ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளுடன் பிரதமர் சந்திப்பு

April 26, 2016

2016 மார்ச் 4 அன்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் பொதுச் செயலாளர் ஸ்வாமி ஸ்மரனானந்தா அவர்களைச் சந்தித்தார்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஸ்வாமி ஸ்மரனானந்தாவுடன், இரண்டு மூத்த சன்னியாசிகளான ஸ்வாமி நித்யானந்தா, ஸ்வாமி ஈஸ்வரானந்தா (ஒய் எஸ் எஸ் இயக்குனர்கள் குழு உறுப்பினர்கள்) ஆகியோரும் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சியின் போது ஸ்ரீ பூபேந்தர் யாதவ் (நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்) உடனிருந்தார்.

இந்தியாவில் 1917-இல் தொடங்கிய பரமஹம்ஸ யோகானந்தருடைய பணியையும்; இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் யோகம் பற்றிய ஆழமான புரிதலைக் கொணர்வதில் அவரது முன்னோடியான பங்கையும் குறித்து வரப்போகும் நூற்றாண்டு விழா பற்றிய செய்திகளை பிரதமர் மோடியுடன் சன்னியாசிகள் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் தலைவி ஸ்ரீ மிருணாளினி மாதாவிடமிருந்து ஒரு கடிதத்தையும் பிரதமரிடம் வழங்கினர், அதில் அவர் தற்போது ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச யோகா தினத்தை நிறுவுவதில் பிரதமரின் பங்கைக் குறித்த தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார்.

ஒய்எஸ்எஸ் சன்னியாசி நரேந்திர மோடிக்கு பகவான் கிருஷ்ணரின் படத்தைப் பரிசாகக் கொடுத்தனர்
இடமிருந்து வலம்: ஸ்வாமி ஸ்மரணானந்தா, இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, ஸ்வாமி நித்யானந்தா, ஸ்வாமி ஈஸ்வரானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பூபேந்தர் யாதவ்.

பிரதமர் மோடி செப்டம்பர் 2014-இல் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்திற்கான யோசனையை முன்மொழிந்து கூறினார்: “யோகம் இந்தியாவின் புராதன பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற கொடை. இது மனம் மற்றும் உடல்; சிந்தனை மற்றும் செயல்; கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றம்; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கம்; ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை ஆகியவற்றின் ஐக்கியத்தை உள்ளடக்கியது.” அவரது முன்மொழிவைத் தொடர்ந்து, ஐ.நா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. ஒரு சாதனையாக 175 நாடுகள் இந்த முயற்சிக்கு இணை-ஆதரவை வழங்கின — ஐ.நா அமைப்பின் வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள்.

ஸ்ரீ மிருணாளினி மாதா பிரதமருக்கு எழுதிய கடிதம்

ஸ்ரீ மிருணாளினி மாதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

“யோகம் மற்றும் இந்திய ஆன்மீகத்தைத் தீவிரமாகப் பயிற்சிசெய்பவராக நீங்கள், ஆன்மீக இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதத்தின் ஆசிரியரான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை ஏற்கனவே அறிந்திருக்கலாம். இறைவனின் நேரடி தனிப்பட்ட அனுபவத்தை அடைவதற்காக இந்தியாவின் புராதன யோக தியான விஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு அவர் மேற்கில் அதிக நேரத்தைச் செலவிட்டாலும், பரமஹம்ஸர் எப்போதும் தனது இதயத்தில் இந்தியாவின் மீது ஆழ்ந்த அன்பைப் போற்றி வளர்த்தார். மேலும் “என் இந்தியா” என்ற தன் கவிதையின் சொற்களைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே தனது உடலை நீத்தார். அவரது குறிக்கோள்களில் ஒன்று, கிழக்கு மற்றும் மேற்கின் இடையே ஒற்றுமையை மேம்படுத்துவதாகும், மேலும் பல ஆண்டுகளாக பல சமயங்களின் சாதகர்கள் அவரது உலகளாவிய செய்திக்கு ஈர்க்கப்பட்டனர். ஒரே இறைவனைப் பற்றிய மனிதகுலத்தின் நேரடியான அனுபூதியின் அடிப்படையில் உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவிபுரிந்து, யோகத்தின் செய்தி ஒரு நாள் உலகையே சூழும் என்று அவர் முன்கணித்தார். ஆகவே, சர்வதேச யோக தினத்தை நிறுவுவதற்கு நீங்கள் முன்மொழிந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், அது பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாக மிகக் குறுகிய காலத்திற்குள் சாதனை படைத்த எண்ணிக்கையில் நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2015 ஜூன் 21 அன்று, முதல் சர்வதேச யோகா தினத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரிய குழுக்களாக ஒன்றுகூடி பயிற்சி செய்ததைக் கவனித்தது ஊக்கமளித்தது. இந்த முக்கியமான வருடாந்திர நிகழ்வில் பங்கேற்பது காலப்போக்கில் மட்டுமே வளர்ந்து, படிப்படியாக நாகரிகத்தின் உணர்வுநிலையை பெருமளவில் மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

“யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப் சார்பாக, இந்தியாவின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக நீங்கள் செய்யும் பணியில் இறைவன் உங்களை வழிநடத்தி ஆசீர்வதிக்க வேண்டும் என்று எனது அன்பான நல்வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் உங்களுக்கு அனுப்புகிறேன்.”

ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள், சமஸ்கிருதம் மற்றும் குஜராத்தி ஆகிய இரு மொழிகளிலும் பரமஹம்ஸ யோகானந்தருடைய ஒரு யோகியின் சுயசரிதம் மொழிபெயர்ப்புகளையும்; யோகானந்தருடைய பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையான காட் டாக்ஸ் வித் அர்ஜுனா, பகவான் கிருஷ்ணர் தியான நிலையில் இருக்கும் சட்டமிடப்பட்ட ஒரு படம், அத்துடன் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கான நன்கொடை ஆகியவற்றை பிரதம மந்திரியிடம் வழங்கினர்.

இதைப் பகிர