கிரியா யோகத்தின் பலன்கள்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகளிலிருந்தும் நூல்களிலிருந்தும்:

பரமஹம்ஸ யோகானந்தர் லேக் ஷ்ரைனில்

கிரியா யோகம் சமயத்தின் உண்மையான அனுபவத்தை வழங்குகிறது

“நீங்கள் தியானம் செய்தால் உங்கள் வாழ்க்கை ஆன்மீக உணர்வுநிலையைப் பிரதிபலிக்கும். என் புத்தகம் [ஒரு யோகியின் சுயசரிதம்] வெளியானதிலிருந்து ஒவ்வொருவரும் கிரியா யோகத்தைப் பற்றிக் கேட்கின்றனர். அதுதான் என் நோக்கம். நான் இறையியல் கற்பனைவாதங்களைக் கொடுப்பதற்காக வரவில்லை, ஆனால் எதனால் நேர்மையானவர்கள் இறைவனைப் பற்றி உண்மையாகவே அறிய முடியுமோ, வெறுமனே கற்பனைவாதம் செய்ய அல்ல, அந்த உத்தியை வழங்குவதற்கு வந்தேன்… கிரியா யோகப் பயிற்சி உண்மையான சமய அனுபவத்தைக் கொடுக்கிறது; இறைவனைப் பற்றி வெறுமனே பேசுவதனால் அதைப் பெற முடியாது. இயேசு கூறினார்: ‘நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை, ஆண்டவரே, ஆண்டவரே என ஏன் அழைக்கிறீர்கள்’

“கிரியா யோகத்தின் மூலம் நான் என் ஆன்மீகக் கண்ணைத்திறக்கும் போது, என் உணர்வுநிலையிலிருந்து உலகம் முழுவதும் விழுந்து விடுகிறது மற்றும் நான் இறைவனுடன் இருக்கிறேன். மேலும் ஏன் கூடாது? நான் அவனுடைய குழந்தை. புனித இக்னேஷியஸ் கூறினார், ‘இறைவன் தன் அளவிலாப் பரிசுகளை வழங்குவதற்காக விரும்பும் இதயங்களைத் தேடுகிறான்….’ அது மிகவும் அழகானது, மற்றும் அதைத்தான் நான் நம்புகிறேன். இறைவன் தன் வெகுமதிகளை வழங்குவதற்காக விருப்பமுள்ள இதயங்களைத் தேடுகிறான். அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான், ஆனால் நாம் ஏற்றுக்கொள்வதற்கான முயற்சியைச் செய்யத் தயாராக இல்லை.”

— பரமஹம்ஸ யோகானந்தர்,
ஜர்னி டு ஸெல்ஃப்-ரியலைசேஷன்

இறைவனின் அருளாசிகளைப் பெற உங்களைத் திறந்து வைய்யுங்கள்

Divine Mother's eyes seeing devotees Prayers and Devotion

‘பக்தியுடன் கூடிய பிரார்த்தனை இறைவனின் தங்குதடையின்றிப் பாயும் அருளாசிகளுக்கு உங்களைத் திறந்து வைத்துக்கொள்ளும் ஓர் அற்புதமான வழியாகும், அது எல்லா அருளாசிகளையும் கொண்ட எல்லையற்ற பேராதாரத்துடன் மனித வாழ்வை இணைக்கும் ஓர் இன்றியமையாத தொடர்பு. ஆனால் மனம் புறத்தே அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது பிரார்த்தனை பயனுள்ளதாக அமைய நீண்ட காலம் பிடிக்கும். அதனால்தான் ஒருமணி நேர கிரியா யோகத் தியானத்தால் இருபத்தி நான்கு மணி நேர சாதாரணப் பிரார்த்தனையை விட அதிகப் பலனை வழங்க முடியும்.

“கிரியா உத்தியை ஒரு சிறிது நேரத்திற்கே கூட ஆழ்ந்து பயிற்சி செய்து, அதனால் விளைந்த அசைவற்ற நிலையில் தியானத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்போர் தமது பிரார்த்தனையின் ஆற்றல் இரு மடங்காக, மும்மடங்காக, ஒரு நூறு மடங்கு அதிக ஆற்றல்வாய்ந்ததாக இருக்கக் காண்கின்றனர். ஒருவர் மௌனமெனும் அக ஆலயத்தில் நுழைந்து இறைவனின் பீடத்தின் முன் பிரார்த்தனையுடனும் அவனது தரிசனத்தை வேண்டியும் வழிபட்டால், அவன் விரைவாக வருகிறான். உணர்வுநிலை உடலின் மற்றும் அதன் சூழல்களின் புலன்-தளத்திலிருந்து பின்வாங்கப்பட்டு ஆன்ம உணர்வின் மூளை-தண்டுவட ஆலயங்களில் மையம் கொண்டிருக்கும் போது, அதுவே பிரார்த்தனை செய்ய மிகவும் பயனளிக்கும் நேரம் ஆகும்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்
தி செகண்ட் கமிங் ஆஃப் க்ரைஸ்ட்: தி ரிசரெக்‌ஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் விதின் யு

கிரியா யோகம்—இறைத் தொடர்பின் மிக உயர்ந்த வழிமுறை

யோகி ஏழு சக்கரங்களுடன்

[பகவத் கீதை IV:29]

கிரியா யோகம் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணனால் இரு முறை குறிப்பிடப்படுகிறது. ஒரு பத்தி கூறுகிறது: “வெளிச்செல்லும் மூச்சினுள் உட்செல்லும் மூச்சை அர்ப்பணித்தவாறு மற்றும் உட்செல்லும் மூச்சினுள் வெளிச்செல்லும் மூச்சை அர்ப்பணித்தவாறு, யோகி இரண்டு மூச்சுகளையும் விளைவற்றதாக்குகிறார்; இவ்வாறு அவர் இதயத்திலிருந்து பிராணனை வெளியேற்றி உயிராற்றலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.” அதன் பொருள்-விளக்கம்: “நுரையீரல்கள், இதயம் ஆகியவற்றின் இயக்கத்தை அமைதிப்படுத்துவதன் வாயிலாக பிராணனின் (உயிராற்றல்) ஒரு கூடுதல் தரவை உறுதிப்படுத்துவதன் மூலம் உடலில் சிதைவைத் தடுத்து நிறுத்துகிறார்; அவர் அபானனின் (கழிவகற்ற ஓட்டம்) கட்டுப்பாட்டின் மூலம் உடலில் வளர்ச்சியின் வகைமாற்றங்களையும் தடுத்து நிறுத்துகிறார். இவ்வாறு சிதைவையும் வளர்ச்சியையும் விளைவற்றதாக்கியவாறு, யோகி உயிராற்றல் கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்கிறார்.”

“இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உன் மூலமாக உலகிற்கு நான் வழங்கிக் கொண்டிருக்கும் கிரியா யோகம்,” பாபாஜி லாஹிரி மகாசயரிடம் கூறினார், “கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வழங்கிய அதே அறிவியலின் புத்தாக்கம் ஆகும்: மற்றும் அது பதஞ்சலிக்கும் கிறிஸ்துவிற்கும், மற்றும் புனித யோவான், புனித பால் ஆகியோருக்கும் மற்ற சீடர்களுக்கும் பின்னர் தெரிய வந்தது.”

— பரமஹம்ஸ யோகானந்தர்,
ஒரு யோகியின் சுயசரிதம்

கிரியா யோகமே இறைத் தொடர்பின் மிக உயர்ந்த வழிமுறை. இறைவனுக்கான, என்னுடைய சுய தேடலில் நான் இந்தியா முழுவதும் பயணம் செய்து அதன் மிகச் சிறந்த மகான்கள் ஞானத்தைக் கூற கேட்டேன். ஆகவே யோகதா சத்சங்க [ஸெல்ஃப்-ரியலைசேஷன்] போதனைகள்தான் இறைவனாலும் பெரிய மகான்களாலும் மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த உண்மைகளும் அறிவியல் உத்திகளும் ஆகும் என்று என்னால் உண்மையை உறுதிப்படுத்த முடியும்.

கிரியா வின் பின்விளைவுகள் அவற்றுடன் மிகுந்த அமைதியையும் பேரின்பத்தையும் கொண்டுவருகின்றன. கிரியா வுடன் வரும் ஆனந்தம் எல்லா இன்பமய உடல்சார் உணர்வுகளையும் ஒன்றுசேர்த்தால் வரும் ஆனந்தங்களை விடவும் மிக அதிகமானது. ‘புலன்சார் உலகின் பக்கம் ஈர்க்கப்படாமல், யோகி பெரும் சுயத்தில் உள்ளார்ந்திருக்கும் என்றும் புதிய ஆனந்தத்தை அனுபவிக்கிறார். பரம்பொருளுடனான ஆன்மாவின் தெய்வீக ஐக்கியத்தில் ஈடுபட்டு, அவர் அழியாப் பேரின்பத்தை அடைகிறார்’ (பகவத் கீதை V:21). தியானத்தில் அனுபவிக்கப்படும் அந்த ஆனந்தத்திலிருந்து நான் ஒரு நூறு உறக்கங்களின் ஓய்வைப் பெறுகிறேன். மேம்பட்ட கிரியா யோகிக்கு உறக்கம் கிட்டத்தட்ட தேவையற்றாதாகவே ஆகிறது.

கிரியா யோகத்தின் மூலம் பக்தருடைய கண்கள், மூச்சு, இதயம் ஆகியவை அமைதிப் படுத்தப்பட்டிருக்கும் சமாதிக்குள் அவர் நுழையும் போது, மற்றோர் உலகம் தெரிய வருகிறது. மூச்சு, ஒலி மற்றும் கண்களின் அசைவு இந்த உலகிற்கு உரியவை. ஆனால் மூச்சைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி விண்ணுலக சூட்சும மற்றும் காரண உலகங்களில் நுழைந்து அங்கே இறைவனின் மகான்களுடன் தொடர்பு கொள்ளலாம், அல்லது பேரண்ட உணர்வுநிலையினுள் நுழைந்து இறைவனுடன் தொடர்பு கொள்ளலாம். யோகிக்கு வேறு எதிலும் ஆர்வம் இல்லை.

“யாரெல்லாம் நான் கூறியிருப்பவற்றை நினைவில் வைத்தவாறு, வேறு எல்லாவற்றிற்கும் குறைவான முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அவர்கள் தவறாமல் இறைவனை அடைவார்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்,
மனிதனின் நிரந்தரத் தேடல்

தீய மனப் பழக்கங்களையும் கர்மவினையையும் அடியோடு அழியுங்கள்

“உங்களுடைய பழக்கங்கள் ஒவ்வொன்றும் மூளையில் ஒரு குறிப்பிட்ட ‘பள்ளத்தை’ அல்லது தடத்தை உருவாக்குகிறது. இந்த வடிவமைப்புகள் உங்களை ஒரு குறிப்பிட்ட வழியில், பெரும்பாலும் உங்களுடைய விருப்பத்திற்கு எதிராக, நடக்கச் செய்கின்றன. உங்களுடைய வாழ்க்கை மூளையில் நீங்களே உருவாக்கி இருக்கும் அந்தப் பள்ளங்களைப் பின்பற்றுகின்றன. அந்தப் பொருளில் நீங்கள் ஒரு சுதந்திரமான நபர் அல்ல; நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் பழக்கங்களுக்கு நீங்கள் ஏறத்தாழ அடிமையாக இருக்கிறீர்கள். இந்த வடிவமைப்புகள் எத்துணை உறுதியாக அமைந்திருக்கின்றனவோ, அந்த விகித அளவிற்கு நீங்கள் ஒரு கைப்பாவையாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் அந்த கெட்ட பழக்கங்களின் கட்டளைகளை மட்டுப்படுத்த முடியும். எப்படி? அவற்றிற்கு எதிரான நல்ல பழக்கங்களின் மூளை வடிவமைப்புகளை உருவாக்குவதன் மூலம். மேலும் உங்களால் தியானத்தின் மூலம் கெட்ட பழக்கங்களின் பள்ளங்களை முழுவதுமாக அழித்துவிட முடியும். வேறெந்த வழியும் இல்லை. ஆயினும், நல்ல தோழமையும் நல்ல சூழலும் இல்லாமல் நல்ல பழக்கங்களை உருவாக்கி வளர்க்க முடியாது. மேலும் நல்ல தோழமையும் தியானமும் இல்லாமல் உங்களைக் கெட்ட பழக்கங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள உங்களால் முடியாது.

“நீங்கள் இறைவன் மீது தியானம் செய்யும் ஒவ்வொரு முறையும் உங்களுடைய மூளை வடிவமைப்புகளில் பயனுள்ள மாற்றங்கள் ஏற்படுகின்றன. நீங்கள் ஒரு நிதித்துறைத் தோல்வியாளர் அல்லது ஒரு தார்மீகத் தோல்வியாளர் அல்லது ஓர் ஆன்மீகத் தோல்வியாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘நானும் தெய்வத்தந்தையும் ஒன்றே,’ என்று சங்கல்பம் செய்தவாறு ஆழ்ந்த தியானத்தின் வாயிலாக நீங்கள் இறைவனின் குழந்தையே என்று அறிவீர்கள். அந்தக் கருத்தியலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய ஆனந்தத்தை நீங்கள் உணரும் வரை தியானம் செய்யுங்கள். ஆனந்தம் உங்களுடைய இதயத்தைத் தாக்கும் போது, இறைவன் உங்களுடைய ஒலிபரப்பிற்கு மறுமொழியளித்திருக்கிறான்; அவன் உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் நேர்நிலையான சிந்தனைக்கும் மறுமொழியளித்துக் கொண்டிருக்கிறான். இது ஒரு தெளிவான மற்றும் திட்டவட்டமான வழிமுறை ஆகும்:

“முதலில், ‘நானும் தெய்வத்தந்தையும் ஒன்றே’ என்ற சிந்தனையின் மீது தியானம் செய்யுங்கள்; ஒரு பெரிய அமைதியையும் அதன்பின் உங்கள் இதயத்தில் ஒரு பெரிய ஆனந்தத்தையும் உணர முயற்சி செய்தவாறு தியானம் செய்யுங்கள். அந்த ஆனந்தம் வரும் போது, ‘தெய்வத்தந்தையே, நீ என்னுடன் இருக்கிறாய். என் மூளை-உயிரணுக்களிலிருந்து தவறான பழக்கங்களையும் கடந்தகால விதைப் போக்குகளையும் வறுத்தெடுக்கும்படி என்னுள் இருக்கும் உன் சக்திக்கு ஆணையிடுகிறேன்.’ என்று கூறுங்கள். நீங்கள் ஆண் அல்லது பெண் என்ற வரையறுக்கும் உணர்வுநிலையை உங்களிடமிருந்து வெளியேற்றுங்கள்; நீங்கள் இறைவனின் குழந்தை என்று அறிந்து கொள்ளுங்கள். பின் மனத்தளவில் சங்கல்பம் செய்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்: ‘என்னை மாற்றும் படி, என்னை ஒரு கைப்பாவையாக ஆக்கியிருக்கும் கெட்ட பழக்கங்களின் பள்ளங்களை அழிக்கும் படி என் மூளை உயிரணுக்களுக்கு ஆணையிடுகிறேன். எம்பெருமானே, அவற்றை உன் தெய்வீக ஒளியில் எரித்து விடு.’ மேலும் நீங்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா தியான உத்திகளை, குறிப்பாக கிரியா யோகத்தைப் பயிற்சி செய்யும் போது, நீங்கள் இறைவனின் ஒளி உங்களுக்கு ஞானஸ்நானம் செய்வதை உண்மையாகவே பார்ப்பீர்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்,
தெய்வீகக் காதல்

இதைப் பகிர