ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவர் சுவாமி சிதானந்த கிரியின் குரு பூர்ணிமாவுக்கான செய்தி – 2019

10 ஜூலை, 2019

அன்பர்களே,

குரு பூர்ணிமா என்பது, குருவுக்கு – நம் ஆன்மாவின் உள்ளார்ந்த பிரகாசத்தை மறைக்கும் மாயையின் “இருளை அகற்றுபவர்” க்கு அஞ்சலி செலுத்தும் மரபை பின்பற்றும் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள பல ஆன்மாக்களுடன் இணைய ஒரு சிறப்பான நாள். நமது அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் நம் வாழ்வில் பொழியும் எண்ணற்ற அருளாசிகளுக்காகவும், அவர் நமக்கு அருளிய சாதனாவை மேலும்  அதிக உற்சாகத்துடன் பின்பற்றுவதற்கான நமது உறுதியை புதுப்பிக்கவும், நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

குருதேவரின் எங்கும் நிறைந்த உணர்வுநிலையில் அவருக்கும் நமக்கும் இடையில் எல்லை எதுவும் இல்லை. அவர் தனது ஸ்தூல வடிவத்தை விட்டு வெளியேறிய பிறகும், தனது சாசுவத அக்கறை மற்றும் வழிகாட்டுதலை தனது சீடர்களுக்கு உறுதியளித்தார்: “நான் எப்போதும் உங்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருப்பேன், உண்மையான பக்தன் தனது ஆன்மாவின் மௌன ஆழத்தில் என்னை நினைக்கும் போதெல்லாம், நான் அருகில் இருப்பதை அவன் அறிவான். “அவர் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார்” என்ற எண்ணத்துடன் அவருடைய பாடங்களையும் பிற எழுத்துக்களையும் நீங்கள் படிக்கும்போது, அந்த வார்த்தைகள் அவருடைய இறை உணர்வுநிலையின் மாற்றும் சக்தியால் தோய்விக்கப்பட்டு உயிர்ப்புடன் உங்களுக்கு கிடைக்கப் பெறும். நீங்கள் ஒரு சிக்கலைத் தீர்க்க வேண்டியிருக்கும் போது, அவருடைய அமைதி அலையால் நீங்கள் சூழப்பெற்று, அவருடைய வழிகாட்டுதலை வேண்டினால், உங்களுக்கான வழியை இன்னும் தெளிவாகக் காண அவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் தவறு செய்தாலோ அல்லது விரும்பத்தகாத சூழ்நிலைகளை எதிர்கொண்டாலோ, “நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என அகத்துள் அவரிடம் கேளுங்கள். அவருடைய வழிகாட்டுதலுக்குத் திறந்த மனதுடன் இருப்பது உங்கள் ஆன்ம முன்னேற்றத்தை துரிதப்படுத்த புரிதல் எனும் விலைமதிப்பற்ற இரத்தினங்களைக் கொண்டுவரும்.

குருவுடன் ஆழ்ந்த இணக்கம் தியானம் மூலம் வருகிறது. குருதேவரின் படத்தின் முன்பாக நீங்கள் அமர்ந்து தியானம் செய்தவுடன், அவரது உயர் உணர்வுநிலை மற்றும் பக்தியின் சக்தி உங்கள் முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், அவரது இருப்பின் முன் உங்களை வைத்திருங்கள். அவரது அருளாசிகள் ஊடுருவிய புனித ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் உத்திகளைப் பயிற்சி செய்வதன் மூலம், உள்ளத்தின் அமைதியின்மை படிப்படியாக மறைந்துவிடும். உங்கள் ஆன்மாவின் அமைதிக் கோவிலில், அவருடைய எல்லையற்ற அன்பின் அரவணைப்பை நீங்கள் மிகவும் தெளிவாக உணர்வீர்கள், அது உங்களுக்குள் இருக்கும் தெய்வீக குணங்களை வெளிக்கொணர உங்களுக்கு எப்போதும் ஊக்கமளித்து உதவும்.

இறைவன் மற்றும் குருதேவரின் அன்பும் அருளாசிகளும் உங்களை எப்போதும் சூழ்ந்திருக்கட்டும்,

சுவாமி சிதானந்த கிரி

பதிப்புரிமை © 2019 சுய-உணர்தல் பெல்லோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை

இதைப் பகிர