அனைவருக்கும் உரிய யோகம்

பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல் புத்தகத்தில் “அனைவருக்கும் உரிய யோகம்” என்ற அத்தியாயத்திலிருந்து சில பகுதிகள்
பரமஹம்ச யோகானந்தர

இது ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ஆலயம், ஹாலிவுட், கலிஃபோர்னியா -வில் மே 21, 1944 அன்று ஆற்றப்பட்ட ஒரு சொற்பொழிவு. பரமஹம்ஸ யோகானந்தரின் இந்த மற்றும் இன்ன பல சொற்பொழிவுகளை ஒய் எஸ் எஸ் -ஆல் வெளியிடப்பட்ட அவருடைய திரட்டப்பட்ட சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்ற மூன்று தொகுதிகள் கொண்ட நூல்களில் காணலாம்.

Paramahansa Yogananda with folded hands

யோகத்தின் நோக்கம்

யோகம்‌ என்பது ஆன்மாவைப்‌ பரம்பொருளுடன்‌ மீண்டும்‌ இணைப்பதற்கான விஞ்ஞான வழிமுறைகளின்‌ ஓர்‌ அமைப்பு ஆகும்‌. நாம்‌ இறைவனிடமிருந்து கீழே வந்துள்ளோம்‌; நாம்‌ மீண்டும்‌ அவனிடம்‌ மேலே செல்ல வேண்டும்‌. நமது தெய்வத்‌தந்தையிடமிருந்து பார்ப்பதற்கு பிரிந்துள்ளவர்கள்‌ மாதிரி ஆகிவிட்டோம்‌. நாம்‌ மீண்டும்‌ தன்னுணர்வுடன்‌ அவனுடன்‌ சேர்ந்தாக வேண்டும்‌. பிரிவு என்ற மயக்கத்திலிருந்து நாம்‌ மீண்டெழுந்து, இறைவனுடனான நமது ஒன்றிய தன்மையை அறிந்துகொள்வது எப்படி என்பதை யோகம்‌ போதிக்கிறது. கவி மில்டன்‌ மனிதனின்‌ ஆன்மாவைப்‌ பற்றியும்‌, அது எவ்வாறு சுவர்க்கத்தை மீண்டும்‌ அடையலாம்‌ என்பதைப்‌ பற்றியும்‌ எழுதியுள்ளான்‌. அதுதான்‌ யோகத்தின்‌ நோக்கம்‌ மற்றும்‌ இலக்கு — எந்த ஆன்ம உணர்வுநிலை மூலம்‌ மனிதன்‌, தான்‌ பரம்‌ பொருளுடன்‌ இன்றும்‌, என்றென்றும்‌ ஒன்றியிருப்பவன்‌ என்பதை அறிகிறானோ,அந்த ஆன்ம உணர்வு நிலை என்ற இழந்த சுவர்க்கத்தை மீண்டும்‌ அடைதல்‌.

யோகம்: உண்மையான மத விஞ்ஞானம்

உலகத்தின்‌ பல்வேறு மதங்கள்‌ கிட்டத்தட்ட மனிதனின்‌ நம்பிக்கைகளை அடிப்படையாகக்‌ கொண்டுள்ளன. ஆனால்‌ மதத்தின்‌ உண்மையான அடித்தளம்‌, நமது ஒரே தந்தை-இறைவனை அடைவதற்கு எல்லா பக்தர்களும்‌ பயன்படுத்தக்கூடிய ஒரு, விஞ்ஞானமாக இருக்க வேண்டும்‌. யோகம்தான்‌ அந்த விஞ்ஞானம்‌. மதத்தின்‌ விஞ்ஞானப்‌ பயிற்சி அவசியம்‌. வெவ்வேறு பிடிவாதமான மதக்‌ “கொள்கைகள்‌” மனிதனை பிரித்து வைத்திருக்கின்றன; ஆனால்‌ இயேசு குறிப்பிட்டது இதுதான்‌: “ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப்‌ பிரிந்திருந்தால்‌, அந்த வீடு நிலைநிற்க மாட்டாதே-. பல்வேறு மதங்களைப்‌ பின்பற்றும்‌ தனி மனிதர்கள்‌, அகத்தே உள்ள இறைவனை உண்மையாகவே உணர்ந்தால்தான்‌, அந்த மதங்களுக்குக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்‌. அப்பொழுது இறை பித்ருத்துவத்தின்‌ அடிப்படையில்‌ நாம்‌ ஒரு மெய்யான மனித சகோதரத்துவம்‌ அடைவோம்‌.

உலகத்தின்‌ பெரிய மதங்கள்‌ எல்லாம்‌ இறைவனைக்‌ காண வேண்டிய தேவை, மனிதர்களுக்கு இடையில்‌ சகோதரத்துவத்தின்‌ தேவை ஆகியவற்றைப்பற்றி போதிக்கின்றன; மேலும்‌ அவை அனைத்தும்‌ பத்துக்‌ கட்டளைகள்‌ போன்ற ஓர்‌ ஒழுக்க நெறி முறையைக்‌ கொண்டுள்ளன. அப்படியானால்‌, அவைகளுக்‌கிடையில்‌ எது வேற்றுமைகளை உண்டுபண்ணுகிறது? மனித மனங்களிலுள்ள மதவெறிதான்‌. பிடிவாதமான கொள்கைமேல்‌ கவனம்‌ செலுத்தி நாம்‌ கடவுளை அடைய முடியாது; மாறாக உண்மையான ஆத்ம ஞானத்தின்‌ மூலம்‌ அடையலாம்‌. பல்வேறு மதங்களின்‌ அடித்தளத்தில்‌ பொதிந்து கிடக்கும்‌ பொதுவான உண்மைகளை மனிதன்‌ அறியும்போது, பிடிவாதக்‌ கொள்கைகளைப்‌ பற்றிய எந்தத்‌ தொல்லையும்‌ இராது. என்னைப்‌ பொறுத்த வரையில்‌ யூதனுமில்லை, கிறிஸ்துவனுமில்லை, இந்துவுமில்லை. எல்லோருமே என்‌ சகோதரர்கள்‌. நான்‌ எல்லா ஆலயங்களிலும்‌ வழிபடுகிறேன்‌. ஏனென்றால்‌ அவை ஒவ்வொன்றும்‌ என்‌ தெய்வப்‌ பிதாவை வணங்குவதற்காக கட்டப்பட்டவை.

ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌ [யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப்‌ இந்தியா] ஆரம்பித்து வைத்துள்ள “சர்வ சமயங்களின்‌ ஆலயம்‌” என்ற கருத்தின்‌ அடிப்படையில்‌ நாம்‌ உலக ஒற்றுமையை வளர்க்கத்‌ தொடங்க வேண்டும்‌; இது எல்லாவற்றிலும்‌ இருந்து நல்லதை தேர்ந்தெடுப்பது என்பதல்ல; மாறாக எல்லா மதங்களும்‌ இறைவனை நோக்கிச்‌ செல்லும்‌ பல்வேறு பாதைகள்‌ என்று மரியாதை காட்டுவதாகும்‌. எல்லா மதங்களும்‌ வழிபடும்‌ ஒரே கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இத்தகைய ஆலயங்கள்‌, ஒவ்வொரு இடத்திலும்‌ கட்டப்பட வேண்டும்‌. இது நிறைவேறும்‌ என்று நான்‌ தீர்க்கதரிசனமாகக்‌ கூறுகிறேன்‌. கீழை நாடுகளும்‌ மேலை நாடுகளும்‌ என்றென்றைக்குமாக இறைவனின்‌ ஆலயங்களிலுள்ள குறுகிய பிரிவுகளை ஒழிக்க வேண்டும்‌. யோகத்தின்‌ மூலம்‌ ஆத்ம ஞானம்‌ அடைந்து மக்கள்‌, தாம்‌ அனைவரும்‌ ஒரு தந்தையின்‌ குழந்தைகள்‌ என்பதை அறிந்து கொள்வர்‌.

குருடன் குருடனை வழிநடத்த முடியாது

அந்த ஆன்ம ஒருமைப்பாடு; இறை-ஞானம்‌ பெற்ற தலைசிறந்த மனிதர்களின்‌ வாழ்வில்‌ மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. குருடன்‌ குருடனை வழிநடத்த முடியாது; இறைவனை அறிந்த ஒரு மகான் மட்டும் தான்‌ இறைவனைப்‌ பற்றி மற்றவர்களுக்குச் சரியாக போதிக்க முடியும்‌ தன்னுடைய தெய்வீகத்‌தன்மையை மீண்டும் பெற, ஒருவர்‌ இத்தகைய ஒரு மகானை அல்லது குருவைப் பெற்றிருக்க வேண்டும்‌ ஒர்‌ உண்மையான குருவை விசுவாசத்துடன்‌ பின்பற்றுபவன்‌, அவரைப்‌ போலவே ஆகிறான்‌; ஏனெனில்‌ குருவானவர்‌ சீடனை தனது சொந்த இறை ஞானநிலை வரை உயர்த்த உதவி புரிகிறார்‌. நான்‌ என்‌ குருதேவர்‌ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரைக் கண்டபொழுது, அவருடைய உதாரணத்தைப்‌ பின்பற்ற என்‌ மனத்தில்‌ தீர்மானித்தேன்‌. அதாவது இறைவனை மட்டும்‌ இதய பீடத்தில்‌ வைத்தல்‌, மேலும்‌ அவனை மற்றவர்களுடன்‌ பகிர்ந்து கொள்ளுதல்‌.

மிக ஆழ்ந்த ஞானத்தை அடைவதற்கு ஒருவர்‌, தன்‌ பார்வையை எல்லாமறிந்த ஆன்மீகக்‌ கண்‌ மூலம்‌ குவியச்செய்ய வேண்டும்‌ என்று இந்து ஆசான்கள்‌ போதித்தார்கள்‌. தீவிரமாக சிந்திக்கும் பொழுது, யோகியில்லாதவன்‌ கூட, இரு புருவங்களுக்கு இடையே உள்ள மையப்புள்ளியில்‌ தன்‌ நெற்றியை சுருக்குகிறான்‌—அந்த மையப்புள்ளிதான்‌ ஒருமுகப்படுவதற்கான மற்றும்‌ கோள வடிவ ஆன்மீக கண்ணின்‌ மையம்‌, அதாவது ஆன்ம உள்ளுணர்வின்‌ இருக்கை. அதுதான்‌ உண்மையான “ஸ்படிகப்‌ பந்து: (Crystal ball), யோகியானவன்‌ பிரபஞ்சத்தின்‌ ரகசியங்களை அறிவதற்கு அதனுள்‌ பார்வையை செலுத்துகிறான்‌. தமது ஒருமுகப்படுதலில்‌ போதுமான அளவு ஆழமாகச்‌ செல்பவர்கள்‌ அந்த “மூன்றாவது” கண்ணைத் ‌துளைத்து இறைவனைக்‌ காண்பார்கள்‌. ஆதலால்‌ ஆன்மீகச் ‌சாதகர்கள்‌, ஆன்மீகக்‌ கண்‌ வழியே தமது பார்வையை நீட்டிக்கும்‌ ஆற்றலை வளர்க்க வேண்டும்‌. யோகப்‌ பயிற்சியானது சாதகருக்கு, உள்ளுணர்வின்‌ உணர்வுநிலையான நெற்றிக்‌ கண்ணைத்‌ திறப்பதற்கு உதவிபுரிகிறது.

உள்ளுணர்வு அல்லது நேரடி ஞானம்‌ என்பது புலன்களிலிருந்து வரும்‌ எந்த விவரங்களையும்‌ சார்ந்திருப்பதில்லை. அதனால்தான்‌ உள்ளுணர்வுத்‌ திறம்‌ பெரும்பாலும்‌ “ஆறாவது புலன்‌” என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும்‌ இந்த ஆறாவது புலனைப்‌ பெற்றிருக்கிறார்கள்‌; ஆனால்‌ பெரும்பாலானவர்கள்‌ அதை வளர்ப்பதில்லை. இருப்பினும்‌, கிட்டத்தட்ட எல்லோருமே ஏதோ ஓர்‌ உள்ளுணர்வு அனுபவத்தைப்‌ பெற்றுள்ளார்கள்‌. ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட சம்பவம்‌ நிகழப்‌ போகிறது என்ற ஒர்‌ “உணர்வை” அதைப்‌ பற்றிய எந்த விதப்‌ புலன்வழி சாட்சியும்‌ இல்லாத பொழுது பெறுதல்‌.

உள்ளுணர்வு அல்லது நேரடி ஆத்ம ஞானத்தை வளர்ப்பது முக்கியம்‌. ஏனென்றால்‌ இறை-உணர்வுள்ளவன்‌, தன்னைப்பற்றி நிச்சயமாக உள்ளான்‌. அவனுக்குத்‌ தெரியும்‌, மேலும்‌ தனக்குத்‌ தெரியும்‌ என்பதும்‌ அவனுக்குத்‌ தெரியும்‌. ஆரஞ்சுப்பழ சுவையைப்‌ பற்றி நமக்குத்‌ தெரியும்‌ என நாம்‌ எத்தனை நிச்சயமாக இருக்கிறோமோ, அத்தனை நிச்சயத்துடன்‌ இறைவனின்‌ இருப்பைப்‌பற்றி இருக்க வேண்டும்‌. எனது குருதேவர்‌ எனக்கு இறைவனுடன்‌ எப்படி ஆழ்ந்த தொடர்பு கொள்ள வேண்டும்‌ என்று காண்பித்த பிறகுதான்‌, மேலும்‌ ஒவ்வொரு நாளும்‌ இறைவனின்‌ இருப்பை நான்‌ உணர்ந்த பின்புதான்‌ மற்றவர்களுக்கு அவனைப்பற்றி சொல்லும்‌ ஆன்மீகக்‌ கடமையை ஏற்றுக்‌ கொண்டேன்‌.

மேலை நாடுகள்‌, பெரிய வழிபாட்டு ஆலயங்களை வலியுறுத்தியுள்ளன ஆனால்‌ அவைகளில்‌ மிகச்‌ சிலவற்றில்தான்‌ வழிபடுபவர்கள்‌ எவ்வாறு இறைவனைக்‌ காணலாம்‌ என வழிகாட்டப்படுகின்றனர்‌. கிழக்கில்‌, இறை-ஞான மனிதர்களின்‌ வளர்ச்சிக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால்‌ அவர்களில்‌ அனேகர்‌ ஆன்மீக சாதகர்களுக்கு எட்டாதவர்களாய்‌ வெகு தொலைவான, மற்றும்‌ ஏகாந்தமான இருப்பிடங்களில்‌ தனிமையில்‌ ஆழ்ந்திருக்கிறார்கள்‌. மக்கள்‌ இறைவனுடன்‌ தொடர்பு கொள்ளக்கூடிய ஆன்மீக மையங்களும்‌, மற்றும்‌ இறைத்‌ தொடர்பு கொள்வது எவ்வாறு என்பதை அவர்களுக்குக்‌ காட்டும்‌ ஆசான்களும்‌ ஆகிய இரண்டுமே அவசியம்தான்‌. இறைவனைத்‌ தானே அறியாத ஆசானிடமிருந்து ஒருவர்‌ எவ்வாறு இறை ஞானத்தைப்‌பெற முடியும்‌? எனது குருதேவர்‌, என்னிடம்‌ மற்றவர்களுக்கு தெய்வத்தந்தையைப்‌ பற்றிச்‌ சொல்வதற்குமுன்‌, அவனைப்‌ பற்றி நான்‌ அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை மனத்தில்‌ பதிய வைத்தார்‌. அவருடைய பயிற்சியை பெற்றுக்‌ கொண்டதற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாய்‌ உள்ளேன்‌! அவர்‌, உண்மையில்‌ இறைவனுடன்‌ தானே தொடர்பு கொண்டிருந்தார்‌!

இறைவன்‌ ஒருவரது சொந்த தேக ஆலயத்தில்‌ முதலில்‌ அறியப்பட வேண்டும்‌. ஒவ்வொரு சாதகரும்‌ தினமும்‌ தனது எண்ணங்களை ஒழுங்குபடுத்தி, தன்‌ஆன்மாவின்‌ பீடத்தில்‌ தனது பக்தி எனும்‌ இயற்கையாகவே வளரும்‌ பூக்களைச்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. தன்‌ அகத்தில்‌ இறைவனைக்‌ காண்கின்ற ஒருவர்‌, அவர்‌ நுழையும்‌ ஒவ்வொரு தேவாலயத்திலும்‌ அல்லது கோவிலிலும்‌ இறைவனது இருப்பை உணர முடியும்‌.

யோகம் மத சாத்திரத்தை நடைமுறை அனுபவமாக மாற்றுகிறது

யோகம்‌ மனிதனுக்கு எல்லா மதங்களிலும்‌ உள்ள உண்மையை உணர்வதற்கு உதவுகிறது. பைபிளில்‌ உள்ள நீதி போதனைகளான “பத்துக்‌ கட்டளைகள்‌,” வெவ்வேறு வார்த்தைகளில்‌ ஒவ்வொரு மதத்திலும்‌ போதிக்கப்படுகின்றன. இவை இயேசுவினால்‌ மிகவும்‌ வலியுறுத்தப்பட்டன. ஆனால்‌ இரண்டு கட்டளைகள்‌ மிக முக்கியமானவை: “உன்‌ தேவனாகிய கர்த்தரிடத்தில்‌ உன்‌ முழு இருதயத்தோடும்‌, உன்‌ முழு ஆத்மாவோடும்‌, உன்‌ முழு மனதோடும்‌ அன்புகூருவாயாக” மற்றும்‌ “உன்னிடத்தில்‌ நீ அன்புகூருவது போல்‌ பிறனிடத்திலும்‌ அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37, 39)

இறைவனை “உன்‌ முழு மனதோடு” நேசிப்பது என்றால்‌, ஒருவரது கவனத்தை புலன்களிலிருந்து விலக்கி, அதை இறைவனுக்கு, அளிப்பது என்று பொருளாகும்‌; அதாவது தியானத்தில்‌, ஒருவரது முழுக்கவனத்தையும்‌ அவனுக்கு அளிப்பதாகும்‌. இறைவனை நாடும்‌ ஒவ்வொரு சாதகரும்‌ மன ஒருமுகப்படுதலை கற்றுத்தான்‌ ஆகவேண்டும்‌. ஒருவர்‌ பிரார்த்தனை செய்யும்போது தனது மனத்தின்‌ பின்னணியில்‌ அதே சமயம்‌ வேறு விஷயங்களை நினைத்துக்‌ கொண்டிருந்தால்‌, அது உண்மையான பிரார்த்தனை அல்ல; மற்றும்‌ அது இறைவனால்‌ செவிமடுக்கப்படுவதில்லை. இறைத்தந்தையைக்‌ காண, அவனை முழு மனத்துடன்‌, ஒருமுனைப்பட்ட கவனத்துடன்‌ நாடவேண்டியது முதலில்‌ அவசியம்‌ என யோகம்‌ போதிக்கிறது.

யோகம் எல்லோருக்குமானது

சிலர்‌, இந்துக்கள்‌ யோகப்பயிற்சிக்கு மிகவும் பழக்கப்பட்டவர்கள்‌, மேலும்‌ யோகம்‌ மேலை நாட்டவர்களுக்குப்‌ பொருந்தாது என்று கூறுகின்றனர்‌. இது உண்மையல்ல. அனேக மேலை நாட்டவர்கள்‌ தற்சமயம்‌ யோகத்தைப்‌ பயிற்சி செய்ய, அனேக இந்துக்களைவிட நல்ல நிலைமையில்‌ உள்ளனர்‌; ஏனென்றால்‌ விஞ்ஞான முன்னேற்றங்கள்‌ மேலை நாட்டவர்களுக்கு அதிக ஓய்வு நேரத்தைக் ‌கொடுத்திருக்கின்றன. வாழ்க்கையை இன்னும்‌ எளிதாக்கவும்‌, சுதந்திரமானதாக்கவும்‌, இந்தியா மேலை நாட்டு முன்னேற்ற நடைமுறை வழிகளை மேன்மேலும்‌ பயன்படுத்த வேண்டும்‌: அத்துடன்‌ மேலை நாடுகள்‌, ஒவ்வொரு மனிதனும்‌ இறைவனை நோக்கிய தனது வழியைக்‌ காண இயலும்படியான — யோகத்தின்‌ நடைமுறை பரதத்துவ வழிமுறைகளை இந்தியாவிடமிருந்து, பெறவேண்டும்‌. யோகம்‌ ஒரு மதப்‌ பிரிவு அல்ல. மாறாக நாம்‌ அனைவரும்‌ நமது தெய்வத்‌ தந்தையைக்‌ காண வழிவகுக்கும்‌ ஒரு பொதுவான, நடைமுறைப்படுத்தக்கூடிய விஞ்ஞானமாகும்‌.

யோகம்‌, எல்லோருக்குமானது, மேலை நாட்டுமக்கள்‌ மற்றும்‌ கீழை நாட்டவர்களுக்கும்‌. மேல்‌ நாட்டில்‌ தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதால்‌ அது கீழைநாட்டவருக்கு இல்லை என்று ஒருவரும்‌ கூறமாட்டார்‌. அதுபோலவே, யோகத்தின்‌ வழிமுறைகள்‌ கிழக்கில்‌ விருத்தி செய்யப்பட்டன என்றாலும்‌, அவை கீழை நாடுகளுக்கு மட்டும்‌ தனிப்பட்டவை என்றில்லை; மாறாக மனித இனம்‌ முழுவதற்கும்‌ உபயோகமானவை.

ஒரு மனிதன்‌ இந்தியாவில்‌ பிறந்திருந்தாலும்‌ சரி அல்லது அமெரிக்காவில்‌ பிறந்திருந்தாலும்‌ சரி, ஒரு நாள்‌ அவன்‌ மரணமடைந்தே ஆக வேண்டும்‌. ஏன் புனித பவுல்போல்‌ இறைவனுள்‌’ எப்படி “அனுதினமும்‌ சாவதற்கு” கற்கக்‌ கூடாது? யோகம்‌ அந்த வழிமுறையைப்‌ போதிக்கிறது. மனிதன்‌ தேகத்தினுள்‌ ஒரு கைதியைப்‌ போல்‌ வாழ்கிறான்‌. அவனது காலம்‌ முடியும்போது, வெளியே தூக்கி எறியப்படும்‌ அவமானத்தை அனுபவிக்கிறான்‌. எனவே உடற்பற்று என்பது சிறைப்பற்று என்பதைத்‌ தவிர வேறொன்றுமில்லை. தேகத்தினுள்‌ வெகுகாலம்‌ வாழ்ந்து பழக்கப்பட்டதால்‌, நாம்‌ உண்மையான சுதந்திரம்‌ என்றால்‌ என்ன என்பதையே மறந்திருக்கிறோம்‌. மேல்நாட்டவராய்‌ இருப்பது சுதந்திரத்தை தேடாமல்‌ இருப்பதற்கான சாக்கு இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும்‌ அவனது ஆன்மாவை கண்டுபிடிப்பது மற்றும்‌ அவனது அமரத்‌ தன்மையை அறிவது என்பது இன்றியமையாததாகும்‌. யோகம்‌ வழி காட்டுகிறது.

ஆன்மா இறைவனிடம் திரும்ப உயர வேண்டும்

படைப்பிற்கு முன்னால்‌ இருந்தது பிரபஞ்ச உணர்வுநிலை; பரம்பொருள்‌ அல்லது இறைவன்‌, தனிமுதல்‌, என்றும்‌-உள்ளது. என்றும்‌-விழிப்புள்ளது, என்றும்‌-புதிய ஆனந்தம்‌; அது வடிவம்‌ மற்றும்‌ உருவத்‌ தோற்றங்களுக்கு அப்பாற்பட்டது. படைப்பு உண்டான பொழுது, பிரபஞ்ச உணர்வுநிலை ஸ்தூல உலகத்தில்‌ “இறங்கியது.” இங்கு அது கிறிஸ்து உணர்வுநிலையாக, எல்லா படைப்பிற்கும்‌ பின்‌ உள்ளார்ந்தும்‌, மறைந்தும்‌ உள்ள இறைவனின்‌ அறிவாற்றல்‌ மற்றும்‌ உணர்வுநிலையின்‌ எங்கும்‌ நிறைந்த தூய பிரதிபலிப்பாக வெளிப்படுகிறது. கிறிஸ்து உணர்வுநிலை, மனிதனுடைய ஸ்தூல சரீரத்திற்குள்‌ இறங்கும்போது, அது ஆன்மாவாக அல்லது உயர்‌ உணர்வுநிலையாக மாறுகிறது; அதாவது சரீரத்தில்‌ அடைக்கப்பட்டதன்‌ மூலம்‌ தனிப்படுத்தப்பட்ட, இறைவனின்‌ என்றும்‌-உள்ள, என்றும்‌-விழிப்புள்ள, என்றும்‌-புதிய ஆனந்தமாக மாறுகிறது. ஆன்மாவானது உடலுடன்‌ தன்னை ஒன்றாகக்‌ கருதும்‌ பொழுது அது அகந்தையாக, அதாவது அழியும்‌ மனித உணர்வுநிலையாக வெளிப்படுகிறது. ஆத்மாவானது உணர்வுநிலை ஏணியின்‌ வழியே மீண்டும்‌ மேலேறி பரம்‌ பொருளிடம்‌ சென்றாக வேண்டும்‌. என்று யோகம்‌ போதிக்கிறது.

குறிப்பு: ஆத்மாவின்‌—மனித உயிர்‌ மற்றும்‌ தெய்வீக உணர்வு நிலையின்‌— இருப்பிடம்‌, மூளையிலுள்ள சூட்சுமமான ஆன்மீக மையங்கள்‌ என்று யோகம்‌ போதிக்கிறது; அவை ஸஹஸ்ராரம்‌, பெருமூளையின்‌ உச்சியிலுள்ள ஆயிரம்‌ இதழ்‌ தாமரை, பிரபஞ்ச உணர்வுநிலையின்‌ இருக்கை; கூடஸ்தம்‌, புருவங்களுக்கிடையே உள்ள மையம்‌, கிறிஸ்து உணர்வுநிலையின்‌ இருக்கை; மேலும்‌ முகுள மையம்‌ (கூடஸ்தத்துடன்‌ காந்த ஈர்ப்பினால்‌ இணைக்கப்பட்டுள்ளது) உயர்‌ உணர்வு நிலையின்‌ இருக்கை, உயிரும்‌ உணர்வு நிலையும்‌, இந்த மிக உயர்ந்த ஆன்மீக உணர்வு மையங்களிலிருந்து தேகத்திற்குள்‌ (மற்றும்‌ தேக-உணர்வு நிலைக்குள்‌) இறங்கி, ஐந்து சூட்சம தண்டுவட மையங்களின்‌ (பார்க்க சொல்லகராதியில்:‌ சக்கரங்கள்) வழியாக தண்டுவடத்தின்‌ கீழாகப்‌ பாய்ந்த, உயிர்‌, புலனறிவு, மற்றும்‌ செயல்‌ ஆகியவற்றின்‌ உடல்‌ உறுப்புகளுக்குள்‌ வெளிப்புறமாக கீழே பாய்கின்றன.

இறைவனுடனான தனது ஒன்றிய தன்மையின்‌ பேரானந்த ஞானத்தை, மீண்டும்‌ பெற மனிதனின்‌ ஆத்மா, புனிதமான தண்டுவட மார்க்கத்தின்‌ வழியே தெய்வீக விழிப்புணர்வின் உயர் மூளை மையங்களில் உள்ள தன் வீட்டிற்கு மேலேறிச்‌ சென்றவாறு, கீழ்நோக்கிச் சென்ற பாதையில் திரும்பிச் செல்ல வேண்டும். இது யோகதா சத்சங்கப் பாடங்கள் -லிருந்து கற்கப்படுவதைப் போன்ற குருவால்-கொடுக்கப்பட்ட யோக தியானத்தின் அறிவியல்பூர்வ உத்திகளின் பயிற்சியால் செய்து முடிக்கப்படுகிறது.

இறைவனின் இருப்பின் உணர்வுதான் மகிழ்ச்சியின் ரகசியம்

வாழ்க்கையை அனுபவிப்பது சரிதான்‌; மகிழ்ச்சியின்‌ ரகசியம்‌ என்னவென்றால்‌ எதனிடமும்‌ பற்றுகொள்ளாமல்‌ இருப்பதாகும்‌. மலரின்‌ வாசத்தை அனுபவியுங்கள்‌, ஆனால்‌ அதில்‌ இறைவனைப்‌ பாருங்கள்‌. புலன்களைப்‌ பயன்படுத்தி, இறைவனை நான்‌ எப்பொழுதும்‌ பார்க்கலாம்‌, மற்றும்‌ அவனைப்‌ பற்றி எப்பொழுதும்‌ நினைக்கலாம்‌ என்பதற்காக மட்டுமே நான்‌ அவைகளின்‌ உணர்வு நிலையை வைத்துக்‌ கொண்டுள்ளேன்‌. “என்‌ கண்கள்‌ நின்னழகை எல்லாவிடத்திலும்‌ காண்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. என்‌ காதுகள்‌ எங்கும்‌ நிறைந்துள்ள உன்‌ குரலைக்‌ கேட்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன.” அதுதான்‌ யோகம்‌, இறைவனுடன்‌ ஒன்றுதல்‌. அவனைக்‌ காணக்‌ காட்டிற்குப் ‌போகவேண்டிய அவசியம்‌ இல்லை. உலகப்‌ பழக்கங்கள்‌, நம்மை அவைகளிலிருந்து விடுவித்துக்‌ கொள்ளும்வரை, நாம்‌ எங்கிருந்தாலும்‌ நம்மை இறுகப்‌ பற்றிக்‌ கொண்டிருக்கும்‌ யோகியானவன்‌ தனது இதயக்‌ குகையில்‌ இறைவனைக்‌ காணக் கற்கிறான்‌. அவன்‌ எங்கு சென்றாலும்‌, தன்னுடன்‌ இறைவனின்‌ இருப்பாகிய ஆனந்தமயமான உணர்வினை எடுத்துச் ‌செல்கிறான்‌.

மனிதன்‌, அழியும்‌ மனிதப்‌ புலன்‌ உணர்வு நிலைக்குள்‌ இறங்கியது மட்டுமல்லாமல்‌, அந்தப்‌ புலன்‌ உணர்வுநிலையின்‌ பேராசை, கோபம்‌, பொறாமை ஆகிய ஒழுங்கீனங்களால்‌ கட்டப்பட்டு உள்ளான்‌. இறைவனைக்‌ காண்பதற்காக மனிதன்‌ இந்த ஒழுங்கீனங்களை விரட்ட வேண்டும்‌. கீழை நாட்டவர்‌ மற்றும்‌ மேலை நாட்டவர்‌ ஆகிய இரு சாரருமே புலன்‌ அடிமைத்‌ தனத்திலிருந்து, விடுபட வேண்டும்‌. ஒரு சாதாரண மனிதன்‌, காலைக்‌ காபி தனக்குத்‌தரப்படவில்லை என்பதாலும்‌ மேலும்‌ இந்த இழப்பு தனக்கு தலைவலியைத்‌ தரும்‌ என நிச்சயமாக இருப்பதாலும்‌, அவன்‌ கோபப்படலாம்‌. அவன்‌ தன்னுடைய பழக்கங்களின்‌ அடிமை; முன்னேறிய யோகி சுதந்திரமானவன்‌. ஒவ்வொருவரும்‌ இப்பொழுது எங்கு உள்ளாரோ அங்கேயே ஒரு யோகியாக முடியும்‌. ஆனால்‌ நாம்‌ நமது சொந்த வாழ்க்கைப் ‌பழக்கங்களின்‌ எல்லைக்கு அப்பாலுள்ள எதையுமே வினோதமாகவும்‌ கடினமாகவும்‌ நினைப்பது இயல்பு. நமது பழக்கங்கள்‌ மற்றவர்களுக்கு எவ்வாறு தோன்றும்‌ என்பதைப்‌ பற்றி நாம்‌ சிந்திப்பதே இல்லை!

யோகப்பயிற்சி, சுதந்திரத்திற்கு இட்டுச்செல்கிறது. சில யோகிகள்‌, இப்பற்றின்மை கருத்தை உச்ச நிலைகளுக்கு எடுத்துச்‌ செல்கிறார்கள்‌. அவர்கள்‌, ஒருவர்‌ முள்படுக்கையில்‌ எந்த வித அசெளகரியமுமின்றி படுக்கும்‌ ஆற்றல்‌ உடையவனாய்‌ இருக்க வேண்டுமென்றும்‌, இதர உடற்‌ கட்டுப்பாட்டுத்‌ தவ முறைகளையும்‌ போதிக்கின்றனர்‌. ஒரு முள்‌ படுக்கையில்‌ அமர்ந்து இறைவனை நினைக்க முடிபவன்‌, மனத்தின்‌ பெரும்‌ வலிமையைக்‌ காட்டுகிறான்‌ என்பது உண்மையே. ஆனால்‌ இந்த மாதிரியான வித்தைகள்‌ அவசியமில்லை. ஒருவர்‌ வசதியான நாற்காலியில்‌ உட்கார்ந்து கொண்டு கூட இறைவனைப்‌ பற்றித்‌ தியானிக்கலாம்‌.

பதஞ்சலி, முதுகுத்தண்டுவடத்தை நேராக வைக்கும்‌ எந்த தேக நிலையும்‌ தியானத்திற்கு, இறைவன்‌ மீதான யோக மன ஒருமுகப்பாட்டிற்கு ஏற்றது எனக்‌ கூறுகிறார்‌. தேகத்தை வளைத்து நெளித்தல்‌, அல்லது ஹதயோகத்தில்‌ கூறியுள்ளபடி அசாதாரண தேக சகிப்புத்தன்மை மற்றும்‌ வளையும்‌ தன்மையைக்‌ கோரும்‌ தேகப்பயிற்சிகள்‌ தேவையில்லை. இறைவன்தான்‌ இலக்கு; அவனது இருப்பைப்‌ பற்றிய உணர்வை நாட நாம்‌ முயன்று உழைக்க வேண்டும்‌. பகவத்‌ கீதை கூறுகிறது: “எவன்‌ பக்தியினால்‌, தனது ஆத்மாவை என்பால்‌ ஆழ்த்தி, என்னிடம்‌ லயித்து விட்டானோ அவனை, எல்லாவிதமான யோகியர்களிலும்‌ தலைசிறந்த சமநிலை யுடைவனாகக்‌ கருதுகிறேன்‌.” (VI:47).

மிதமிஞ்சிய வெப்பத்தையும்‌, குளிரையும்‌, கொசுக்கள்‌, மற்றும்‌ இதர தொல்லைதரும்‌ பூச்சிகள்‌ ஆகியவற்றினை பொருட்படுத்தாத நிலையையும்‌ மெய்ப்பித்துக்‌ காட்டியதற்கு இந்து யோகிகள்‌ பெயர்‌ போனவர்கள்‌. ஒரு யோகியாக இருப்பதற்கு இவ்வாறு மெய்ப்பித்துக்‌காட்டுதல்‌ என்பது அவசியமில்லை என்றாலும்‌, அது ஒரு யோக வல்லுனரின்‌ இயற்கையான சாதனை. தொல்லைதரும்‌ பொருட்களை நீக்க முயற்சி செய்யுங்கள்‌; அல்லது தேவைப்படின்‌ அவைகளை சகித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்‌. அதே சமயம்‌ தனக்குள்‌ நிலைகுலையாமல்‌ இருக்க முயலுங்கள்‌. ஒருவர்‌ சுத்தமாக இருக்க முடியுமானால்‌, அசுத்தமாக இருப்பதில்‌ அர்த்தமே இல்லை; ஒருவர்‌ அரண்மனையில்‌ வசிப்பதில்‌ பற்றுக்‌ கொள்ளலாம்‌. குடிசையில்‌ வசிப்பதிலும்‌ கூடப்‌ பற்றுக்‌ கொள்ளலாம்‌.

ஆன்மீக வெற்றியை அடைவதில்‌ மிகப்‌ பெரிய காரணி, விருப்பமாகும்‌. இயேசு கூறினார்‌, “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.‌” (மத்தேயு 9:37) உலக மக்கள்‌ இறைவனின்‌ கொடைகளை நாடுகிறார்கள்‌. ஆனால்‌ கொடையாளியையே நாடுபவன்‌ புத்திசாலியாவான்‌.

ஒரு யோகியாக வேண்டுமானால்‌, தியானம்‌ செய்யவேண்டும்‌. யோகியானவன்‌ ஒவ்வொரு நாளும்‌ காலை எழுந்தவுடன்‌, தனது தேகத்திற்கான உணவைப்‌ பற்றி முதலில்‌ எண்ணுவதில்லை; அவன்‌ தனது ஆன்மாவிற்கு இறைத்தொடர்பு என்ற அமிர்தத்தால்‌ உணவளிக்கிறான்‌. தனது ஆழ்ந்து மூழ்கும்‌ தியான மனத்தின்‌ மூலமாகக்‌ கண்ட ஊக்கத்தினால்‌ நிரப்பப்பட்டு, அவனால்‌ எல்லா தினசரிக்‌ கடமைகளையும்‌ மகிழ்ச்சியுடன்‌ செய்ய முடிகிறது.

இறைவன்‌, இந்தப்‌ பூமியை உள்ளபடி, காரணத்துடன்‌ படைத்துள்ளான்‌; அவனது திட்டத்தில்‌ மனிதனின்‌ பங்கானது, உலகத்தை மேலும்‌ மேன்மையுறச்‌ செய்வதாகும்‌. மேலை நாட்டவன்‌ புதிய மற்றும்‌ செம்மைப்பட்ட உலக, வசதிகளை பெறுவதற்கென தன்னை இடைவிடாமல்‌ மும்முரமாக்கிக்‌ கொள்வதில்‌ உச்சநிலைகளுக்குப்போக முற்படுகிறான்‌. கீழை நாட்டவன்‌, தன்னிடம்‌ உள்ளதே போதும்‌ என்று திருப்தி அடைந்து இருப்பதில்‌ உச்ச நிலைகளுக்குப்‌ போக நாட்டம்‌ கொள்கிறான்‌. மேலை நாட்டு “மேலே-தொடர்ந்து செல்‌” என்ற முன்னேற்ற மனப்பாங்கு மற்றும்‌ கீழை நாட்டு எளிதான, அமைதியான மனப்பாங்கு ஆகிய இரண்டிலுமே மனத்தைக்‌ கவரும்‌ ஏதோ உள்ளது. நாம்‌ இரண்டிற்கும்‌ நடுவில்‌ சமநிலையான பாதையை ஏற்க வேண்டும்‌.

தியானம் யோகியை உருவாக்குகிறது

இறைவனைக்‌ காண்பதற்கு ஒருவர்‌, தினசரி காலையும்‌, இரவும்‌, மற்றும்‌ நாள்‌ முழுவதிலும்‌ எப்பொழுதாவது கிடைக்கும்‌ சிறிது ஓய்வு நேரத்திலும்‌ தியானம்‌ செய்ய வேண்டும்‌. இத்துடன்‌ கூட, வாரத்தில்‌ ஒரு நாள்‌ ஆறு மணி நேரம்‌ தியானம்‌ செய்வது முக்கியமாகும்‌. இது ஒன்றும்‌ நியாயமற்றதல்ல; சில மனிதர்கள்‌ பியானோ வாசிக்கும்‌ பயிற்சியை வாரத்தின்‌ ஒவ்வொரு நாளிலும்‌ பத்து மணி நேரம்‌ செய்கிறார்கள்‌. அதைப்‌ பற்றி அவர்கள்‌ எதுவும்‌ நினைப்பதில்லை; ஆன்மீக வல்லமை பெறுவதற்கு இறைவனுக்கு அதிக நேரம்‌ கொடுப்பது அவசியம்‌. நாம்‌ வேறெதையும்விட இறைவனையே அதிகம்‌ நேசிக்கிறோம்‌ என்று அவனை நாம்‌ உணரச்‌ செய்யவேண்டும்‌. நீங்கள்‌ தியானத்தில்‌ அனுபவம்‌ பெற்று, உயர்‌ உணர்வு நிலைக்கு ஆழ்ந்து போக முடியும்பொழுது, ஐந்து மணிநேரத்‌ தூக்கம்‌ போதுமானது. இரவின்‌ மீதி நேரம்‌ தியானத்திற்காக பயன்படுத்தப்படவேண்டும்‌. இறைவன்‌ மீது தியானம்‌ செய்வதற்கு ஒருவர்‌ இரவுகள்‌, அதிகாலைகள்‌ மற்றும்‌ விடுமுறை நாட்களைப் ‌பயன்படுத்தலாம்‌. இந்த முறையில்‌ எவரும்‌, மும்முரமாக உள்ள மேலை நாட்டவர்கூட, ஒரு யோகி ஆகலாம்‌. எனவே ஒரு மேலைநாட்டு யோகி ஆகுங்கள்‌. நீங்கள்‌ என்னைப்‌ போன்று, ஒரு தலைப்பாகை அணியவோ அல்லது நீளமுடியை வைத்துக்‌கொள்ளவோ அவசியமில்லை!

“தேன்கூடுகள்‌” ஆகிய தேவாலயங்கள்‌ நமக்குத்‌ தேவை. ஆனால்‌ அந்த தேவாலயங்களை, நமது சொந்த ஆத்ம-அனுபூதி என்ற “தேன்‌” ஆல்‌ நாம்‌ நிரப்பவேண்டியது அவசியமாகிறது. தேவாலயங்களில்‌ கூட, இறைவன்‌ நிச்சயமாக இருக்கிறான்‌; ஆனால்‌ வெறுமனே நீங்கள்‌ அங்கு செல்வதால்‌ மட்டும்‌, இறைவன்‌ தரிசனம்‌ கொடுக்க அவனைத்‌ தூண்ட முடியாது. தேவாலயத்திற்குப்‌போவது நல்லது; ஆனால்‌ தினசரி தியானம்‌ அதைவிடச்‌ சிறந்தது. இரண்டையும்‌ செய்யுங்கள்‌. ஏனென்றால்‌ தேவாலயத்திற்கு செல்வதிலிருந்து நிச்சயமாக உங்களுக்கு ஊக்கம்‌ கிட்டும்‌. தினசரி தியானத்திலிருந்து அதைவிடச்‌ சிறந்த உயர்நிலையை நீங்கள்‌ பெறுவீர்கள்‌. ஒரு பக்தனுடைய இதயம்‌ கொழுந்துவிட்டு எரியும்‌ பொழுதும்‌, ஒன்றுக்குப்‌ பின்‌ ஒன்றாக பிரார்த்தனை குண்டுகளை வீசும்‌ பொழுதும்தான்‌, இறைவன்‌ அவனிடம்‌ சரணடைகிறான்‌. அவனை அடைவதற்கு அந்த இடைவிடாத பக்தி தேவை. ஒரு யோகியாக இருந்து அதே சமயம்‌ நவீன உலகத்தோடு ஒட்டிச்‌செல்வதற்கு, வீட்டில்‌ தியானம்‌ செய்வதும்‌, தன்னை ஒழுங்கு படுத்திக்‌ கொள்ளுவதும்‌, மேலும்‌ எல்லா கடமைகளையும்‌, அவை இறைவனுக்கு செய்யும்‌ ஒரு சேவை என்ற மனப்பாங்கில்‌ செய்தலும்‌ அவசியம்‌.

என்னுடைய மிகப்‌ பெரிய விருப்பம்‌, மனித ஆன்மாக்களில்‌ இறைவனது திருக்கோயில்களைக்‌ கட்டுதலாகும்‌; மனிதர்களின்‌ முகங்களில்‌ இறைவனது புன்னகையைக்‌ காண்பது ஆகும்‌. வாழ்க்கையின்‌ எல்லா சாதனைகளிலும்‌ மிக முக்கியமானது. ஒருவனுடைய சொந்த ஆன்மாவில்‌ இறைவனது திருக்கோயிலை, நிறுவுவதுதான்‌. மேலும்‌ இது எளிதாக செய்யப்படக்‌ கூடியது இதனால்தான்‌ ஸெல்‌ஃப்‌-ரியலைசேஷன்‌ ஃபெலோஷிப்‌ மேலை நாட்டிற்கு அனுப்பப்பட்டது.

தனது ஆன்மக்‌ கோவிலில்‌ இறைவனை நிர்மாணித்த எவரும்‌ ஒரு யோகியாவார்‌. அவர்‌ என்னுடன்‌ சேர்ந்து, யோகமானது கிழக்கு, வடக்கு, தெற்கு, மேலும்‌ மேற்கிலும்‌ உள்ள-எல்லா மக்களுக்காகவும்‌ ஆனது என்றும்‌, அவர்கள்‌ மத சாத்திரங்களின்‌ கிளைச்‌ சாலைகளைப்‌ பின்பற்றி, யோகத்தின்‌ நெடுஞ்சாலையில்‌ இணையலாம்‌ என்றும்‌ கூறலாம்‌, சரியான மார்க்கம்‌ இறைவனுடைய பேரானந்த அரண்மனைக்கு இட்டுச்‌ செல்கிறது; அங்கு சென்றடைந்த ஒருவர்‌, “அதனின்று ஒருக்காலும்‌ நீங்குவதில்லை” (வெளிப்படுத்தின விசேஷம்‌ 3:12 ‌).

மேலும் படிப்பதற்காக

இதைப் பகிர