ஓர் ஆரம்ப சாதகரின் தியானம்

பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி

yogananda meditating outdoor

1)பிரார்த்தனை

தியான அமர்வுநிலையில் நீங்கள் நிலைபெற்ற பிறகு, இறைவனுக்கு உங்களுடைய இதயத்திலிருந்து ஒரு பிரார்த்தனையை, உங்களுடைய பக்தியை வெளிப்படுத்தியவாறும் தியானத்தில் அவனுடைய அருளாசிகளை வேண்டியவாறும், முன்வைப்பதன் மூலம் தொடங்குங்கள்.

2) அழுத்தம் முழுவதையும் நீக்க இறுக்கமாக்கித் தளர்த்துங்கள்

  • முழுஉடலையும் இறுக்கமாக்கிய
    வாறும் கைமுட்டிகளை இறுக்க மூடியவாறும் மூச்சை உள்ளிழுங்கள்
  • எல்லா உடல் உறுப்புகளையும் ஒரே நேரத்தில் தளர்த்துங்கள் மற்றும் அவ்வாறு செய்யும் போது வாயின் வழியாக மூச்சை ஒரு “ஹஹ், ஹாஹ்…” என்ற இரட்டை வெளிச்சுவாசத்தின் மூலம் வெளியேற்றுங்கள்.

இந்தப் பயிற்சியை மூன்று முதல் ஆறு முறை வரை செய்யுங்கள். அதன்பின் மூச்சை மறந்து விடுங்கள். அது சாதாரண சுவாசத்தில் இருப்பதைப் போல, தன்னிச்சையாக, இயல்பாக உள்ளேயும் வெளியேயும் பாய விடுங்கள்.

3)கவனத்தை ஆன்மீகக்கண்ணில் குவியுங்கள்

பாதி மூடிய (அல்லது முழுதும் மூடிய நிலை உங்களுக்கு அதிக வசதியாக இருக்குமானால் முழுதும் மூடிய) கண்களுடன் புருவமத்தியின் வழியாக வெளியே பார்ப்பதைப் போல பார்வையும் கவனத்தையும் குவித்தவாறு மேல்நோக்கிப் பாருங்கள். (ஆழ்ந்த ஒருமுகப்பாட்டில் உள்ள ஒருவர் இந்த இடத்தில்தான் தன் புருவங்களை அடிக்கடி ‘நெரிக்கிறார்’.) கண்களைக் குறுக்காகச் செலுத்தவோ அல்லது சிரமப்படுத்தவோ செய்யாதீர்கள்; ஒருவர் தளர்வாகவும் அமைதியாக ஒருமுகப்பட்டும் இருக்கும் போது மேல்நோக்கிய பார்வை இயல்பாகவே வருகிறது.

Buddha meditating

முக்கியமானது என்னவென்றால், முழு கவனத்தையும் புருவமத்தியில் நிலைபெறச் செய்வதாகும். இதுவே கூடஸ்த அல்லது கிறிஸ்து உணர்வுநிலை மையம், இயேசு கூறிய ஒருமுகப்பட்ட கண்ணின் இருப்பிடம்: “கண்தான் உடலுக்கு விளக்கு. கண் ஒன்றாக இருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்” (மத்தேயு 6:22)

தியானத்தின் நோக்கம் நிறைவேறும் போது, பக்தர் தன் உணர்வுநிலை ஆன்மீகக்கண்ணின் மீது தாமாகவே ஒருமுகப்படுவதைக் காண்கிறார், மற்றும் தன் அக ஆன்மீகக் கொள்திறனைப் பொறுத்து, பரம்பொருளுடனான ஓர் ஆனந்த தெய்வீக ஐக்கிய நிலையை அனுபவிக்கிறார்.

ஆன்மீகக்கண்ணைத் தரிசிக்க ஆழ்ந்த ஒருமுகப்பாடும் அமைதியும் தேவை: ஒரு நீல வட்டத்தைச் சுற்றிலும் ஒரு பொன்வண்ண வட்ட ஒளி; நீல வட்டத்தின் நடுவே துடிக்கும் ஒர் ஐம்முக வெண்ணிற நட்சத்திரம். ஆன்மீக்கண்ணைப் பார்க்கவே செய்பவர் ஆழ்ந்த ஒருமுகப்பாட்டின் மூலமும் இறைவனுக்கான அர்ப்பணிப்பு மிகுந்த பிரார்த்தனையின் மூலமும் அதை ஊடுறுவக் கடுமுயற்சி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான அமைதி, ஒருமுகப்பாடு ஆகியவற்றின் ஆழம் [யோகதா சத்சங்கப் பாடங்கள் -ல் போதிக்கப்பட்ட] யோகதா சத்சங்க ஒருமுகப்பாட்டு மற்றும் தியான அறிவியல் உத்திகளின் நிலையான பயிற்சியின் வாயிலாக இயல்பாகவே உருவாகிறது.

4) உங்கள் வாழ்வை இறைவனில் நிலைபெறச் செய்தல்

Former president of YSS Daya Mata in meditative trance

Ways to Deepen Your Meditation

(excerpt) (2:54 min)

நீங்கள் ஆன்மீகக்கண்ணைப் பார்க்கிறீர்களோ அல்லது இல்லையோ, நீங்கள் இறைவனிடமும் அவனுடைய பெரிய மகான்களிடமும் ஆழ்ந்து பிரார்த்தனை செய்தவாறு, புருவமத்தியில் உள்ள கூடஸ்த மையத்தில் தொடர்ந்து ஒருமுகப்பட்டு இருக்க வேண்டும். உங்களுடைய இதய மொழியில் அவர்களுடைய தரிசனத்திற்காகவும் அவர்களுடைய அருளாசிகளுக்காகவும் வணங்கி வேண்டிக்கொள்ள வேண்டும்.

யோகதா சத்சங்கப் பாடங்களில் இருந்தோ, அல்லது பரமஹம்ஸ யோகானந்தரின் விஸ்பர்ஸ் ஃப்ரம் எடேர்னிடி அல்லது மெடாஃபிஸிகல் மெடிடேஷன்ஸ் -ல் இருந்து ஒரு சங்கல்பத்தையோ அல்லது ஒரு பிரார்த்தனையையோ எடுத்துக் கொண்டு, அதை உங்களுடைய சொந்த பக்திமிகு ஏக்கத்துடன் ஆன்மீகமயமாக்குவது ஒரு நல்ல பயிற்சி ஆகும்.

நீங்கள் இறைவனின் மறுமொழியை அரவமற்ற, ஆழ்ந்த அமைதியாகவும் அக ஆனந்தமாகவும் உணரும் வரை, கவனத்தைப் புருவமத்தியில் வைத்தவாறு, இறைவனிடம் மௌனமாக கீதமிசைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

பரமஹம்ஸயோகானந்தரின் பிரார்த்தனைகள்

ஒரு சங்கல்பத்தைப் பயிற்சி செய்யுங்கள்

5)ஆழ்ந்த உத்திகளுக்கான முன்னேற்பாடாக நாள்தோறும் பயிற்சி செய்யுங்கள்

 

Devotees Meditating in Smriti Mandir, Ranchiதியான வேளை குறைந்த பட்சம் காலையில் முப்பது நிமிடங்களுக்கும் இரவில் முப்பது நிமிடங்களுக்கும் நீடிக்க வேண்டும். தியான அமைதி நிலையை அனுபவித்தவாறு எத்துணை அதிக நேரம் நீங்கள் அமருகிறீர்களோ, அத்துணை வேகமாக நீங்கள் ஆன்மீகரீதியாக முன்னேறுவீர்கள். தியானத்தில் நீங்கள் உணரும் அமைதியை உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் எடுத்துச் செல்லுங்கள்; அந்த அமைதி உங்களுடைய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர உங்களுக்கு உதவும்.

மேலே கூறப்பட்ட அறிவுறுத்தல்களை நாள்தோறும் பயிற்சி செய்வதன் வாயிலாக, யோகதா சத்சங்கப் பாடங்கள் -ல் கொடுக்கப்பட்டுள்ள ஒருமுகப்பாடு, தியானம் ஆகியவற்றின் ஆழ்ந்த உத்திகளின் பயிற்சிக்காக உங்களை நீங்கள் தயார் செய்து கொள்ள முடியும். இந்த அறிவியல் உத்திகள் இறைவனின் இருப்பு எனும் மாபெரும் கடலில் என்றென்றைக்கும் ஆழ்ந்து முத்துக்குளிக்க உங்களை இயலச் செய்யும். நாம் அனைவரும் இக்கணத்தில் அந்தப் பரம்பொருள் எனும் பெருங்கடலில்தான் இருக்கிறோம்; ஆனால் உறுதியான, அர்ப்பணிப்பு மிகுந்த, அறிவியல் தியானத்தின் மூலமாக மட்டுமே நாம் இறைவனின் பேரின்பமெனும் பரந்த பெருங்கடலின் மீதுள்ள தனிப்பட்ட ஆன்ம அலைகள் என்று உணர்வுப்பூர்வமாக அறியலாம்.

தியானத்தில் ஆழமாகச் செல்வதற்காக கூடுதல் ஆதாரங்கள்

பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து:

“இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் நுழைவதற்கான பாதையின் ஒரு முதற்படியாக, பக்தர் நிமிர்ந்த முதுகுத்தண்டுடன் சரியான தியான அமர்வுநிலையில் அசைவற்று அமர்ந்து உடலை இறுக்கமாக்கித் தளர்த்த வேண்டும்—ஏனெனில் தளர்வின் மூலம் உணர்வுநிலை தசைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

Meditation at Sea shore during sunset

“யோகி முறையான ஆழ்ந்த சுவாசிப்புடன், அதாவது மூச்சை உள்ளிழுத்தவாறு முழு உடலையும் இறுக்கமாக்குதல், மூச்சை வெளியேற்றியவாறு தளர்வாக்குதல் ஆகியவற்றைப் பலமுறை செய்தவாறு, தொடங்குகிறார். ஒவ்வொரு வெளிமூச்சுடனும், எல்லாத் தசை இறுக்கமும் இயக்கமும் அகற்றி எறியப்பட வேண்டும்; இது உடல் அசைவற்ற நிலைக்கு வரும் வரை தொடர வேண்டும்.

“அதன்பின், ஒருமுகப்பாட்டு உத்திகளின் மூலம், மனத்திலிருந்து அமைதியற்ற இயக்கம் நீக்கப்படுகிறது. உடல், மனம் ஆகியவற்றின் முழுநிறைவான அசைவற்ற நிலையில், யோகி ஆன்ம இருப்பின் விளக்க முடியாத அமைதியை அனுபவிக்கிறார்.

“உடலெனும் ஆலயத்தில் உயிர் வைக்கப்பட்டுள்ளது; மனமெனும் ஆலயத்தில் ஒளி வைக்கப்பட்டுள்ளது; ஆன்மாவெனும் ஆலயத்தில் அமைதி வைக்கப்பட்டுள்ளது. எத்துணை அதிகம் ஆழமாக ஒருவர் ஆன்மாவினுள் செல்கிறாரோ, அத்துணை அதிக அமைதியை அவர் உணருகிறார்; அதுதான் உயர்-உணர்வுநிலை.

“ஆழ்ந்த தியானத்தின் மூலம் பக்தர் அந்த அமைதியின் விழிப்புணர்வை விரிவாக்கி, அதனால் தன் உணர்வுநிலை பிரபஞ்சம் முழுவதும் பரவுவதாகவும், அந்த அமைதியில் எல்லா உயிர்களும் எல்லாப் படைப்பும் விழுங்கப்படுவதாகவும் உணரும் போது, அவர் பேரண்டப் பேருணர்வுநிலையினுள் நுழைந்து கொண்டிருக்கிறார். அவர் அந்த அமைதியை எல்லா இடங்களிலும் உணருகிறார்—மலர்களில், ஒவ்வொரு மனிதரிலும், வளிமண்டலத்தில். அவர் பூமியும் எல்லா உலகங்களும் அந்த அமைதிப் பெருங்கடலில் நீர்க்குமிழிகளைப் போல மிதந்து கொண்டிருப்பதைக் காண்கிறார்.

—பரமஹம்ஸ யோகானந்தர்

இதைப் பகிர