இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் YSS/SRF இன் பீடத்தில் உள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தருடைய பணிகளின் இன்றியமையாத இலக்குகளில் ஒன்று, “பகவான் கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட ஆதி யோகத்திற்கும் இயேசு கிறிஸ்துவினால் போதிக்கப்பட்ட ஆதி கிறிஸ்துவத்திற்கும் உள்ள முழுமையான இணக்கத்தையும் அடிப்படையான ஒற்றுமையையும் வெளிப்படுத்துதல்; மற்றும் சத்தியத்தின் இந்த கொள்கைகளே எல்லா உண்மையான சமயங்களுக்கும் பொதுவான விஞ்ஞானப் பூர்வமான அடிப்படை என்பதைக் காண்பித்தல் .”

இயேசு விசுவாசம், அன்பு, மன்னிப்பு ஆகியவை கொண்ட எளிய தத்துவத்தைப் பொதுமக்களுக்கு அருளினார். எல்லாக் காலத்திற்குமான ஒழுக்கநெறிகள் நிறைந்த உவமைகளுடன் அவர் அடிக்கடி உரையற்றினார். ஆனால் அவரது நெருங்கிய சீடர்களுக்கு அவர் ஆழமான உண்மைகளை, பண்டைய யோகத் தத்துவத்தின் ஆழமான பரதத்துவ கோட்பாடுகளுடன் பொருந்தக்கூடிய உண்மைகளைக் கற்பித்தார்.

“ஏன் அவர்களிடம் உவமைகளுடன் பேசுகிறீர்கள்?” என்று அவருடைய சீடர்கள் இயேசுவைக் கேட்டபோது, அவர் பதிலளித்தார், “ஏனென்றால் பரலோக ராஜ்யத்தின் மர்மங்களை அறிய உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்கு அருளப்படவில்லை — அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும் உணர்ந்து கொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியால் நான் உவமைகளில் பேசுகிறேன் ” (மத்தேயு 13:10, 11, 13 பைபிள்).

இயேசுவின் மூல போதனைகள் பற்றிய முழுப் புரிதல் — அவர் தனது சீடர்களுக்கு யோகத் தியானத்தின் மறைபொருளான உத்திகளை வழங்கினார் என்ற உண்மை உட்பட –- நற்செய்திகள் பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஆழமான விளக்கவுரையில் வெளிப்படுத்தப்படுகிறது:  The Second Coming of Christ: The Resurrection of the Christ Within You. அந்தப் படைப்பின் முன்னுரையில்  யோகானந்தர் பின்வருமாறு எழுதினார்:

“இயேசு கிறிஸ்து இன்று மிகவும் உயிரோடும் உயிர்ப்புடனும் இருக்கிறார். பரம்பொருளில், மற்றும், எப்போதாவது ஒரு உடல் வடிவமும் எடுத்து, அவர் உலகின் மீட்பிற்காக மக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் பணி செய்து கொண்டிருக்கிறார். இயேசு தம்முடைய அனைத்தையும் அரவணைக்கும் அன்புடன், பரலோகத்தில் தனக்குள்ளே பேரானந்த உணர்வுநிலையை அனுபவிப்பதில் மட்டும் திருப்தியடைவதில்லை. அவர் மனிதகுலத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டு, இறைவனுடய எல்லையற்ற ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான தெய்வீக சுதந்திரத்தை அடையும் வழிவகைகளை தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்க விரும்புகிறார்.

அவர் ஏமாற்றம் அடைந்தார் ஏனெனில் அவரது பெயரில் நிறுவப்பட்ட தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் பல, பெரும்பாலும் வளமான மற்றும் சக்திவாய்ந்தவையாக உள்ளன, ஆனால் அவர் வலியுறுத்திய இறைக் கூட்டுறவு – இறைவனுடனான உண்மையான தொடர்பு — எங்கே? முதன் முதலாக கோவில்களை மனித ஆன்மாக்களில் நிறுவ வேண்டும் என்று இயேசு விரும்பினார், பின்னர் வெளிப்புறமாக வழிபாட்டுத் தலங்களில் நிறுவப்பட வேண்டும். மாறாக, தேவாலயத்துவத்தில் போதிக்கப்படும் பரந்த சபைக்கூட்டங்களுடன் கூடிய எண்ணற்ற பெரிய கட்டிடங்கள் உள்ளன, ஆனால் ஒரு சில ஆன்மாக்களே ஆழமான பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் உண்மையில் கிறிஸ்துவுடன் தொடர்பில் உள்ளனர்.

“கிறிஸ்துவும் கிருஷ்ணரும் எடுத்துரைத்த இறை-கூட்டுறவிற்கான மூல போதனைகளை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலம் ஆன்மாக்களின் கோவில்களில் இறைவனை மீண்டும் எழுந்தருளச் செய்வதற்காகவே நான் மகாவதார பாபாஜியால் மேலை நாடுகளுக்கு அனுப்பப்பட்டேன்….

“பாபாஜி கிறிஸ்துவுடன் என்றும் தொடர்பில் உள்ளார்; அவர்களிருவரும் சேர்ந்து மீட்பளிக்கும் எண்ண அதிர்வுகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர். மேலும் இந்த யுகத்திற்கான முக்தியளிக்கும் ஆன்மீக உத்தியையும் திட்டமிட்டுள்ளார்கள்.”

இதைப் பகிர