2018 ஜன்மாஷ்டமிக்கான ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரியின் செய்தி

20 ஆகஸ்ட், 2018

அன்பரே,

அன்புக்குரிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினமான ஜன்மாஷ்டமி, அவரது உன்னத வாழ்வின் ஒளி மற்றும் மகிமையால் ஈர்க்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் காலமாக இருக்கிறது. நீதிநெறிகளை (தர்மம்) மீட்டெடுப்பவராக, இறைவனால் அனுப்பப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் இறைவனின் அன்பு மற்றும் ஆனந்தத்தின் வடிவமாக நம் இதயங்களில் வாழ்கிறார். பிருந்தாவனின் கோபியர்களும் கோபர்களும் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இன்னிசையால் தவிர்க்கவே முடியாமல் ஈர்க்கப்பட்டதைப் போல, அவரது சாசுவத இருப்பின் விண்ணுலக அற்புதம், பகவத் கீதையின் மூலம் இன்றளவும் நம்மிடம் பேசும், அர்ஜுனனுக்கு அவர் தெரிவித்த காலத்தால் அழியாத உண்மைகளால், நம் ஆன்மாக்களை வழிநடத்தி என்றும் இறைவனை நோக்கியே அழைத்துச் செல்லட்டும்.

பல பிறவிகளாக, எப்போதும் மாறிவரும் இருமை சாம்ராஜியத்தில் அங்கு அடைய முடியாத மகிழ்ச்சி மற்றும் நிறைவிற்காக முயற்சித்துள்ளோம்; ஆனால், மகிழ்ச்சியும், துக்கமும், ஆதாயமும் இழப்பும் என மாறி மாறி வரும் மாயையின் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு, வாழ்க்கையின் மேற்பரப்பில் நாம் வாழ வேண்டும் என்று இறைவன் உத்தேசிக்கவில்லை. நம் ஆன்மாவின் தீவிர அமைதி மற்றும் தெய்வத்தன்மையைக் கண்டறிய, நாம் நம் இருப்புக்குள் ஆழந்து மூழ்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அவன் கிருஷ்ணர் மூலம் அர்ஜுனனை வழிநடத்தியது போல், உங்கள் உண்மையான இயல்பை உணர அவன் உங்களுக்கு உதவுவான்.

அந்த பயணம் சுய விழிப்புணர்வை வளர்ப்பதில் தொடங்குகிறது. உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், “நான் எனது பழக்கவழக்கங்கள், புலன் ஆசைகள் மற்றும் அகந்தையின் விருப்பு வெறுப்புகளைப் பின்பற்றுகிறேனா? அல்லது ஆன்மாவின்  விவேகத்தால் வழிநடத்தப்படுவதற்கு நான் உணர்வுபூர்வமாக முயற்சி செய்கிறேனா? உங்கள் வாழ்க்கையையும் தீர்மானங்களையும் பொறுப்பேற்க நீங்கள் உணரக்கூடியதை விட அதிக ஆற்றல் உங்களுக்குள் உள்ளது. அர்ஜுனனுக்கு பலவீனமான தருணங்கள் இருந்தபோது, அவனுடைய உண்மையான, வீரம் மிக்க சுயத்தையும், மாயைக்கு எதிரான போரில் ஒரு தெய்வீகப் போர்வீரனாக கைவிடக்கூடாத அவனது கடமையையும் கிருஷ்ணர் அவனுக்கு நினைவுபடுத்தினார். நீங்களும் கூட உங்கள் குருதேவர் மற்றும் உங்கள் ஆன்மாவின் ஞான வழிகாட்டுதலைப் பின்பற்றினால், அமைதியையும் மகிழ்ச்சியான சுதந்திர உணர்வையும் மேலும் அதிகமாக உணர்வீர்கள்.

அமைதியின்மையை உருவாக்கும் எண்ணங்களும் செயல்களும் நம்மைக் கட்டுண்டு இருக்கச் செய்கின்றன; அமைதிக்கான எண்ணங்களும் செயல்பாடுகளும் நம்மை விடுவிக்கும். நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் கூறியது போல், “அமைதி ஆன்மாவிலிருந்து வெளிப்படுகிறது, அது தான் உண்மையான மகிழ்ச்சி வெளிப்படும் புனிதமான உள் சூழல்.”

குருதேவர் அருளிய தியான முறைகளை விசுவாசத்துடனும் பக்தியுடனும் பயிற்சி செய்வதன்  மூலம் இறைவன் இருப்பின் முழு அனுபவமும் கிடைக்கும் என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கற்பித்தார். உடல் மற்றும் மனதின் அமைதியின்மை அடங்கும் போது, அனைத்து ஆனந்தத்திற்கும், அனைத்து அன்புக்கும், அனைத்து சாதிப்பதற்கான ஆற்றலுக்கும் ஆதாரமாக இருப்பவனை உங்கள் இதயத்திலும் ஆன்மாவிலும் உணர்வீர்கள். இறைவனில் ஊன்றிய நீங்கள், கணிக்க முடியாத உலகத்தில் ஒரு சிறு மகிழ்ச்சிக்காக இனி கெஞ்ச வேண்டியதில்லை. உங்கள் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மேம்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தும். மனித உணர்வுநிலையை இறை-உணர்வுநிலையாக மாற்றுவதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது, ஆனால் குருதேவர் நமக்கு உறுதியளித்துள்ளார்: “இறை ஐக்கியத்தை நாடுவதற்கு  செலவழித்த ஆழ்ந்த தியானத்தின் ஒவ்வொரு கணமும், மனதின் சமநிலைக்கான பயிற்சி மற்றும் செயல்களின் பலனுக்கான விருப்பத்தை துறக்கும் பயிற்சிக்கு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் – துக்கத்தை நீக்கி, அமைதி மற்றும் ஆனந்தத்தை நிறுவுதல், மற்றும் தீர்க்கமான செயல்களில் இறைவனின் வழிகாட்டும் ஞானத்துடன் அதிக இணக்கத்துடன் இருப்பதன் மூலம், கர்மவினையை மட்டுப்படுத்தல் மற்றும் பிழையைக் குறைத்தல், ஆகிய அதன் நல் விளைவைக் கொண்டுவருகிறது.

கிருஷ்ணர் அர்ஜுனனை வெற்றிக்கு வழிநடத்தியது போல், ஆன்ம-அனுபூதியை நோக்கிய உங்கள் பயணத்தை அவர் ஆசீர்வதிக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

சுவாமி சிதானந்த கிரி

காப்புரிமை 2018 செல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப். அனைத்து உரிமைகளும் பிரத்தியேகமானவை.

இதைப் பகிர