இறுதி ஆண்டுகள் மற்றும் மகா சமாதி

பரமஹம்ஸ யோகானந்தரின் இறுதி ஆண்டுகள் பெரும்பாலும் தனிமையில் கழிந்தன, ஏனெனில் அவர் பகவத் கீதை மற்றும் நான்கு நடத்தை விதிகளில் உள்ள இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பற்றிய மிகப்பெரிய விளக்க உரைகள், மற்றும் விஸ்பர்ஸ் ஃப்ரம் இடர்னிடி மற்றும் யோகதா சத்சங்கப் பாடங்கள் போன்ற முந்தைய படைப்புகளின் திருத்தங்கள் உட்பட தன் எழுத்துப் படைப்புகளை நிறைவு செய்ய தீவிரமாகப் பணியாற்றினார். அவர் ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா, ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா மற்றும் அவரது நெருங்கிய சீடர்களில் சிலருடன் விரிவாகப் பணியாற்றி, அவர் மறைந்த பிறகு அவரது உலகளாவிய பணிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு ஆன்மீக மற்றும் அமைப்பு ரீதியான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அவர் அவர்களிடம் கூறினார்:

“எனது உடல் மறைந்துவிடும், ஆனால் எனது பணி தொடர்ந்து நடைபெறும். மேலும் எனது ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கும். நான் மறைந்துவிட்ட பிறகும் கூட இறைவனது செய்தியுடன் உலகினை மீட்பதற்காக உங்கள் அனைவருடனும் சேர்ந்து நான் பணியாற்றுவேன்.

“உள்ளார்ந்த ஆன்மீக உதவியை உண்மையாக நாடி ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்/யோகதா சத்சங்க சொஸைடிக்கு வந்திருப்பவர்கள், இறைவனிடம் அவர்கள் எதை நாடுகிறார்களோ, அதை பெறுவர். அவர்கள் நான் இவ்வுடலில் இருக்கும்போது வந்தாலும் சரி அல்லது பின்னர் வந்தாலும் சரி, இறைவனின் சக்தி எஸ் ஆர் எஃப் [ஒய் எஸ் எஸ்] குருமார்களின் தொடர்பு மூலமாக, ஒரே விதமாக பக்தர்களுக்கு பாயும், மேலும் அவர்களுடைய முக்திக்குக் காரணமாகவும் விளங்கும்…. என்றும் வாழும் பாபாஜி அனைத்து உண்மையான எஸ் ஆர் எஃப் [ஒய் எஸ் எஸ்] பக்தர்களின் முன்னேற்றத்தை பாதுகாக்கவும் வழிகாட்டவும் வாக்குறுதி அளித்துள்ளார். தங்களின் உடல்களை நீத்த லாஹிரி மஹாசயர் மற்றும் ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி, மற்றும், நானும் உடலை விட்டு வெளியேறிய பிறகும் – அனைவரும் எஸ் ஆர் எஃப் ஒய் எஸ் எஸ் -ன் உண்மையான உறுப்பினர்களைப் பாதுகாத்து வழிநடத்துவார்கள்.”

யோகானந்தருடன் இந்திய தூதரின் மனைவி1952 மார்ச் 7 அன்று, இந்த மகத்தான குரு மகா சமாதி அடைந்தார். அதாவது, உடல் மரணம் எய்தும்பொழுது உடற்கூட்டிலிருந்து இறைஒளி பெற்ற மகான் உணர்வுப்பூர்வமாக வெளியேறுதல். லாஸ் ஏஞ்ஜலீஸ்-ல் உள்ள பில்ட்மோர் ஹோட்டலில் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் டாக்டர் பினய் ஆர். சென் அவர்களை கௌரவிப்பதற்காக கொடுக்கப்பட்ட விருந்தில் அவர் ஒரு குறுகிய உரையை அப்பொழுதுதான் முடித்திருந்தார்.

அவரது மறைவு ஓர் அசாதாரண நிகழ்வால் குறிக்கப்பட்டது. ஃபாரஸ்ட் லான் மெமோரியல்-பார்க் இயக்குனர் கையெழுத்திட்ட ஒரு பிரமாணக் கடிதம் சாட்சியம் அளித்தது: “இறந்து இருபது நாட்களுக்குப் பிறகும்கூட அவரது உடலில் எந்தவிதமான உடல் சிதைவும் காணப்படவில்லை….ஓர் உடல் இங்ஙனம் பூரண பதனநிலையில் இருப்பது, எங்களுக்குத் தெரிந்தவரையில் இந்த அமரர் அறையின் சரித்திரக் குறிப்புகளில் இதுவரை காணப்படாத ஈடுஇணையற்ற ஒரு சம்பவமாகும்.”

கடந்த காலங்களில், பரமஹம்ஸ யோகானந்தரின் குரு ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரர், அவரை தெய்வீக அன்பின் அவதாரம் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர், அவரது சீடரும் முதல் ஆன்மீக வாரிசுமான ராஜரிஷி ஜனகானந்தர் அவருக்கு பிரேமாவதாரம் அல்லது “தெய்வீக அன்பின் அவதாரம்” என்ற பட்டத்தைப் பொருத்தமாகச் சூட்டினார்.

பரமஹம்ஸ யோகானந்தருடைய மறைவின் இருபத்தைந்தாம் ஆண்டுநிறைவை முன்னிட்டு, மனிதகுலத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்கு அவர் அளித்த தொலைநோக்குடனான பங்களிப்புகளுக்கு இந்திய அரசு முறையான அங்கீகாரம் வழங்கியது. அவரது நினைவாக ஒரு சிறப்பு நினைவுத் தபால்தலை வெளியிடப்பட்டது, அதனுடன்கூட செலுத்தப்பட்ட அஞ்சலியின் ஒரு பகுதி இது:

பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையில் இறையன்பு மற்றும் மனிதகுல சேவை ஆகிய குறிக்கோள் பரிபூரணமாக வெளிப்பட்டது….தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை அவர் இந்தியாவிற்கு வெளியே கழித்தாலும், அவர் நம் மாபெரும் மகான்களின் மத்தியில் இடம் பெறுகிறார். அனைத்து மக்களையும் ஆன்ம யாத்திரை மார்க்கத்திற்கு ஈர்த்தவாறு அவருடைய திருப்பணி என்றும் குறைவின்றி ஒளிமயமாகத் தொடர்ந்து வளருகிறது

'Yogananda Stamp' - Government of India

யோகதா சத்சங்க சொஸைடியின் 100 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் தபால் தலை.2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் பிரதமர், மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி, புது தில்லியில் மார்ச் 7, 2017 அன்று நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் பரமஹம்ஸருக்கு அஞ்சலி செலுத்தினார், இதில் இந்திய அரசாங்கம் யோகதா சத்சங்கத்தின் 100 வது ஆண்டு நினைவாக ஒரு புதிய தபால் தலையை வெளியிட்டது. பரமஹம்ஸரின் மகாசமாதி நினைவு தினத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.

அவரது எழுச்சியூட்டும் உரையில், பிரதமர் பரமஹம்ஸரை இந்தியாவின் மிகச்சிறந்த யோகி மற்றும் ஆசான்களில் ஒருவராகக் குறிப்பிட்டார். அவரது வாழ்க்கையும் பணியும் இந்தியாவின் ஆன்மீகத்தின் மகத்தான மதிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியது – மற்றும் நவீன உலகில் இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்வதில், நிறுவனரின் மரபையும் உணர்வையும் வெற்றிகரமாக பராமரிப்பதற்காக
ஒய் எஸ் எஸ் ஐ பாராட்டினார்.

இதைப் பகிர