சுவாமி சிதானந்த கிரியிடமிருந்து ஒரு புத்தண்டு வாழ்த்து செய்தி 2021

1 ஜனவரி, 2021

அன்புக்குரியவர்களே,

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் எல்லோரும், இந்த புத்தாண்டு உங்களுக்கும் நமது ஆன்மீக குடும்பத்தை சேர்ந்த அனைத்து நண்பர்களுக்கும், மகிழ்ச்சியும் மனநிறைவும் மிகுந்ததாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறோம் – நாங்கள் உங்களை மனமார வாழ்த்தி உங்களது நம்பிக்கை மற்றும் மனஉறுதியாலும், இறைவனின் உதவியாலும், நீங்கள் நெஞ்சார நேசிக்கும் உங்களது லட்சியங்களை அடைய வேண்டும் என்று பிராத்திக்கின்றோம். அதே சமயம் விடுமுறைக்காலங்களிலும் ஆண்டு முழுவதும் நீங்கள் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் வாழ்த்து செய்திகள் மற்றும் பரிசுப்பொருட்களுக்கும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன். உங்களது நட்பையும் ஆதரவையும் நானும் பிற சன்யாசிகள் மற்றும் பிற சன்யாசினிகளும் மிகவும் மதிக்கிறோம். குருதேவரின் கொள்கைகளை பல்வேறுவிதமாக நீங்கள் உங்களது வாழ்க்கையில் கடைபிடிப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்தகாலம் நிச்சயமாக உலக மக்கள் அனைவருக்குமே, சவால் நிறைந்ததாக இருந்தது. ஆயினும் இந்தத் துன்பங்களிலிருந்து ஓர் ஆன்மீகப்பாடம் தெளிவானது – இந்தப் பாதையை பின்பற்றுபவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே புரிந்து கொண்டிருப்பார்கள்: இப்பூவுலகில் உள்ள முரண்பாடுகளை நிரந்திரமாக குணப்படுத்துவது, புறத் தீர்வுகளால் மட்டும் சாத்தியமாகாது. அகத்தே இறைவனுடன் இசைந்திருப்பதால் மட்டுமே சாத்தியமாகும். உண்மையின் அழியாத சட்டங்களுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்பை நினைவூட்டும் விதமாக கடந்த ஆண்டின் நிகழ்வுகள், நம் குருநாதரின் ஆன்மாவை விழிப்புற செய்யும் கிரியா யோக தியானத்தை உலகம் முழுவதும் பரப்பும் ஆன்மீகப் பணியின் நூற்றாண்டு விழாவுடன் ஒன்றிணைந்தது “தெய்வீக நேரம்” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. வரும் நாட்களில் நம்மால் எந்த வகையில் எல்லாம் முடியுமோ அந்த வகையில் எல்லாம் உலகளாவிய ஆன்மீகத்தை பரப்புவதன் மூலம் உலக நாகரீகத்தில் ஒத்திசைவும் ஒற்றுமையும் வளர்வதை ஊக்குவிப்போம்.
புத்தாண்டில் பிரவேசிக்கும் இந்த நேரத்தில் பரமஹம்ஸாஜி இந்த உலகுக்கு அருளிய ஆன்மீக விழிப்புணர்வு ஊட்டும் தியான உத்திகளையும் போதனைகளையும் முழுமையாக நீங்கள் உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது பிராத்தனை. இது உங்கள் வாழ்க்கையின் புதியதொரு தொடக்கமாக இருக்கட்டும்; ஆழமாக தியானம் செய்ய வேண்டும் என்ற உற்சாகமும், முயற்சிகளும், மனித குடும்பத்திற்கு தேவையான ஒத்திசைவு, அறிவாற்றல், மற்றும் தெய்வீக அன்பை அளிக்கட்டும்.

இறைவன் நமது புதிய தொடக்கத்திற்கு மிகவும் தேவையான தெய்வீக பரிசுகளை தந்துள்ளான்: அவை நமது குறிக்கோள்களை நிறைவேற்ற உதவும் சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றல், ஊக்கம் மிக்க மனஉறுதி ஆகியவை ஆகும். சற்று நேரம் அமைதியாக சுய பரிசோதனை செய்து உங்களது நற்செயல்கள், நீங்கள் கற்றப் பாடங்கள், பெற்ற வெற்றிகள், துணிவோடு சவால்களை எதிர் கொண்டபோது கிட்டிய ஆன்மீக அருள் ஆகிய நினைவுகளை அசைபோடுவதன் மூலம் உங்களை உரமேற்றிக் கொள்ளுங்கள். உங்களை கட்டுப்படுத்தும் உங்களைப் பற்றிய பிறர் பற்றிய கடந்தகால தவறுகள் மற்றும் எதிர்மறை
எண்ணங்களின் “சுமைகளை” உங்களது உணர்வுநிலையில் இருந்து உதரித் தள்ளி தூய்மைப்படுத்துங்கள். இப்போது காத்திருக்கும் புதிய வாய்ப்புகளில் கவனம் செலுத்துங்கள் – உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்த விரும்பும் நேர்மறைான மாற்றங்கள் மீது. உங்களது கவலைகளையும் சுய சந்தேகங்களையும் விரட்டியடிக்கவல்ல உற்சாமூட்டும் புதிய நம்பிக்கைத் தென்றல் காற்றை உணர்ந்து அனுபவியுங்கள். உங்களது முயற்சிகளை, சக்திவாய்ந்த மனவுறுதி மற்றும் நம்பிக்கையால் நிரப்புங்கள், நீங்கள் உங்களது லட்சியத்தை நிச்சயம் அடைவீர்கள் என சபதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்

நமது குருநாதர் தன்னோடு இருந்த சீடர்கள் “முடியாது” என்று சொல்லுவதை ஒருபோதும் அனுமதித்தது இல்லலை. “முடியாது” என்ற அந்த ஓட்டைத் தகர்த்து “முடியும்” என்ற கட்டற்ற காற்றில் பறக்க விடுங்கள். அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. இறைவனுக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களது உதவி மற்றும் அன்பில் நீங்கள் ஒருபோதும் தோற்க முடியாது. “புத்தாண்டின் நுழைவாயிலில் புதிய நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்” என குருதேவர் நமக்கு உறுதி அளித்துள்ளார். “நீங்கள் இறைவனின் குழந்தை என்பதை நினைவில் கொள்ளுங்கள். . . . அவர் என்றென்றைக்கும் உங்கள் மீது அன்பு கொண்டிருக்கிறார். அதை சிந்தியுங்கள். அதை தெரிந்து கொள்ளுங்கள். திடீரென ஒருநாள் நீங்கள் அழிவின்றி இறைவனில் வாழ்ந்துக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்”.

இறைவன் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் இந்தப் புத்தாண்டிலும் என்றன்றைக்கும் ஆசீர்வதிப்பாராக.

சுவாமி சிதானந்த கிரி

பதிப்புரிமை © 2020 SRF அனைத்து உரிமைகளும் காப்பீடு செயப்பட்டது

இதைப் பகிர