2020 ஜென்மாஷ்டமிக்கான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரியின் செய்தி

27 ஜூலை, 2020

ஜென்மாஷ்டமி 2020

அன்பர்களே,

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான பக்தர்களுடன் நாமும் இணைந்திருக்கும் ஜென்மாஷ்டமியின் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். தெய்வீக நீதிநெறியை மீட்டெடுப்பவராகவும், இறைவனின் அன்பு மற்றும் அருளின் தூதராகவும், மாயையின் இருளுடனான போரில் ஆன்மாக்களை வழிநடத்த பகவான் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். நம் காலத்திலும் கூட, உலகிற்கு இறைவனின் குணப்படுத்தும் தொடர்பு தேவைப்படுகிறது; கிருஷ்ணரின் வாழ்க்கையின் புனிதம் மற்றும் பிரகாசத்தைப் பற்றி ஆழ்ந்து தியானிப்பதன் மூலம், அவருடைய நம்பிக்கை எனும் அருமருந்தையும், மற்றும் இறை அன்பு உங்களை எப்போதும் சூழ்ந்திருக்கும் என்ற உறுதியையும் கொண்டு வரும் அவரது சாசுவத இருப்பை நீங்கள் உணரவேண்டும், என்று நான் பிரார்த்திக்கிறேன்

இறைவன் நம்மைத் தம்மிடம் ஈர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் அந்த மயக்கும், தவிர்க்கமுடியாத, தெய்வீக அன்பை ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் அற்புதமாக எடுத்துக்காட்டுகிறார். ஆனால் பொருள்சார் உலகம் மற்றும் பழக்கவழக்கங்களின் வெளிப்புற இழுப்பு வலுவானது, மேலும் மாயையின் தளைகளிலிருந்து விடுபட வலிமையும் உறுதியும் தேவை. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனன் தயங்கிய போதிலும், கிருஷ்ணர் அவனுடைய உண்மையான வீர இயல்பை அவனில் எழுப்பினார் – நாம் விரும்பினால் அவர் அதையே நமக்கும் செய்வார். அகத்திலோ அல்லது புறத்திலோ, சவாலான நேரங்கள், நம்மை அதைரியப் படுத்துவதற்காக அல்ல, மாறாக நமக்குள் இருக்கும் உன்னதமான, துணிவான ஆன்மீக வெற்றியாளரை வெளிக்கொணரவே வரும். அந்த வாய்ப்புகளை நாம் நன்கு பயன்படுத்தினால், அவை நம் சொந்த வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாகவும், நமது மனித குடும்பத்தின் உணர்வுநிலையை உயர்த்துவதற்கான பங்களிப்பாகவும் இருக்க முடியும். அந்த மாற்றத்தில் பங்கேற்கும் பொறுப்பும் சிறப்புரிமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உதவியது போல், ஆன்மாவிற்கும் அகந்தைக்கும் இடையே உள்ள குருக்ஷேத்திர போரில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் உதவ முடியும். பகவத் கீதையில் வெளிப்படுத்தப்பட்ட அவரது காலத்தால் அழியாத ஞானம் என்னவென்றால், ஆழ்ந்த தியானத்தின் மூலம் இறைவனைத் தொடர்புகொண்டு, இறைவனுக்குப் பிரசாதமாக நமது கடமைகளைச் செய்வதை விட ஆன்ம அனுபூதிக்கான சிறந்த வழி எதுவுமில்லை என்பது தான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பகவான் கிருஷ்ணரால் கற்பிக்கப்பட்ட அதே முக்தி அளிக்கும் கிரியா யோக விஞ்ஞானத்தை, நமது குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரிடமிருந்து நாம் பெற்றிருப்பது எவ்வளவு பாக்கியம். பரம்பொருளில் கிருஷ்ணருடன் ஒன்றான மஹாவதார் பாபாஜி, அந்த புனித விஞ்ஞானத்தை மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு வரவும், இந்த நவீன யுகத்திற்கான சிறப்பு பணியாக உலகெங்கிலும் பரப்பவும் பரமஹம்ஸரைத் தேர்ந்தெடுத்தார். இந்த ஆண்டு நமது குருதேவர் மேற்கத்திய நாடுகளுக்கு வருகை தந்து விலை மதிப்பற்ற பரிசை கொண்டு வந்த நூற்றாண்டு தினத்தை ஆழ்ந்த நன்றியுடன் கொண்டாடுகிறோம். இந்த பாதையின் பக்தனாக, தெய்வீக இலக்கிற்கான வழி உங்கள் முன் உள்ளது; இந்த மகான்கள் அருளிய போதனைகள் மற்றும் உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் வெற்றி உறுதிசெய்யப்படுகிறது.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர