷயத்தில் எனக்கு ஆர்வம் இருந்தது என்று நான் அவரிடம் சொன்னபோது, அவரது முகம் ஒளிர்ந்தது, அவர் என்னைத் தனது தனிப்பட்ட வாசிப்பு அறைக்கு அழைத்துச் சென்று ஒரு யோகியின் சுயசரிதத்தைக் காட்டினார். அட்டையில் இருந்த பரமஹம்ஸ யோகானந்தரின் படத்தைச் சுட்டிக்காட்டி, “அவரைப் பற்றி நீ எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னபோது, அவர், “நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த மனிதர். அவர் ஓர் உண்மையான குரு!” என்று பதிலளித்தார்.

“நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா?” நான் முற்றிலும் ஆச்சரியத்தில் அழுதேன். “அவர் எங்கே இருக்கிறார் – அமெரிக்காவில் இல்லையா!?”

“ஆம், அவர் லாஸ் ஏஞ்சலீஸில் வசிக்கிறார். “பின்னர் அவர் இந்த நாட்டிற்கு வந்த உடனேயே பரமஹம்ஸரின் தொடர் விரிவுரைகள் மற்றும் வகுப்புகளில் தான் எப்படி கலந்து கொண்டார் என்பதை என்னிடம் கூறினார். இதை நினைத்துப் பார்த்தேன், இத்தனை ஆண்டுகளாக நான் ஒரு குருவுக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது, என் மாமாவுக்கு ஒரு குருவும் அவரது போதனைகளும் தெரிந்திருக்கிறது!

நான் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகத்தைப் படித்தேன். அதுதான் முதல் அதிசயம். நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், இதுவே ஒரு அதிசயம் என்று கூட நான் கவனிக்கவில்லை — அந்த மொழியில் ஒரு புத்தகத்தைப் படிக்க போதுமான ஆங்கிலம் எனக்குத் தெரியாது. ஃபிராங்க் லாயிட் ரைட்டும் ஒரு சுயசரிதம் எழுதியிருந்தார், ஆனால் முதல் இரண்டு பக்கங்களைப் படிக்க நான் எடுத்த முயற்சி வீணானது. அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிவதற்கு முன்பு ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் எனக்கு ஒரு முழு கூடுதல் ஆண்டு பிடித்தது. ஆயினும் ஒரு யோகியின் சுயசரிதத்தை அட்டையிலிருந்து அட்டைவரை என்னால் படிக்க முடிந்தது.

நான் விரும்பியதை கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என் இதயத்தில் அறிந்தேன், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் படித்து இறைவனை அறியவேண்டும் என மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.

நான் மேலும் ஆங்கிலம் கற்றுக்கொண்ட சில மாதங்களுக்குப் பிறகு, குருவைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் லாஸ் ஏஞ்சலீஸுக்கு ஒரு பயணம் மேற்கொண்டேன். நான் மதர் சென்டரின் நிலத் தளத்தில் நுழைந்தபோது, இதற்கு முன் எங்கும் நான் அனுபவித்திராத ஒரு பெரும் அமைதியை உணர்ந்தேன். நான் புனிதத் தரையில் நின்றேன் என்பதை உணர்ந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை காலை நான் ஹாலிவுட் கோவிலில் பரமஹம்ஸரின் காலை சத்சங்கத்தில் கலந்து கொண்டேன். நான் அவரை நேருக்கு நேர் பார்ப்பது இதுவே முதல் முறையாகும். இது ஒரு மறக்க முடியாத அனுபவம். சத்சங்கம் முடிந்ததும், குருதேவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார், சபையின் பெரும்பகுதி அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மேலே சென்றது. நான் வரிசையில் நின்றபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது. இறுதியாக நான் அவருக்கு முன்னால் நின்றபோது, அவர் என் கையை அவரது கையில் எடுத்தார், நான் அந்த ஆழமான ஒளிரும் மென்மையான கண்களைப் பார்த்தேன். எந்த வார்த்தையும் பேசப்படவில்லை. ஆனால் அவரது கை மற்றும் கண்களின் மூலம் விவரிக்க முடியாத ஆனந்தம் என்னுள் வருவதை நான் உணர்ந்தேன்.

நான் கோயிலை விட்டு வெளியேறி சன்செட் பவுல்வார்டில் ஒரு பிரமிப்பில் நடந்தேன். என்னால் நேராக நடக்க முடியாத அளவிற்கு ஆனந்தத்தினால் எற்ப்பட்ட மயக்கத்தில் இருந்தேன். நான் ஒரு குடிகாரன் போல் தடுமாறினேன். அது மட்டுமல்ல, என் ஆனந்தத்தைக என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை, சத்தமாக சிரித்தேன். நடைபாதையில் இருந்த மக்கள் திரும்பி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்; என்னை நோக்கி நடந்து கொண்டிருந்தவர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களின் குடிவெறி என்று கருதிய படி வெறுப்போடு தலையை ஆட்டியபடி பக்கவாட்டில் நகர்ந்தனர். நான் கவலைப்படவில்லை. நான் என் வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

இந்த அனுபவம் ஏற்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, நான் ஒரு சன்னியாசியாக ஸெல்ஃப்-ரியலைசெஷன்  ஃபெலோஷிப் ஆசிரமத்தில் நுழைந்தேன்.

சுவாமி பிரேமாமோய்

“கட்டுண்ட நிலையில், அவர் முழுப் புத்தகத்தையும் ஒரே அமர்வில் முடித்தார். தான் சந்தித்த எவருக்கும் இல்லாத ஆன்மீக நுண்ணறிவு ஆசிரியருக்கு இருப்பதை உணர்ந்த பிரேமமோய் அவர்கள் பரமஹம்ஸ யோகனந்தருக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.”

பரமஹம்ஸ யோகானந்தரின் சன்னியாசி சீடராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக  இருந்த ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசி சுவாமி பிரேமமோய், 1990 இல் மறையும் வரை இளம் துறவிகளின் ஆன்மீக பயிற்சிக்கு பொறுப்பாளாராக இருந்தார். அவர்களிடம் இந்தக் கதையை விவரித்துள்ளார்.

சுவாமி பிரேமமோய் ஸ்லோவேனியாவில் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கம்யூனிஸ்டு தனது பூர்வீக நிலத்தை எடுத்துக் கொண்ட பின்னர், அரச குடும்பம் மற்றும் செல்வாக்கு கொண்ட மற்றவர்களுடனான அவரது குடும்பத் தொடர்புகள் காரணமாக அவர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1950ல், அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு அழைத்தது.

1950 ஆம் ஆண்டின் இறுதியில் நியூயார்க்கிற்கு பயணம் செய்வதற்கு சற்று முன்பு, சுவாமி பிரேமமோயிக்கு குடும்பத்தின் பழைய நண்பரான எவெலினா கிளான்ஸ்மேன் பிரியாவிடை பரிசு வழங்கினார். பரிசின் வடிவம் அது ஒரு மிட்டாய் பெட்டி என்று கருத வைத்தது. கப்பலில் அவர் சக பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள அதைத் திறந்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில் அந்த தொகுப்பு மிட்டாய் அல்ல, ஆனால் ஒரு புத்தகம் – ஒரு யோகியின் சுயசரிதம்.

அந்தப் பரிசைக் கண்டு நெகிழ்ந்து விட்டாலும், பிரேமமோய் அவர்கள் உடனடியாக அதைப் படிக்க விரும்பவில்லை. இளமையாக இருந்தபோது அவர் ஒரு ஆர்வமுள்ள வாசிப்பாளராக இருந்தபோதிலும், அந்த நாட்கள் முடிந்துவிட்டன. (அவர் தனது வாழ்நாள் முழுவதும் படித்ததை விட பதினைந்து வயதிற்கு முன்பே அதிக புத்தகங்களைப் படித்ததாக பின்னர் கூறினார்). மேலும், அவருக்கு கீழை நாடுகளின் தத்துவத்துவம் மிகவும் பரிச்சியப்பட்டது, ஒரு பதின்பருவத்தில் பகவத் கீதையின் மேல் பேரன்பு கொண்டு, அதில் பெரும்பாலானதை அவர் மனப்பாடம் செய்தார். இப்போது, இந்த பரிசுப் புத்தகத்தின் விஷயத்தைப் பார்த்து, அவரது முதல் எண்ணம், “நான் இதைப் படிக்கப் போவதில்லை — நான் கவர்ந்திழுக்கப் படவிரும்பவில்லை!”

அமெரிக்காவில், அவர் பல்வேறு வணிக நிறுவனங்களில் ஈடுபடுத்திக்கொண்டார், இறுதியில் அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் டாக் ஹம்மார்ஸ்க்ஜோல்ட் -ன் தனிப்பட்ட உதவியாளர் பதவி வழங்கப்பட்டது, (அவர் கலிபோர்னியாவுக்கு வருவதற்கு முன்பு அந்தப் பதவியை நிராகரித்தார்.) மாதங்கள் சென்றன – மற்றும் சுயசரிதம் நியூயார்க்கில் உள்ள பிரேமமோய் அவர்களின் வீட்டில் படிக்கப்படாமல் அலமாரியில் இருந்தது. இதற்கிடையில், திருமதி கிளான்ஸ்மேன் (சுயசரிதத்தின் இத்தாலிய பதிப்பின் மொழிபெயர்ப்பாளர்) புத்தகத்தைப் பற்றிய தனது நண்பரின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் சுவாமி பிரேமமோய் படிக்க இன்னும் முயற்சிக்கவில்லை. இறுதியாக திருமதி கிளான்ஸ்மேன்: “நீங்கள் அதை விரும்புகிறீர்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்; ஆனால் ஏதாவது சொல்லுங்கள்!” என்ற அர்த்ததில் ஒரு சிந்தனையில் மூழ்கிய மனநிலையில் வார்த்தைகளை எழுதினார் — இது நடந்தது, மார்ச் 6, அவரது பிறந்த நாள் அன்று, என்ன செய்ய வேண்டும் என்று அவர் தனது வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார் — அவர் புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினார்.

கட்டுண்ட நிலையில், அவர் முழுப் புத்தகத்தையும் ஒரே அமர்வில் முடித்தார். தான் சந்தித்த எவருக்கும் இல்லாத ஆன்மீக நுண்ணறிவு ஆசிரியருக்கு இருப்பதை உணர்ந்த பிரேமமோய் அவர்கள் பரமஹம்ஸ யோகனந்தருக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.

அந்தக் கடிதத்தை அனுப்பியபோது, குரு தனது பூமிக்குரிய வாழ்வின் இறுதி நாளில் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பது பிரேமமோய் அவர்களுக்குத் தெரியாது.

சில காலம் கழித்து, ஸ்ரீ தயா மாதா தனது கடிதத்திற்கு பதிலளித்தபோது, குரு மறைந்து விட்டதை சுவாமி பிரேமமோய் அறிந்தார். பல மாதங்கள் கழிந்தன; பிரேமமோய் அவர்களுக்கு அந்தப் புத்தகத்தையும் அதன் ஆசிரியரையும் பற்றிய எண்ணத்தை மனதில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அந்தக் கோடையில் அவர் பரமஹம்ஸரின் போதனைகளைப் பற்றி மேலும் அறிய லாஸ் ஏஞ்சலீஸுக்கு செல்ல முடிவு செய்தார். அவர் முதல் முறையாக ஸெல்ஃப்-ரியலைசெஷன் ஃபெலோஷிப் தலைமையகத்தின் நிலத் தளத்தில் நடந்து சென்றபோது, உடனடியாக ஒரு புன்னகைக்கும் அந்நியரால் அணுகப்பட்டார். ஒரு பிரகாசமான புன்னகையுடன், அந்த மனிதர் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் மிகவும் வரவேற்கப்படுகிற ஒரு பழைய நண்பரை எதிர்கொள்வது போல் அவரை அன்புடன் தழுவிக் கொண்டார். வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படவில்லை, பின்னர்தான் பிரேமமோய் அவர்கள் தனது புதிய “பழைய நண்பருக்கு” முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார் — ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர், நிறுவனத்தின் தலைவர் என!

இவ்வாறாக, பரமஹம்ஸர் தனது “தூதராக” என்று கூறிய புத்தகம் மேலும் ஒரு ஆன்மாமீது அதன் மாய வித்தையை நிகழ்த்தியது – அந்த நாளிலிருந்து, சுவாமி பிரேமமோயின் வாழ்க்கைக்கான போக்கு அமைக்கப்பட்டது.

சகோதரி சாந்தி

“நான் இரவில் அதைப் படித்தேன், நான் வேலையில் இருந்தபோது என் தாய் அதைப் படித்தாள். மெய்ப் பொருளின் உலகில் நுழையும் அனுபவத்தில் நாங்கள் மூழ்கியிருந்த விதத்தை விவரிக்க “வாசிப்பு” அநேகமாய் போதுமானதாக இல்லை. வாழ்க்கையின் தோற்றம், சீடராக இருத்தல், கிரியா யோக போதனை — அனைத்தும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டன.”

அது 1952, நான் லாஸ் ஏஞ்சலீஸ் வில்ஷைர் பவுல்வார்ட் அம்பாசடர் ஹோட்டலில் உதவி மேலாளரின் செயலாளராக பணியமர்த்தப்பட்டிருந்தேன்: மிக உயர்ந்த ஒரு அமைப்பில் ஒரு சுவரஸ்யமான வேலை, அங்கு நான் உலக புகழ்பெற்ற பிரபலங்கள் பலரைச் சந்தித்தேன். ஆனால் என் காதில் சொல்லப்பட்ட ஒரு பெயரின் ஒலி என் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நான் அறிந்திருக்கவில்லை.

மார்ச் 6 அன்று, ஒரு திரைப்படத் தயாரிப்பாளரின் செயலாளர் ஹோட்டலை அழைத்து பரமஹம்ஸ யோகானந்தருக்கு ஒரு செய்தியை அனுப்புமாறு கேட்டார். நான் அந்த பெயரைக் கேட்ட கணத்தில், என் மார்பில் ஒரு பெரிய “காண்டா மணி” ஒலித்தது; என் தலை நீந்தியது, என் இதயத்திலும் மனத்திலும் ஆனந்தம் பொங்கியது, செய்தி விநியோகத்திற்கு ஏற்பாடு செய்ய முன்பதிவு மேஜைக்கு நான் சென்றபோது என்னால் நேராக நடக்கக்கூட முடியவில்லை. அந்த பெயர் எதுவும் ஹோட்டலில் பதிவு செய்யப்படவில்லை, இருப்பினும் இந்தியத் தூதரும் அவரது பரிவாரங்களும் தற்போது தங்கி இருக்கின்றனர் என்று என்னிடம் கூறப்பட்டது. என் அலுவலகத்திற்குத் திரும்பும் வழியில் அந்தப் பெயர் என் உணர்வில் சுழன்று கொண்டே இருந்தது, நான் அன்பினாலும் ஆனந்தத்தினாலும் மேன்மேலும் நிறைந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு திரைப்படத் தயாரிப்பாளர் அழைத்து, “என் செயலாளர் உங்களுக்கு என்ன பெயர் சொன்னார்?” என்று கேட்டார். நான் அவரிடம் “பரமஹம்ஸ யோகானந்தா” என்று சொன்னேன், அவர் வியப்புடன் கூறினார், “அவர் அப்படி சொன்னதை நான் கேட்டதாகத்தான் நினைத்தேன்! நான் அவருக்கு கொடுத்த பெயர் அதுவல்ல. அவர் ஏன் அதை சொன்னார் என்று அவருக்குத் தெரியவில்லை!”

அந்த நாளின் எஞ்சிய நேரத்தில் நான் ஒரு விசித்திரமான உள்ளார்ந்த விழிப்புணர்வில் இருந்தேன், அந்தப் பெயருடன் ஆழமான தொடர்பு உணர்வை அனுபவித்தேன். பின்னர் பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதியின் பெரு நிகழ்ச்சிக்குரிய தினமான மார்ச் 7 வந்தது. நான் அதைப் பற்றி பத்திரிகையில் படித்தேன் மற்றும் நான் என் சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேன். அது மிகுந்த அதிச்சியாக இருந்தது! என் வாழ்க்கை திடீரென்று முடிந்துவிட்டது என்று தோன்றியது. நான் நினைத்துக் கொண்டே இருந்தேன், நான் அவரைத் தவறவிட்டேன்! நான் அவருக்காக என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன், நான் அவரை தவறவிட்டேன்! ஆனால் உண்மையகாவே என்ன அர்த்தத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை, ஏனெனில் நான் ஒரு ஆசானையோ அல்லது ஒரு பாதையையோ தேடிக்கொண்டிருக்கவில்லை. அப்படியிருந்தும், என் உணர்வின் ஆழத்தில், என் இருப்பின் மிக முக்கியமான நபரை நான் தவறவிட்டேன். அது உண்மை என்று எனக்குத் தெரியும்.

அந்தக் கணத்திலிருந்து சிறந்த திட்டமிடப்பட்ட, வசீகரமான வாழ்க்கை எனக்குப் பொருந்தவில்லை. நான் திடீரென்று முக்கியமான திட்டங்களை ரத்து செய்துவிட்டேன், எனக்குத் தெரிந்தவர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், புத்தகங்கள் மூலம் தேடத் தொடங்கினேன். பரமஹம்ஸ யோகானந்தர் ஏதாவது ஒரு புத்தகம் எழுதியிருப்பாரா என்று எனக்கு பார்க்கத் தோன்றவில்லை; நான் வெறுமனே அவர் மறைந்து விட்டார், நான் அவரை தவறவிட்டேன் என்று மட்டும் உணர்ந்தேன். என் தேவையின் ஆழத்தைப் பூர்த்தி செய்யாத நான்கு பரதத்துவம் சார்ந்த தொகுதிகளைப் படித்த பிறகு, ஹாலிவுட் பொது நூலகத்தில் இருந்த அதே புத்தகவரிசையில் மீண்டும் என் தாயுடன் தேடிக்கொண்டிருந்தேன், என்னுள் கனன்று கொண்டிருந்ததில் சிலவற்றை உணர்ந்தவர் அவர் . நான் ஏற்கனவே முழுமையாக ஆராய்ந்ததாக நினைத்த முதல் பிரிவை கிட்டத்தட்ட கடந்து சென்ற பிறகு, ஒரு புத்தகம் மேல் அலமாரியில் இருந்து விழுந்து, என் தலையில் தாக்கி, தரையில் குதித்தது. என் தாய் அதை எடுத்து என்னை நோக்கித் திரும்பியபோது மூச்சுத் திணறினார்—பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம். அங்கே என் இதயம் அடைய முற்படும் பெயரும், ஆன்மாவை ஊடுருவின கண்களுடனான முகமும் இருந்தது!

நான் இரவில் அதைப் படித்தேன், நான் வேலையில் இருந்தபோது என் தாய் அதைப் படித்தாள். மெய்ப் பொருளின் உலகில் நுழையும் அனுபவத்தில் நாங்கள் மூழ்கியிருந்த விதத்தை விவரிக்க “வாசிப்பு” அநேகமாய் போதுமானதாக இல்லை. வாழ்க்கையின் தோற்றம், சீடராக இருத்தல், கிரியா யோக போதனை — அனைத்தும் ஒரு யோகியின் சுயசரிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டன.

நாங்கள் ஹாலிவுட் கோவிலில் ஒரு சத்சங்கத்தில் கலந்துகொண்டோம், நான் முதலில் குருவின் பெயரை தொலைபேசியில் கேட்டபோதிருந்த ஆற்றல் வாய்ந்த அதே இருப்பு இப்பவும் என்னை ஆட்கொண்டது. சேவைமுடிந்த பிறகு மீரா மாதா எங்களை மிகுந்த கருணையுடன் வரவேற்றார், மற்றும் சில கணங்களுக்குப் பிறகு நான் மவுண்ட் வாஷிங்டன் மதர் சென்டருக்கு சென்று அவரது மகள் மிருணாளினி மாதாவை சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். நாங்கள் சென்று சன்னியாச முறையைப் பற்றி அறிந்து கொண்டோம், நான் மூன்றாவது முறையாக “கவர்ந்திழுக்கப்பட்டேன்” — முதலில் பரமஹம்ஸ யோகானந்தா, இரண்டாவது ஒரு யோகியின் சுயசரிதம், இப்போது, இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்க்கையின் இலட்சியத்தால்.

மார்ச் 6ம் தேதி பரமஹம்ஸரின் பெயரைக் கேட்டதன் விளைவைப் பற்றி விவரித்த பிறகு, அன்று காலை அவர் ஹோட்டலில் இந்தியத் தூதர் மேதகு பினய் ஆர். சென் அவர்களின் காலை உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அறிந்தேன். அந்த காலை உணவு என் அலுவலகத்திற்கு அடுத்த அறையில் நடந்ததுள்ளது. எனக்கு அழைப்பு வந்து அவரது பெயரைக் கேட்ட நேரத்தில் என் மேஜையிருந்த சுவரின் மறுபக்கத்தில் குருதேவர் அமர்ந்திருக்கிறார்.

குரு தனது மகத்தான சுயசரிதம் மூலம் “அவருக்குரிய” அனைவரையும் அழைக்கிறார். நம்மில் சிலர் பதிலளிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறோம், எனக்கு ஏற்பட்டது போல் தலையில் தட்டப்பட வேண்டும்! ஆனால் அவரது “குரலை” கேட்டு அவரது அழைப்புக்கு பதிலளிக்கும் லட்சக் கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு அருளாசி கிடைக்கப் பெற்றவர்கள்.

இதைப் பகிர