ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் 70-வது ஆண்டு விழா

17 ஜூன், 2016

2016 ஜூன் 10, நமது மதிப்பிற்குரிய சங்கமாதாவும் தலைவியுமான ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா, இறைவன் மற்றும் குருவின் அன்புக்கும் சேவைக்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்காக பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமத்திற்கு பிரவேசித்த நாளின் எழுபதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-பின் ஆன்மீகத் தலைவியாகவும் (ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா மறைந்ததிலிருந்து), அதற்கு முன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக துணைத் தலைவியாகவும், தலைமைப் பதிப்பாசிரியராகவும், மிருணாளினி மாதாஜி உலகெங்கிலும் உள்ள ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் உறுப்பினர்களுக்கு இறை ஞானத்துடனும், அன்புடனும் உடல், மனம், இதயம் மற்றும் ஆன்மாவின் முழு அர்ப்பணிப்புடனும் சேவை செய்துள்ளார்.

1946-இல் ஆசிரமப் பயிற்சிக்கு ஸ்ரீ மிருணாளினி மாதா ஒரு சன்னியாசினியாக பரமஹம்ஸ யோகானந்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவருக்கு வயது பதினைந்துதான். 1945-இல் எஸ் ஆர் எஃப் சான்டியாகோ கோயிலில் குருஹேவரை சந்தித்தபோது, வரப்போகும் வருடங்களில் ஒரு முக்கிய பங்கை ஆற்றப்போகிற ஒருவராக குருதேவர் அவரை உடனடியாக அறிந்து கொண்டார்.. எனவே, தனது பெற்றோரின் அனுமதியுடன், 1946 ஜூன் 10-இல், அவர் என்சினிடஸில் உள்ள எஸ் ஆர் எஃப் ஆசிரமத்தில் வசிக்க வந்தார், அங்கு அவர் தனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டுகளை முடித்தார் மற்றும் அதே சமயத்தில் பரமஹம்ஸரின் தனிப்பட்ட வழிகாட்டுதலையும் பெற்றார்.

இந்த சிஷ்யை முற்பிறவிகளிலிருந்து பெற்றிருந்த அபூர்வமான குணத்தை அறிந்த பரமஹம்ஸர், அவர் ஆசிரமத்தில் இருந்த ஒரே ஒரு வருடத்திற்குப் பிறகு, 1947-இல் சன்னியாசத்தின் இறுதி சபதங்களை அவருக்கு வழங்கினார். ஆன்மீக மலர்ச்சியின் புராதன அடையாளமான தாமரை மலரின் தூய்மையைக் குறிக்கும் “மிருணாளினி” என்ற சன்னியாசப் பெயரை அவருக்குத் தேர்ந்தெடுத்தார்.

ஆசிரமத்தில் அவரது வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே, குருதேவர் மற்ற சீடர்களிடம் அவருக்காக அவர் மனக்காட்சியில் கண்டிருந்த பங்கைப் பற்றி பேசினார் — குறிப்பாக அவரது ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் பாடங்கள், நூல்கள் மற்றும் சொற்பொழிவுகளின் பதிப்பாசிரியராக அவரது எதிர்கால பொறுப்பு. 1950-ஆம் ஆண்டு ராஜரிஷி ஜனகானந்தாவிற்கு அவர் கைப்பட எழுதிய கடிதத்தில், “அவள் இந்த வேலைக்கென விதிக்கப்பட்டு இருக்கிறாள்,” என்று அவர் கூறினார். “நான் அவளுடைய ஆன்மாவை முதலில் பார்த்தபோது இறைவன் அதை எனக்குக் காட்டினார்.” அவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் அவருக்குத் தனிப்பட்ட முறையில் பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை அளிக்க அதிக நேரத்தை அர்ப்பணித்தார்.

அவரது முயற்சியின் விளைவாக வெளியிடப்பட்ட படைப்புகளில் பரமஹம்ஸ யோகானந்தருடைய நான்கு நற்செய்திகளைப் பற்றிய தலைசிறந்த விளக்கவுரை (தலைப்பு: தி செகன்ட் கமிங் ஆஃப் க்றைஸ்ட்: தி ரெஸரக்ஷன் ஆஃப் க்றைஸ்ட் விதின் யு — கிறிஸ்துவின் இரண்டாவது வருகை: உங்களுக்குள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்); பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா — இறைவன் அர்ஜுனனுடன் உரையாடுகிறார்) விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட அவரது மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை; அவரது கவிதை மற்றும் மனவெழுச்சியூட்டும் நூல்களின் பல தொகுதிகள்; மற்றும் அவரது சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பின் மூன்று நீண்ட நூற்கோவைகள் ஆகியவை அடங்கும் — மேலும் பல படைப்புகள் தயாரிப்பில் உள்ளன.

YSS/SRF-இன் நான்காவது தலைவியாக மிருணாளினி மாதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டபோது — 2010 நவம்பர் 30-ஆம் தேதி தான் மறையும் வரை, ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்தாபனத்தின் ஆன்மீக அன்னையாக மகத்தான பங்கை ஆற்றியவரும், வெறுமனே “மா” என்று பயபக்தியுடன் குறிப்பிடப்பட்டவருமான மறைந்த அன்பிற்குரிய ஸ்ரீ தயா மாதாவிற்குப் பிறகு — பல பக்தர்கள், மிருணாளினி மாதா இப் பணியைத் தொடர்வது என்பது அவர்களுக்கு எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வெளிப்படுத்தினர். இயக்குனர்கள் குழுவால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பின்வரும் கடிதம் பெறப்பட்டது:

ஸ்ரீ மிருணாளினி மாதாவை தலைவியாக SRF இயக்குனர் குழு தேர்ந்தெடுத்தது பற்றிய அறிவிப்பைக் கேட்டு ஆழ்ந்த நன்றி என்னை நிறைத்தது. இந்த நேரத்தில் பக்தர்களாகிய எங்களுக்கும், உலகம் முழுவதற்கும் தேவைப்படுவது, மண்ணுலகில் தெய்வீக அன்னையின் பிரதிநிதியாக அவருடைய இனிய பண்பாகும்.

ஓர் அன்னையை இழந்த குழந்தைகளைப் போன்று, மண்ணுலகில் நமது ஆன்மீக அன்னையாகிய மா-வின் மறைவுக்கு பக்தர்கள் வருந்தியதை நான் அறிவேன். மிருணாளினி மா குருதேவரிடம் கிட்டத்தட்ட இன்னும் ஒரு குழந்தையாக, மிகவும் இளையவராக வந்ததையும், குருதேவர் அவரை எப்படி நேசித்தார், வளர்த்தார் என்பதையும் நான் நினைத்துப் பார்த்தேன். அவருடைய ஆரம்ப வருடங்களைப் பற்றி அவர் சொன்ன கதைகள் அவருக்கும் குருதேவருக்கும் இடையிலான இனிய உறவையும் அவருடைய இனிய பண்பையும் காட்டுகின்றன.

இந்த தேர்விற்கு குருதேவருக்கு நன்றி செலுத்தி, இப்போது எங்களுக்கு இன்னொரு அன்னை இருக்கிறார் என்ற எனது உணர்வுகளை வெளிப்படுத்தி, குருதேவரிடம் கூறினேன், “நாங்கள் அவரை எவ்வாறு அழைப்பது — நாங்கள் அவரை மா என்று அழைக்க முடியாது, ஏனென்றால் எங்கள் அன்புக்குரிய ஸ்ரீ தயா மாதா மட்டுமே மா ஆவார். இரண்டாவது மா-வா?” பதில் வந்தது, “இல்லை, ‘இரண்டாவது மா’ அல்ல — ‘அவரும் கூட மா-தான்.’ ” இந்த பதிலைக் கேட்டு கண்ணீர் தானாக வழிந்தது.

அவரும் கூட எங்களுடைய ‘மா-தான்’ ஜெய் குரு!

மிருணாளினி மாதாஜியின் உறுப்பினர்களுக்கான வழக்கமான ஆலோசனை மற்றும் மனவெழுச்சியூட்டும் கடிதங்களும், இந்த இதழில் அவர் எழுதிய விரிவான கட்டுரைகள் மற்றும் வெளியிடப்பட்ட அவரது எண்ணற்ற ஆடியோ/வீடியோ உரைகளுடன் சேர்த்து, உலகம் முழுவதும் உள்ள YSS/SRF உறுப்பினர்களின் அன்பான பெருமதிப்பையும் ஆழ்ந்த நன்றியையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. ஓர் அன்பர் எழுதினார்: “உங்களது நகைச்சுவை, உங்களது வெளிப்படையான ஞானம், உங்களது நடைமுறைத்தன்மை, உங்களது கீழ்ப்படிதல் மற்றும் எம் குருவை போற்றும் உங்கள் உதாரணம், என்னை நம்பிக்கையுடனும், நான் நேசிக்கப்படுகிறேன் என்ற அறிதலுடனும் என்னை நிறைத்துள்ளன.” என்சினிடஸ் கோயில், ஞாயிறு பள்ளிக் குழந்தைகளின் சமீபத்திய ஓர் அட்டைக்குறிப்பு கூறியது: “இறைவனின் ஒளியில் வாழ எங்களுக்கு உதவுவதற்கு நீங்கள் நிறைய செய்கிறீர்கள். அன்னையர் தின வாழ்த்துகள் மற்றும் அற்புதமாக இருப்பதைத் தொடருங்கள்!”

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் சன்னியாசிகள், உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த சிறப்பு ஆண்டு விழாவில் ஸ்ரீ மிருணாளினி மாதாவிற்கு மகிழ்ச்சியான வணக்கத்தையும் எங்கள் இதயங்களின் ஏகோபித்த நன்றியையும் அன்பையும் அளிக்கிறோம்.

இதைப் பகிர