சுவாமி சிதானந்த கிரியின் ஃபானி சூறாவளி செய்தி

14 மே, 2019

பூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட – ஒரிசாவில் ஃபானி புயல் ஏற்படுத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் என் இதயம் பரிவு கொள்கிறது மற்றும் குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள அனைத்து சன்னியாசிகள் மற்றும் சன்னியாசினிகளைப் போலவே பாதிக்கப்பட்டவர்களுக்காக நானும் ஆழ்ந்து பிரார்த்தனை செய்கிறேன்.

குருதேவருக்கு பூரியுடன் ஒரு சிறப்புத் தொடர்பு இருந்தது, ஏனெனில் அங்கு அவர் தனது வணக்கத்திற்குரிய குரு சுவாமி ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியிடம் பயிற்சி பெறுவதில் அதிக நேரம் செலவிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
துன்பப்படும் அனைவருக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உதவுபவர்களுக்கும், நிச்சயமாக, இந்த இரண்டு மகத்தான அவதாரங்களும் தங்கள் சர்வ ஞான உணர்வுநிலையில் தங்கள் அருளாசிகளை அனுப்புகிறார்கள். மேலும் அவர்கள், யோகதா சத்சங்க சொஸைடி நிவாரணப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்பதிலும், ஒய் எஸ் எஸ் மற்றும் எஸ் ஆர் எஃப் உறுப்பினர்கள் பூரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவைப்படும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதிலும் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். இது அவர்களுக்கு மிகவும் கடினமான நேரம் என்றாலும், இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அக்கறையுள்ள ஆன்மாக்கள் அவர்களுக்காக இரக்கம் கொள்கிறார்கள் மற்றும் இறைவனின் உதவியை நாடுகின்றனர் என்பதை அறிவதன் மூலம் அவர்களின் சுமைகள் குறைக்கப்படட்டும். துன்பப்படுபவர்களை வலுப்படுத்தவும், மீட்பு காலத்திற்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்படியும் மற்றும் குறிப்பாக அவனது அனைத்து-குணப்படுத்தும், உறுதியளிக்கும் அன்பின் பாதுகாப்பில் அவர்களை அரவணைக்கும்படியும் இறைவனை வேண்டுகிறோம்.

நமது வெளிப்புற சூழ்நிலைகள் எதுவாக இருப்பினும், இந்த மாயையின் சாம்ராஜ்யத்தில் உள்ள அனைத்து வாழ்க்கைப் புயல்களிலிருந்தும் காக்கும் நமது பாதுகாப்பான புகலிடமாக இறைவன் இருக்கிறான் என்று குருதேவர் நமக்குக் கற்பிக்கிறார். விசுவாசத்துடனும் பக்தியுடனும் நாம் அவனிடம் திரும்பும்போது, நாம் இருளிலிருந்து ஒளியை நோக்கித் திரும்புகிறோம், நமது விருப்பத்திற்கு சக்தியூட்டுகிறோம், மேலும் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிய பேரண்ட சக்தியுடன் அதை இணைக்கிறோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் தன் பிரதி பிம்பத்தில் படைத்து, நம் ஆன்மாக்களுக்கு அவனுடைய படைப்பு ஆற்றல் மற்றும் அனைத்து குணங்களையும் அளித்தார். நாம் ஒவ்வொருவரும் ஒரு வெற்றிகரமான ஆன்மீக வெற்றியாளராக இருக்க சாத்தியம் உள்ளது என்ற உண்மையை நாம் நினைவில் கொண்டால், மாயை நமக்கு என்ன தடைகளை ஏற்படுத்தினாலும், எதுவும் நம்மை அச்சுறுத்த முடியாது. நாம் இறைவனை உறுதியாகப் பற்றிக்கொண்டு, அவனுடைய தெய்வீக கொடைகளைப் பயன்படுத்தும்போது, அவனுடைய சக்தி நம் முயற்சிகளை வலுப்படுத்தும். மற்றவர்களின் துன்பங்களுக்கு அனுதாபத்துடன் நாம் பிரார்த்திக்கும் போது, நம் சொந்த தினசரி கடமைகளின் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு அப்பால், மகான்களின் உலகளாவிய அன்பு மற்றும் இரக்கத்தின் உயர் உணர்வுநிலைக்கு நாம் உயர்த்தப்படுகிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், இறைவனின் அன்பு நம்மில் பாய்வதற்கு நம் இதயங்கள் விரிவடைந்து, உலகில் அதிக கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன.

பலரின் ஒன்றுபட்ட பிரார்த்தனைகள் மற்றும் தொடர்ச்சியான சேவைப் பணிகளால் எழுப்பப்படும் சாசுவத இறை இருப்பானது, வரும் நாட்களில் மற்றும் மாதங்களில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் தேவையுள்ள அனைவருக்கும் ஊக்கத்தையும் உதவியையும் அளிக்கும் உணரத்தக்க சக்தியாக இருக்கட்டும்.

 

இறைவன் மற்றும் குருதேவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்,
சுவாமி சிதானந்த கிரி

இதைப் பகிர